News
Loading...

அள்ளும் - ராமச்சந்திரன்! - நெட்வொர்க் - 6

‘அள்ளும்’ ராமச்சந்திரன்! - நெட்வொர்க் - 6

சேகர் ரெட்டியின் கைது தமிழக அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. அவருடன் நிழல் மனிதர்களாக வலம்வந்த மணல் ராமச்சந்திரன், சர்வேயர் ரத்தினம் இருவரும் கைது செய்யப்பட்டது பல அரசியல் புள்ளிகளைப் பதற்றமடைய வைத்துள்ளது.

எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராக்கோட்டையை அடுத்துள்ள முத்துப்பட்டினம். தனது அப்பா வைத்திருந்த ரைஸ் மில்லை கவனித்து வந்தார் ராமச்சந்திரன். இந்த நிலையில், தனது உறவினர் ரத்தினத்துடன் இணைந்து மாவட்டம் முழுக்க ஒயின் ஷாப்களை எடுத்து நடத்தினார். அரசே டாஸ்மாக்கை நடத்தவே, மணல் வியாபாரம் பக்கம் கவனம் திருப்பினார்.

தொடக்கத்தில் ராமச்சந்திரன் தி.மு.க-வில் இருந்ததால், புதுக்கோட்டை பெரியண்ணனுக்கு மிக நெருக்கமானார். அதே நேரம் ரத்தினமும் தி.மு.க முக்கியப் புள்ளிகளுடன் தொடர்பை வலுப்படுத்திக்கொண்டார். படிக்காசு, ஆறுமுகச்சாமி ஆகிய இருவரும் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை நடத்திவந்தவர்கள். இவர்களோடு சப் டீலராக இணைந்து திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மணல் குவாரிகள் எடுத்து நடத்தினர் ராமச்சந்திரனும் ரத்தினமும். கூடவே, பொதுப்பணித் துறை மூலம் சாலைகள் போடப் பயன்படும் சிவப்பு கிராவல், செங்கல் சூளை, டயர் விற்பனை, ஹோட்டல் உள்ளிட்ட பிசினஸ்களிலும் கால் பதித்தனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது அமைச்சர் விஜயபாஸ்கருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவருக்கு வேண்டப்பட்ட சேகர் ரெட்டி, பிரேம், ராம மோகன ராவ் ஆகியோரின் நெருக்கமும் இவர்களுக்குக் கை கொடுத்தது. கடந்த 2012-ல் புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக வந்த ஓ.பி.எஸ். நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை புதுக்கோட்டையை அடுத்துள்ள காரியப்பட்டியில் உள்ள விடுதியில் தங்கவைத்து ராமச்சந்திரன் மூலம் பலமான உபசரிப்புகளைச் செய்யவைத்தார் விஜயபாஸ்கர்.

மணல் பிசினஸ் ஆறுமுகச்சாமியிடம் இருந்து பறிக்கப்பட்டபோது, அது சேகர் ரெட்டி, ராமச்சந்திரன், ரத்தினம் வசம் வந்தது. இவர்கள் ‘எஸ்.ஆர்.எஸ் மைன்ஸ்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்க லைசென்ஸ் பெற்றார்கள்.  

பொதுவாக, மணல் ராமச்சந்திரன் தன் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்காக முக்கிய அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் திருமண விழாக்களில் சாப்பாட்டுச் செலவை தானே ஏற்றுக்கொள்வாராம்.  திருப்பதியில் நடைபெற்ற ராம மோகன ராவ் வீட்டு விசேஷத்தில் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி தலைமையில் 60 பவுன் நகையை ராமச்சந்திரன் அன்பளிப்பாக வழங்கினாராம்.

படாடோபம் இல்லாத, அன்பானவராக, பவ்யமாக வலம் வரும் ராமச்சந்திரன் மணல் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை கோயில் திருப்பணிகளுக்குக் கொடுத்துத் தன்னை ஆன்மிகவாதியாகக் காட்டிக்கொள்வார். புதுக்கோட்டை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கும் லட்சங்களை வாரி இறைத்துள்ளார். சொந்த ஊரான முத்துப்பட்டினத்தில் எந்த விழா நடைபெற்றாலும் ராமச்சந்திரன் கொடுக்கும் அன்பளிப்புத் தொகை, மக்களைத் திணறடிக்கும். ஆனால், இவருக்கு நேர் எதிரானவர் ரத்தினம். அடாவடிப் பேர்வழி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் மணல் எடுக்க அரசிடம் அனுமதிகேட்டுப் போன செங்கல்சூளை உரிமையாளர்களை, ரத்தினத்தைப் பாருங்கள் என அதிகாரிகளே சொல்லும் அளவுக்கு அவர்களை ரத்தினம் வளைத்துப்போட்டிருந்தார்.

சேகர் ரெட்டியின் வீட்டில் ரெய்டு நடந்த அன்றே, மணல் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதை முதலில் ராமச்சந்திரன் தரப்பு மறுத்தது. ஆனால், வருமானவரித் துறை இப்போது அவரைக் கைது செய்துள்ளது.

2001-2006 காலகட்டத்தில்  எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயபாஸ்கர், அடுத்த தேர்தலில் சீட் கிடைக்காததால், குவாரி பிசினஸில் கவனம் செலுத்தினார். அப்படித்தான் மணல் ராமச்சந்திரனுடன் நெருக்கம் அதிகமானது. இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் குவாரி தொழிலில் விஜயபாஸ்கர் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பணிகளுக்கு விஜயபாஸ்கருக்கு சொந்தமான ராசி புளு மெட்டல்ஸ், ரெடி மிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்துதான் பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இதனால் அரசின் மொத்தப் பணமும் அப்படியே விஜயபாஸ்கருக்குச் சென்றுவிடுகிறது. சேகர் ரெட்டியோடு இணைந்து ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மெடிக்கல் கல்லூரி நடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது. ராமச்சந்திரனும் வெளிமாநிலங்களில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான பலரும் கைதாகி உள்ள நிலையில், விசாரணை வளையத்தில் விஜயபாஸ்கரும் சிக்குவார் என்கிற பேச்சு புதுக்கோட்டையில் பலமாக  ஒலிக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.