News
Loading...

ஜெ. மரணத்துக்கு மருந்துகள்தான் காரணம்! சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி

ஜெ. மரணத்துக்கு மருந்துகள்தான் காரணம்! சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி

ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தவர்களில், ‘அக்குபஞ்சர்’ டாக்டர் சங்கரும் ஒருவர். சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சங்கரிடம் பேசியதிலிருந்து....

‘‘ஜெயலலிதாவுக்கு நீங்கள் சிகிச்சை அளித்ததாகக் கூறியுள்ளீர்கள். அவருக்கு என்ன பிரச்னை இருந்தது?’’

“கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், இரண்டு மாதங்கள் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்தேன். முதன்முதலில் அவரது மெடிக்கல் ரிக்கார்டுகளைப் பார்த்தபோது, அவரது உடலில் சர்க்கரையின் அளவு 300-க்கு மேல் இருந்தது. ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தது. மூட்டுப் பிரச்னையால் அவர் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக நிறைய ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டதால், அவரது முகத்தில் மூன் ஃபேஸ் சிண்ட்ரோம் (moon face syndrome) என்ற பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதனால், கழுத்துப் பகுதி தசையெல்லாம் தொங்கிப்போய் இருந்தது. தூக்கமின்மை பிரச்னையும் இருந்தது. அதற்கான சிகிச்சைகளைத் தான் ‘அக்குபஞ்சர்’ முறையில் கொடுத்து வந்தேன்.’’

‘‘மூன் ஃபேஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?’’

“ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட corticosteroid மருந்துகளை நுரையீரல் தொடர்பான ஆஸ்துமா, நாட்பட்ட மூச்சுப் பிரச்னை மற்றும் தோல் வியாதிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், ஸ்டீராய்டுகளைப் பொறுத்தவரை அவற்றில் பல தடைசெய்யப்பட்ட மருந்துகள். corticosteroid மாத்திரைகள் அதிக அளவில் எடுத்துக்கொண்டால், இதயம் பாதிப்படையும். குளுகோஸ் அளவு அதிகரித்து இன்சுலின் மருந்தின் செயல்பாட்டை முடக்கி சர்க்கரை நோய்க்கான மருந்துகள் வேலை செய்யாமல் போய்விடும்; கூன் விழும் (buffalo bump); எதிர்ப்பு சக்தி குறையும்; முகத்தின்கீழ் கொழுப்பு சேர்ந்து முகம் வட்டவடிவமாக மாறும். இப்படி மாற்றங்கள் அடைவதைத்தான் மூன் ஃபேஸ் சிண்ட்ரோம் என்பார்கள். ஆனால்,         ஜெயலலிதா ஃபேஸ் சிண்ட்ரோம் என்று பெயர் மாற்றம்செய்யும் அளவுக்கு அவருக்கு அந்த நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது.”

‘‘ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளில் இருந்த ஸ்டீராய்டுகளின் அளவு என்ன?’’

‘‘சாதாரணமாகக் குழந்தைகளுக்கு 0.25 மில்லி கிராம் வரை தருவார்கள். அந்த அளவே தடை செய்யப்பட்டதுதான். எனக்குத் தெரிந்த வரையில் அவருக்கு 600 மில்லி கிராம் வரையிலான ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.’’ 

‘‘நீங்கள் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளித்தீர்கள்?’’

‘‘அவருக்கு மண்ணீரல் வலுவிழந்து இருந்தது. அதுதான் ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கும். அதனை வலுப்படுத்தவே சிகிச்சை கொடுத்தேன். அதன் பலனை அவர், ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தபோதே பார்த்திருக்கலாம். கூடவே, அவரது சர்க்கரை நோய் அளவும் கட்டுக்குள் இருந்தது. கழுத்தின் மேல் பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த சதைகளையும் சரிசெய்தேன். ஜெயலலிதாவுடன் கூடவே இருந்து அவருக்கான மாத்திரைகளை ப்ரிஸ்க்ரைப் செய்யும் டாக்டர் சிவக்குமார்கூட, அவரின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். இதனால், ஜெயலலிதாவேகூட இந்த மாதிரியான மருந்தில்லா மருத்துவச் சிகிச்சைகளைக் கற்றுத்தர பல்கலைக்கழகம் ஒன்றை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தார்.’’ 

‘‘ஜெயலலிதா, அவரது உடல்நலத்தில் எந்தளவுக்கு அக்கறை எடுத்துக்கொண்டார்?’’ 

“சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரிம் மட்டும் அதிகம் சாப்பிடுவார். மற்றபடி, அவரது உடல்நிலை குறித்து மிகுந்த அக்கறையுடன் இருந்தார். சாப்பிடுவதற்கு முன் அவர் ஒரு தைராய்டு மாத்திரை சாப்பிட வேண்டும். அதை மறக்காமல் கேட்டு வாங்கி சாப்பிடுவார்”.

ஜெ. மரணத்துக்கு மருந்துகள்தான் காரணம்! சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி

‘‘பிறகு நீங்கள் ஏன் அவருக்கு சிகிச்சையை நிறுத்தினீர்கள்?’’

“இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு ஒரு சிறு கால இடைவெளிவிட்டு, அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்குவதாக இருந்தது. அதற்காக ஒரு வார காலம் இடைவேளை தேவைப்பட்டது. அதற்குப் பிறகு அழைக்கிறேன் என்றார்கள். ஆனால் அழைப்பு வரவேயில்லை”.

‘‘ஆரோக்கியத்துடன் இருந்தவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு எப்படி ஏற்பட்டிருக்கும்?”

“ஸ்டீராய்டு மாத்திரைகளைக் குறைத்துவிட்டு, திடீரென அதிகரிக்கும்போது சிறுநீரகத்தில் குறைபாடு ஏற்படும். அதனால், சிறுநீரகப் பாதையில் தொற்று, இதயம் பலவீனமடைவது மற்றும் நுரையீரலில் நீர்கோத்துக்கொள்வது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இதுதான் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஸ்டீராய்டு அளவை அதிகப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான், அவரது உடல்நிலையில் திடீரென பெருத்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் கடந்த ஜூன் மாதம் டாக்டர் சிவக்குமாரை சந்தித்தபோது, ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருப்பதாகத்தான் கூறினார். அதன் பிறகு, அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்திருக்கிறது.”

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.