News
Loading...

சிக்கிய கஜானா - சென்ட்ரல் செக்!சிக்கிய கஜானா - சென்ட்ரல் செக்!

‘அ.தி.மு.க-வை எஃகு கோட்டையாக வைத்திருந்த, இரும்புப் பெண்மணி ஜெயலலிதா இப்போது இல்லை.’’

‘‘ ‘ஆளும் கட்சியின் புதிய கஜானா! நிழல் ரெட்டி - நிஜ ஜாதகம்’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி எழுயிருந்தோமே. அந்த சேகர் ரெட்டிக்கு இப்போது சிக்கல். சென்னை தியாகராயர் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட எட்டு இடங்களில் வருமானவரித் துறை நடத்திய சோதனையில் 90 கோடி ரூபாய் பணமும் 100 கிலோ தங்கமும் பிடிபட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்.  தமிழகத்தில் புதிய மந்திரிசபை அமைந்து இரண்டாவது நாளே வில்லங்கம் தொடங்கிவிட்டது. பொதுப்பணித் துறையின் பிரபல கான்ட்ராக்டரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவருமான சேகர் ரெட்டி பற்றி விலாவரியாக ஏற்கெனவே எழுதியிருக்கிறோம். சேகர் ரெட்டியின் அலுவலகங்களில் ரெய்டு நடந்திருப்பதும், அங்கு ஏராளமாக பணம் கிடைத்திருப்பதும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி என்ற பெயர் சென்னை தொழிலதிபர்கள் வட்டாரத்தில் பிரபலம். ‘சென்னையைச் சேர்ந்த பிரேம் என்பவர் கொடுத்த தங்கக் கட்டிகளை பணமாக மாற்றித்தர ரெட்டி சகோதரர்கள் சம்மதித்து அதற்கான வேலையில் தீவிரமாக உள்ளனர்’ என்ற தகவல் வருமான வரித்துறையினருக்குக் கிடைக்க... சேகர் ரெட்டியின் வீடுகளில் நுழைந்தனர். இடைவிடாத சோதனையில், ரெட்டி சகோதரர்களின் வீடுகள் மட்டுமல்லாமல், அண்ணா நகரில் உள்ள அலுவலகம் அனைத்தும் சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பிடிபட்ட 90 கோடி ரொக்கப் பணத்தில் 70 கோடிக்கு புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்.’’

‘‘ஓஹோ.’’

‘‘தலைமைச் செயலாளராக இருக்கும் ராமமோகன ராவுக்கு மிகவும் நெருக்கமானவர் சேகர் ரெட்டி. தமிழக அரசின் மிக முக்கியமான கான்ட்ராக்ட்டுகள் இவர் கைகாட்டும் ஆளுக்குத்தான் கிடைக்கும். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைத்து முதல்வர் பதவியை இழந்தார். முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற அன்றே திருப்பதி தேவஸ்தான ட்ரஸ்ட் போர்டு மெம்பராக சேகர் ரெட்டியை நியமிக்கும் கடிதம் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றால் ரெட்டியின் செல்வாக்கை கவனியுங்கள். அப்போது பன்னீர்செல்வம் திருப்பதி போனபோது அங்கே சகல ஏற்பாடுகளையும் செய்து உடன் நின்றவர் சேகர் ரெட்டி. அவர்கள் இருவரும் மொட்டையுடன் நிற்கும் படத்தைதான் கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருந்தோம். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு பெற்ற சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டை கண்டு ஓ.பன்னீர்செல்வமும் அதிர்ந்து போயிருக்கிறார். திருப்பதி கோயிலுக்கு 3-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் போனபோது அவரை எப்போதும் வரவேற்கும் சேகர் ரெட்டி வரவில்லை. என்ன காரணம் என பலரும் மண்டையைக் குடைந்து கொண்டிருந்த நிலையில்தான் நான்கு நாட்கள் இடைவெளியில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.’’

‘‘திடீர் ரெய்டுக்கு என்ன காரணமாம்’’

‘‘சேகர் ரெட்டியின் வீடு மட்டுமல்ல சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான சில இடங்களிலும் சோதனை போடப்பட்டதாக தகவல்கள் கசிகின்றன. இந்த ரெய்டு மூலம் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பு என பலருக்கு சென்ட்ரல் கவர்மென்ட் செக் வைக்க நினைக்கிறதாம். சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய பணம் ஆளும் கட்சியின் பணமாக இருக்குமா? என வருமானவரி துறையினருக்கு சந்தேகம் இருக்கிறது. எது எப்படியோ மத்திய அரசு மூவ் எதை நோக்கிப் போகிறது என்பது தெளிவாகிறது’’ என சொல்லிவிட்டு அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘ஜெயலலிதா மறைவால் அ.தி.மு.க-வுக்கும், ஆட்சிக்கும் இப்போதைக்கு ஆபத்து இல்லையாம். அப்போலோவில் ஜெயலலிதா இருந்த நிலையிலேயே ஜெயலலிதா இதுவரையில் எதிர்த்த மத்திய அரசின் திட்டங்கள் அ.தி.மு.க. ஆதரவோடு அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், அ.தி.மு.க - பி.ஜே.பி-யின் மறைமுகக் கூட்டணிதான் என நாம் முன்பே எழுதி இருக்கிறோம். அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்க்க வந்த ராகுல் காந்தி, ‘எங்களின் ஆதரவு அ.தி.மு.க-வுக்கு எப்போதும் உண்டு’ என்றார். அதற்குக் காரணம், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நாட்களில், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி என்ற பேச்சுகள் கிளம்பியதுதான். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, சசிகலாவின் கணவர் நடராஜன்தான் திருநாவுக்கரசர் மூலமாக ராகுல் காந்தியிடம் மூவ் செய்தாராம். ராகுல் என்ட்ரிக்கு பிறகுதான் பி.ஜே.பி. அந்தத் திட்டத்தைக் கைவிட்டு, அ.தி.மு.க-வோடு இணக்கமாக இறங்கிவந்தது.’’

சிக்கிய கஜானா - சென்ட்ரல் செக்!

‘‘இப்போது என்னதான் திட்டமாம்?’’

‘‘அ.தி.மு.க-வும் தமிழக அரசும் தங்கள் பிடிக்குள் இருக்க வேண்டும் என்று பி.ஜே.பி. நினைத்தது. அந்த வியூகத்தை உடைப்பதற்கு காங்கிரஸ், தி.மு.க-வுக்கு இப்போது திராணி இல்லை. சசிகலாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் பி.ஜே.பி-யின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. சசிகலா குடும்பத்தினரை அதிகாரத்தில் அமர்த்தும். ஆனால், அந்த அதிகாரத்தின் பலனை பி.ஜே.பி சுவைக்கும் என்பதே சூழ்நிலை. அதற்கான வேலைகள் எல்லாம் கச்சிதமாக முடிந்துவிட்டதாம்.

ஜெயலலிதா இறந்த தகவல் கிடைத்ததும், சென்னை வந்த வெங்கய்ய நாயுடு இரண்டு நாட்களாக இங்கேயே சுற்றிவந்து எல்லாப் பஞ்சாயத்துகளையும் பேசித் தீர்த்து, சுமுகமாக முடித்து வைத்துள்ளார். இதையடுத்துத்தான், ஜெயலலிதாவின் உடல் மருத்துவ மனையில் இருந்து போயஸ் கார்டன் வீட்டுக்கு வருவதற்குள் முதலமைச்சராக ஓ.பி.எஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்தது எல்லாம் நடந்தது. இதற்குப் பின்னால் மத்திய அரசின் உதவிக்கரம் இருந்திருக்கிறது. 7-ம் தேதி மதியம் போயஸ் கார்டன் வீட்டில் மன்னார்குடி குடும்பம் கூடியது. அதன்பிறகு, அ.தி.மு.க அமைச்சர்கள், முக்கியமான நிர்வாகிகள் வந்தனர். அப்போது, ‘ஜெயலலிதா இருந்தபோது, கட்சியும் ஆட்சியும் கட்டுப்பாடாக நடந்தது. அதுபோல, இப்போது கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள யாரால் முடியும்?’ என்று கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கும் வில்லங்கம் குறித்துப் புரிந்துகொண்டவர்கள் மட்டும் பேசினார்கள்.’’

‘‘என்ன சொன்னார்களாம்?’’

‘‘சசிகலா குடும்பத்தின் மூலம் பதவிக்கு வந்தவர்கள் மட்டும்தான் பேசினார்கள். அவர்கள், ‘சின்னம்மா, போயஸ் கார்டன் இல்லத்திலேயே தங்கி இருக்க வேண்டும். அத்துடன் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் கேம்ப் அலுவலகமாக இனி போயஸ் கார்டன் வீட்டை வைத்திருந்தால், போயஸ் கார்டனின் முக்கியத்துவம் தொடர்ந்து நீடிக்கும்’ என்றும் சொல்லி உள்ளனர். வேறு சிலர், ‘அம்மாவோடு காலம் முழுவதும் நெருக்கமாக இருந்தவர் சின்னம்மா. அம்மாவின் மேல் இருந்த பக்தியும் மரியாதையும் சின்னம்மா மீதும் எங்களுக்கு இருக்கிறது. அதனால், சின்னம்மாவே கட்சியிலும் ஆட்சியிலும் இரண்டு பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று பேசி உள்ளனர். மற்றவர்கள் அமைதியாக இருந்ததால், ‘மௌனம் சம்மதம்’ என்று முடிவு செய்துவிட்டனர்.’’

‘‘அப்படியானால், அடுத்த பொதுச் செயலாளர்...’’

‘‘சசிகலாவேதான். இந்த மாத இறுதிக்குள் கூட்டப்படும் அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா தேர்ந்தெடுக்கப் படுவார். அதை எதிர்க்க இப்போதைக்கு கண்ணுக் கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை. முதலமைச்சர் பொறுப்பு பன்னீர் செல்வத்திடம் ரொம்ப காலத்துக்கு இருக்காது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஆர்.கே. நகர் அல்லது அ.தி.மு.க செல்வாக்கான ஒரு தொகுதியில் சசிகலா போட்டியிட வாய்ப்புள்ளது. அதன்பிறகு மீதமிருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு சசிகலாதான் பொதுச் செயலாளர்; சசிகலாதான் முதலமைச்சர் என்று அவரது ஆட்கள் இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.’’

‘‘பிறகு, ஏன் இப்போது பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கினார்கள்?’’

‘‘அது வெங்கய்ய நாயுடுவின் யோசனை. ‘இப்போது ஜெயலலிதா இல்லாத நிலையில், சசிகலா விருப்பப்படி வேறு ஒருவரை முதலமைச்சர் ஆக்கினால், தேவையற்ற சர்ச்சைகள் கிளம்பும். அதனால், இன்னும் சில மாதங்களுக்குப்பிறகு, நீங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்.’’

‘‘பி.ஜே.பி அரசு சசிகலாவுக்கு இவ்வளவு உதவிகள் செய்வதற்குப் பதில் வேறு யாருக்காவது அதே உதவிகளைச் செய்து அவர்களைக் கொண்டுவரலாம் அல்லவா?’’

‘‘அப்படி இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக சசிகலா, ஜெயலலிதாவை நிழல்போல் தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் அரசியலில், 80 சதவிகித அரசியல் சசிகலாவுக்கும் தெரியும். முக்கியமாக, ஜெயலலிதா மீது கட்சிக்காரர்கள் வைத்திருந்த பயம் கலந்த மரியாதை அப்படியே சசிகலா விஷயத்திலும் தொடர்கிறது. எனவே, அந்த இடத்தில் வேறு யாரை வைத்தாலும் சரிப்பட்டு வராது என்று சசிகலாவையே சப்போர்ட் செய்கிறது பி.ஜே.பி.’’

சிக்கிய கஜானா - சென்ட்ரல் செக்!

‘‘ஜெயலலிதாவுக்கான இறுதிச் சடங்குகளை செய்த தீபக் இது வரை எங்கு இருந்தார்?’’

‘‘இதற்கு முன்பிருந்தே, தீபக், எம்.நடராஜன் கஸ்டடியில்தான் இருந்து வருவதாகக் கூறுகின்றனர். சென்னையில் உள்ள பெரிய கார் நிறுவனங்களுக்கு ஸ்கிராப்ஸ் பிசினஸ் செய்து வரும் தீபக்கை, இந்தத் தொழிலில் இறக்கிவிட்டதே நடராஜன்தான் என்பதால், சசிகலா குடும்பத்துக்கு தீபக் விசுவாசமாக இருக்கிறாராம். அப்போலோ மருத்துவமனையிலும், போயஸ் கார்டனிலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பிரச்னை செய்தார். ஆனால், ராஜாஜி ஹாலில் அவருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. அவரிடமும் சில பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அதனால்தான், ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வந்த அவர், ‘நான் என் அத்தையைப் பார்க்க நினைத்தேன். பார்த்துவிட்டேன். வேறு எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை’ என்றார்.’’

‘‘தலைமைச் செயலகத்திலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாமே?’’

‘‘ஆமாம்! ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பாடுதான் திண்டாட்டமாக உள்ளதாம். போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தாலே ‘யார் பேசுகிறார்கள், யாருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றே தெரியவில்லை’ என்ற புலம்பல் இப்போதே எழுந்துவிட்டதாம். அதே நேரம் முக்கிய அதிகாரிகள் சிலர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக நடந்துவருவதாகப் பேச்சு எழுந்துள்ளது. அதே நேரம் தலைமைச் செயலகத்தில் இப்போதே சசிகலாவுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாடு அரசின் செய்தித் துறையில் இருந்து பத்திரிகைகளுக்கு நாள்தோறும் அரசு நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை அனுப்புவார்கள். கடந்த 7-ம் தேதி சோ உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற சசிகலாவின் வீடியோவை செய்தித்துறை அதிகாரிகளே தொலைக்காட்சி நிலையங்களுக்கு அனுப்பியுள்ளார்கள் என்றால் பாத்துக் கொள்ளுங்கள்.’’

‘‘கொங்கு மண்டலத்தில் உள்ள எம்.எல்.ஏ-க் களை வைத்து செங்கோட்டையன் ஏதோ பிரச்னை செய்யப்போவதாக சொன்னார்களே?’’

‘‘செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்து ஆள். அவருடைய ஆற்றலும் முக்கியத்துவமும், இப்போது, அ.தி.மு.க-வில் உள்ளவர்களுக்குத் தெரியாது. அதனால், கொங்கு மண்டலத்தில் சசிகலாவுக்கு விசுவாசமான, எடப்பாடி பழனிசாமி, கரூர் செந்தில் பாலாஜி, தங்கமணி, வேலுமணி என்று பலரை வளர்த்து வைத்திருக்கிறார்கள். செங்கோட்டையனால் என்ன பாதிப்பு வரும் என்பது போகப் போகதான் தெரிய வரும். ஆனால் சசிகலா குடும்பத்துக்குள் இருப்பவர்களாலேயே குழப்பம் ஏற்படுவதற்குதான் வாய்ப்பு உள்ளதாம். ஒவ்வொருவரும் ஒரு அதிகார மையமாக இருந்தவர்கள். அரசாங்கத்தின் நீக்குப் போக்கு தெரிந்தவர்கள். அதனால், ஆளுக்கு ஒரு திசைக்கு இழுக்கப் பார்ப்பார்கள். அவர்களில் டாக்டர் வெங்கடேஷ், திவாகரன், சுதாகரன், பாஸ்கரன் என்று சசிகலா குடும்பமே சில பலவாக முரண்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். இவர்கள் தவிர நடராஜனின் சொந்தங்களும் அதிகார ஆட்டத்தில் காய் நகர்த்தத் திட்டமிட்டு வருகிறது. அதுபோல, இத்தனை நாட்கள் கார்டனுக்குள் சசிகலாவுக்கு இணையாக வலம் வந்த இளவரசியும், அவர் வாரிசுகளும் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர். ஆனால், இவர்கள் யாரும் சசிகலாவை எதிர்க்க வேண்டும் என்று துணியவில்லை. துணியவும் மாட்டார்கள். ஆனால், சசிகலாவுக்கு யார் நெருக்கமாக இருந்து காய்களை நகர்த்துவது என்பதில் இவர்களுக்குள் மோதல் தொடங்கிவிட்டது.’’

‘‘அதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?’’

‘‘ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா பாணிதான். சசிகலா குடும்பத்தில் தனது அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தான லெட்சுமியின் ஆலோசனைப்படி நடக்க உள்ளார். மற்றவர்களை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இன்சார்ஜ் ஆக்கி அனுப்பிவிடப் போகிறார். போயஸ் கார்டன் வீட்டுப்பக்கம் வரவேண்டாம் என்றும் உத்தரவிடப் போகிறார். அதனால், இன்னும் சில நாட்களில் போயஸ் கார்டன் வீட்டில், ஜெயலலிதாவைப்போல் சசிகலாவும் தனியாக இருப்பார்.’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.