News
Loading...

தீபாவை தலைமையேற்க அழைக்கும் பேனர்களால் பரபரப்பு !

 தீபாவை தலைமையேற்க அழைக்கும் பேனர்களால் பரபரப்பு !

பெரம்பலூர் : ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அ.தி.மு.க. தலைமையேற்க வருமாறு அழைத்து பெரம்பலூரில் ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் அழைப்பு விடுக்க... இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கண்டனக் குரல்கள் எழத்துவங்கியுள்ளன.

இந்நிலையில், ஜெயலலிதாவின் ரத்த வாரிசான தீபா தலைமையில் கட்சி செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை திடீரென எழுந்துள்ளது. இந்நிலையில், 'மக்களின் சின்ன அம்மா, ஜெ.தீபா தலைமையில் அணி திரள்வோம்' என பெரம்பலூரில் ஃபிளக்ஸ் பேனர் வைத்து பரபரப்பை கிளப்பியுள்ளார் பெரம்பலூரைச் சேர்ந்த கண்ணன். அவரிடம் பேசினோம்.

 தீபாவை தலைமையேற்க அழைக்கும் பேனர்களால் பரபரப்பு !

"அம்மா இறந்ததில் என்னை போன்ற பல அடிமட்ட தொண்டனுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துகொண்டே இருக்கிறன. அம்மாவால் கஷ்டப்பட்டு வளர்க்கபட்ட கட்சி இது. ஒரு சிலர் இந்த கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள். அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்கள் எல்லாம் அம்மாவின் பிரேதத்தை சுற்றி நிற்கிறார்கள். அம்மாவின் அண்ணன் மகள் தீபாவை யாரும் நெருங்க விடவில்லை.

ரத்த சொந்தமான தீபாவை உள்ளே விடாதற்கு என்ன காரணம்? அம்மாவின் சொந்தங்களை ஏன் ஒதுக்கி விட்டார்கள்? அதுமட்டுமில்லாமல் அவசர அவசரமாக எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தை கூட்டி அனைவரிடமும் கையெழுத்து வாங்கவேண்டிய அவசியம் என்ன?

இந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அம்மாவிடமிருந்து எவ்வளவு சலுகைகளை பெற்றிருப்பார்கள். ஆனால் அம்மா இறந்து பத்து நாட்கள் கூட முடியவில்லை அதற்குள் கட்சிக்குள் எந்த சம்மந்தமும் இல்லாத சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க ஏன் அழைக்க வேண்டும்?.

அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய நிர்வாகிகள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். இது எவ்வளவு வெட்கமான வேதனையான விஷயம். இதை எதிர்த்து தான் அம்மா ஆண்ட அ.தி.மு.க.வை நயவஞ்சகர்களான சசிகலா குடும்பத்தினர் பிடியிலிருந்து காப்பாற்ற அணிதிரள்வீர் என்றும், அம்மாவின் ரத்த சொந்தமான ஜெ.தீபா அவர்கள் தலைமையேற்க வேண்டும் என்று ப்ளக்ஸ் வைத்தேன்.

 தீபாவை தலைமையேற்க அழைக்கும் பேனர்களால் பரபரப்பு !

தீபா அவர்கள் தலைமை ஏற்றால் என்னைப் போல் ஆதரவு தெரிவிக்க பலர் இருக்கிறார்கள். அதனால் தான் சசிகலாவை எதிர்த்து ப்ளக்ஸ் போர்டுகள் வைத்தேன். வைத்த கொஞ்ச நேரத்திலேயே செந்துறை ஒன்றியசெயலாளர் சுரேஷ் ப்ளக்ஸை கிழித்து விட்டார். அதோடு என்னைக் கட்சியிலிருந்தும் நீக்கி விட்டார்கள். நான் என்ன குற்றம் செய்தேன்?. மற்றவர்கள் போல பதவி ஆசை கொண்டவன் நான் அல்ல. அம்மாவின் உண்மையான தொண்டன். அம்மாவுக்கு துரோகம் இழைத்தவர்கள் ஒரு போதும் கட்சியை கைப்பற்றி விடக்கூடாது என சொல்வது தவறா?. இப்போது என்மீது வழக்கு போட்டுள்ளார்கள். என்னை மிரட்டிகொண்டிருக்கிறார்கள். எனது உயிர்க்கு எப்போதுவேண்டுமானலும் ஆபத்து வரலாம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் கவலைபடவில்லை அம்மாவுக்காக உண்மையாக இருந்தவர்கள் அம்மாவுக்கு துரோகம் நினைக்கமாட்டார்கள். நான் உண்மையான தொண்டன்," என்றார்.

இது தொடர்பாக அதிமுகவின் ஒன்றியசெயலாளர் சுரேஷிடம் பேசினோம். "கட்சியின் ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என யாருடைய அனுமதியும் இல்லாமல் சின்ன அம்மாவை விமர்சித்து தட்டி வைத்துள்ளார் இது தவறு தானே. தி.மு.க.வினர் தூண்டுதலினால் இந்த வேலை பார்த்துகொண்டிருக்கிறார். இவர் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டார் என்பதால் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். அவரை மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை," என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.