News
Loading...

பன்னீர்செல்வத்துக்கு, அதிமுக MLAக்கள் ஆதரவு உள்ளதா?: மு.க.ஸ்டாலின் கேள்வி

பன்னீர்செல்வத்துக்கு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதா?: மு.க.ஸ்டாலின் கேள்வி

திர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் துணை முதல்- அமைச்சராக இருந்த போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது நான் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றி இருக்கிறேன்.

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா போன்று நமக்கு வேறு எந்த ஒருதலைவரும் கிடைக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். இத்தகைய ஒரு சூழ்நிலை ஏற்பட்டதற்காக உண்மையிலேயே வருந்துகிறேன்.

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இல்லாத நிலை பற்றி பேசுவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது என்று கருதுகிறேன். தி.மு.க.வைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். அல்லது ஜெயலலிதா யாராக இருந்தாலும், அவர்கள் மறைந்த பிறகு அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை நாங்கள் தவிர்த்து வருகிறோம்.

அரசியல் அகராதியில் வெற்றிடம் என்று எதுவும் கிடையாது. ஜனநாயகத்துக்கு எந்த வெற்றிடத்தையும் நிரப்பும் திறன் உண்டு என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த அறிவியல்படி அரசியல் வெற்றிடம் தாமாகவே நிரப்பப்பட்டு விடும்.

மாநிலத்தின் நிர்வாகத்துக்கு தலைமைப்பீடமாக இருப்பது தலைமைச் செயலகம்தான். 300-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர்தான் தலைவராக உள்ளார். எனவே தலைமைச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அவர்களது பணி மூப்பு, திறமை, நேர்மை, தகுதி, அனுபவம், ஒருங்கிணைக்கும் பண்பு போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதுண்டு.

ஆனால் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் வி‌ஷயத்தில் இத்தகைய எந்த அம்சமும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அவற்றை பின்பற்றி அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஏனெனில் அவர் மறைந்த முதல் - அமைச்சரின் செயலாளராக இருந்த ஒரே காரணத்துக்காக அந்த பதவிக்கு தேர்ந்து எடுக்கப் பட்டார்.

ஒருவரது நியமனத்தில் சந்தேகம் ஏற்படும்போது அவரை ஏற்க இயலாது. ஒரு அரசு அதிகாரி, நிர்வாக விதிமுறைகளை மீறி, மிக உயர்ந்த பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார் என்றால், அவர் தங்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடும். ராமமோகன ராவ் தேர்வு வி‌ஷயத்தில் இதுதான் நடந்தது.

தமிழக அரசுக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருந்தனர். என்றாலும் அது நடந்தது வருத்தத்துக்குரியது.

பிரதமர் நரேந்திர மோடியை, முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லியில் சந்தித்து விட்டு வந்த மறுநாள் தலைமைச் செயலாளர் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரிச்சோதனை நடந்தது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்படாமல் இந்த சோதனை நடந்து இருக்குமா?

தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் அறைக்கு அருகே உள்ள தலைமைச் செயலாளர் அறையில் வருமான வரிச் சோதனை நடந்தபோது முதல்-அமைச்சர் ஏன் மவுனமாக இருந்தார்? இந்த சோதனைக்காக பாதுகாப்பு கருதி தலைமைச் செயலகத்தில் மத்திய துணை நிலை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டபோது, அது பற்றி முதல்-அமைச்சருக்கு தெரிவிக்கப்படவில்லையா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கப்பட வேண்டும் இதை கேட்பது அரசியல் ரீதியாக தார்மீக உரிமையாகும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, மத்திய பாரதிய ஜனதா அரசு, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரத்தை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங்கள் அனைத்துக்கும் அத்தகைய அழுத்தத்தை பயன்படுத்தி மத்திய அரசு ஒப்புதல் பெற்றதாக கூறப்படுகிறது.

இரண்டு கட்சிகள் நட்பாக இருப்பதும் அல்லது மாறுபட்ட கொள்கைகளுடன் இருப்பதும் இயற்கையானது. ஆனால் தமிழக மக்களின் நலனுக்கான வி‌ஷயங்களில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்த வி‌ஷயத்தில் அடகு வைத்து விடக்கூடாது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கூட கரூர் அன்புநாதன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோரது வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. அதன் தொடர்ச்சியாக முன்னாள் தலைமைச் செயலாளர் தற்போது வருமான வரித்துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஊழல் தலை விரித்தாடுகிறது. அரசும் ஊழலோடு பிணைந்துள்ளது. அரசு நிர்வாகத்தில் எந்த வெளிப்படையான தன்மையும் இல்லை.

அதனால்தான் இந்த வருமான வரிச்சோதனைகளை நான் வரவேற்கிறேன். இதுபற்றி முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று இதனால்தான் கேட்கிறேன்.

தமிழக அரசை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டதா என்பதை பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்து விட்டு வந்திருக்கும் முதல்- அமைச்சரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.

சசிகலாவை முதல்- அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று சந்தித்துப் பேசுகிறார்கள். இது முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தாங்கள் பதவி ஏற்றபோது எடுத்துக்கொண்ட பிரமாணத்துக்கும், ரகசிய காப்பு உறுதி மொழிக்கும் முற்றிலும் எதிரானது, விதி மீறல் போன்றது.

மேலும் சசிகலா அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் அவரை சந்தித்து அழைப்பு விடுத்தது ஏற்க முடியாததாகும். இதை எப்படி தாங்கிக் கொண்டிருக்க முடியும்?

பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் கவர்னர் இத்தகைய ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அதனால் தான் இதை வலியுறுத்தி நான் கவர்னருக்கு கடிதம் எழுதி அனுப்பினேன்.

சசிகலா தற்போது வசித்து வரும் போயஸ்கார்டன் பங்களாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு பற்றி நான் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன். அந்த கோரிக்கை நியாயமான வருத்தமாகும்.

ஏனெனில் போயஸ்கார்டன் பங்களாவில் 240 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கை காப்பாற்றவும், தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும், உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டிய போலீசார் போயஸ்கார்டனில் ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசின் பணம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே தான் போயஸ்கார்டன் பங்களாவில் இருந்து 240 போலீசாரையும் திரும்பப் பெற வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.

சில அமைச்சர்கள் சசிகலாவை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட்டு கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

ஆனால் முதல்-அமைச்சர் தலைமையிலான அமைச்சரவை என்பது கூட்டுப்பொறுப்புகள் கொண்டது. பன்னீர்செல்வம் முதல்- அமைச்சர் பதவியை ஏற்று சில நாட்களே ஆகிறது.

அதற்குள் முதல்- அமைச்சர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் விலக வேண்டும் என்று சில அமைச்சர்கள் வெளிப்படையாக சொல்லி, தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். இது அரசியல் அமைப்பு சட்ட ரீதியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சருக்கு உரிய பதவி பிரமாணத்தையும், ரகசியக் காப்பு உறுதி மொழியையும் கவர்னர்தான் செய்து வைத்தார். தற்போது அவரை சில அமைச்சர்கள் பதவி விலக சொல்வதன் மூலம், பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா? இல்லையா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர் தலைமையிலான தமிழக அரசு ஸ்திரத்தன்மையுடன் நிலையாக நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் முழு ஆதரவு உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அரசியலமைப்பு கடமை கவர்னருக்கு உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், பாராளுமன்ற ஜனநாயகத்தை கட்டிக்காக்கவும் கவர்னர் இந்த வி‌ஷயத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கக்கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி சொன்னது பற்றி கேட்கிறீர்கள். இந்த வி‌ஷயத்தில் என்னைப் பொறுத்தவரை ஒருவரது திறமைகளை மட்டுமே வைத்து விருதுகள் கொடுப்பது பற்றி தீர்மானிக்கக் கூடாது.

தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில், இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டால், ஜெயலலிதா உயிரோடு இருந்தாலும் தி.மு.க. தான் வெற்றி பெறும். அ.தி.மு.க. அரசு சட்டசபையில் சட்ட திருத்தங்கள் கொண்டு வர பயப்பட்டது. எனவே உள்ளாட் சிகளில் தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதி.

தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படுவது பற்றி சில தகவல்கள் வெளியானது. எங்கள் தலைவர் (கருணாநிதி) உடல்நிலை பற்றி காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெளிவான மற்றும் வெளிப்படையான விளக்கங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அவரது வயோதிகத்தால் சற்று அமைதியான நிலை ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அவரது அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கிறது.

எனவே தி.மு.க. பொதுக்குழு கூடும் தேதி அறிவிக்கப்படும். அது வெளியாகும் வரை பொறுத்திருங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.