News
Loading...

குழந்தைக் கடத்தலுக்கு மோடி வைத்த செக்!

குழந்தைக் கடத்தலுக்கு மோடி வைத்த செக்!

மோடி ‘பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று அறிவித்த நாட்களிலிருந்து வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள் மட்டுமல்ல... நடக்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடரிலும் ஏகப்பட்ட களேபரம்தான். இந்நிலையில் ‘‘மோடியின் இந்த நடவடிக்கை மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையைச் சுரண்டி லாபம் பார்ப்பவர்களின் முதுகெலும்பை இந்நேரம் உடைத்திருக்கும்’’ என்று காட்டமாகச் சொல்லியிருக்கிறார் கைலாஷ் சத்யார்த்தி. 

அமைதிக்கான ‘நோபல் பரிசு’ வாங்கிய குழந்தை உரிமைப் போராளி. ‘‘ஒரு குழந்தையை வேலைக்கு வைப்பதன்மூலம் அவர்களுக்கு கட்டாயம் கொடுக்கவேண்டிய தினசரி கூலியை மறுப்பது, அவர்களை ஒப்பந்தக் கூலியாக நியமிக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை மீறுவது போன்ற பல்வேறு மீறல்களால் ஒவ்வொரு முதலாளியும் ஈட்டுகின்ற ஒவ்வொரு நயா பைசாவும் கறுப்புப் பணம்தான். இன்று பெரியவர்களுக்கு தினசரி கூலியாக 240 ரூபாய்வரை கொடுக்கிறார்கள். 

ஆனால், ஒரு குழந்தைத் தொழிலாளிக்கு அதிகபட்சமாக 40 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். ஆனால், 240 ரூபாய் கூலி கொடுத்ததாக கணக்குக் காட்டிவிடுகிறார்கள். காரணம், குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்ததாக கணக்கில் சொல்ல முடியாது. இதனால் ஒரு நிறுவனம் தினமும் ஒரு குழந்தைத் தொழிலாளி மூலம் 200 ரூபாய் வரை சேமிக்கிறது. இப்படி ஒரு நிறுவனம் ஒரு இடத்தில் 50 குழந்தைகளை வேலைக்கு வைத்திருந்தால் மாதம் 3 லட்ச ரூபாய் வரை சேமிக்கும். 

குழந்தைக் கடத்தலுக்கு மோடி வைத்த செக்!

இந்த வகையில் சுமார் 21 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணமாக இந்தியாவில் புழங்குகிறது. மோடியின் நடவடிக்கை குழந்தைத் தொழில் மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்’’ என்று நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார் சத்யார்த்தி அவரின் நம்பிக்கையை  குழந்தைகள் உரிமைக்கான ‘அமைதி அறக்கட்டளை’யை நடத்தும் பால் பாஸ்கர் வரவேற்கிறார். ‘‘கடந்த ஏப்ரல் மாதம் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம்  பற்றி விவாதம் நடந்தபோது அது வேண்டிய அளவு திருத்தம் செய்யப்படாமல் அப்படியே நிறைவேறியது ஒரு துரதிர்ஷ்டம். 

செய்கின்ற திருத்தங்கள்  குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் படியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தச் சட்டம் குழந்தைத் தொழிலை ஒரு குலத்தொழிலாகவும் பாவிக்கிறது. உதாரணமாக ஒரு டீக்கடைக்காரர்  தனக்குத் தெரிந்த குடும்பத்தின் குழந்தையை வேலைக்கு வைத்துக்கொண்டால் அந்த டீக்கடைக்காரரை இந்த சட்டத்தால் தண்டிக்க முடியாது. குழந்தைகள் பகுதி நேரமாக வேலை செய்வதையும் இந்த சட்டம் அனுமதிக்கிறது. 

இதனால் குழந்தைத் தொழிலாளரை ஒழிப்பதில் இந்த சட்டம் பிற்போக்கான சட்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் விரைவில் வரும் மனிதக் கடத்தல் தொடர்பான சட்டம்  குழந்தைத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் என்று  என்னைப் போன்றவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த சட்டத்தின்படி  ஒரு மனிதனை, ஒரு குழந்தையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சுய லாபத்துக்காகக் கொண்டு வருவது பெரிய தண்டனைக்கு உரிய குற்றமாகப் பார்க்கப்படும்’’ என அவர் சொல்ல, ‘குழந்தைத் தொழிலாளர் விஷயத்தில் தமிழகம் எந்த நிலையில் இருக்கிறது?’ என்றோம்.

‘‘8 வயதுவரை உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் 8 வயது முதல் 14 வயது வரைக்குமான குழந்தைகள் வேலையில் அமர்த்தப்படுவது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. காரணம், இந்தியாவில் 8 வயதைத்தான் குழந்தைக்கான வயதுவரம்பாக நிர்ணயித்திருக்கிறார்கள்.  இதை 14 வயதுவரை மாற்ற வேண்டும் என்று குழந்தை உரிமையாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

இதுவும் நிறைவேறும்போது தான் இந்தியாவில் குழந்தைகளின் நிலைமையில் மாற்றம் வரும். இந்தியாவில் சுமார் 2 கோடி குழந்தைகள் பல்வேறு வேலைகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்களுக்கு இந்த வேலையைக் கொடுத்து முறையான சம்பளத்தை அவர்களுக்கு தரும்போதுதான் வேலைக்காக குழந்தைகள் கடத்தப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் குறையும். இதன்மூலம் இந்தியாவில் புழங்கும் கறுப்புப் பணத்தின் ஒரு பகுதியும் வெள்ளையாக மாறும்’’ என்றார் அவர். 

வட மாநிலங்களில் வேலையில்லாத பெற்றோர்களிடம் நயமாகப் பேசி இடைத்தரகர் மூலமாக ஆயிரமோ, பத்தாயிரமோ கொடுத்து குழந்தைகளை வாங்குகிறார்கள்  நிழல் உலக முதலாளிகள். பிழைப்புக்கான எந்த வழியும் இல்லாமல் பணத்துக்காக குழந்தைகளை பெற்றோர்களும் கொடுத்து விடுகிறார்கள். அந்தக் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் மறுபடியும் சென்று சேர்வதில்லை என்பதுதான் மாபெரும் அவலம். அதுமட்டுமல்லாமல் குழந்தைக் கடத்தலும் சுலபமாக அரங்கேறுகிறது. 

அப்படி வாங்கப்பட்ட, கடத்தப்பட்ட குழந்தைகளை வேலைக்கு, பாலியல் தொழிலுக்கு என்று லட்சக்கணக்கில் விற்றுவிடுகிறார்கள். இந்த நிழல் உலகின் ராஜ்ஜியத்தை ஒழிக்க வேண்டுமானால் குழந்தைகளின் வாழ்க்கை சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும்.  இதற்காக கடுமையான சட்டங்களை இயற்றி அதை நடைமுறைப் படுத்தவேண்டும். இல்லையென்றால் இப்போது மோடி அரசு வெளியிட்டிருக்கும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளும் விரைவில் கறுப்புப் பணமாக மாறும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற அரசு மறுபடியும் கறுப்புப் பணத்தை ஒழிக்க  2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கிற  நிலைதான் மிஞ்சும்.  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.