News
Loading...

ஃபிடல் காஸ்ட்ரோவை ஏன் கொண்டாடுகிறோம்?

ஃபிடல் காஸ்ட்ரோவை ஏன் கொண்டாடுகிறோம்?

துரத்தும் மரணத்திடமிருந்து 638 முறை தப்பிப் பிழைப்பது சாதாரண விஷயமில்லை. கியூபாவை மாற்றியமைத்த புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ, இத்தனை கொலை முயற்சிகளிலிருந்து தப்பி, 639வது முறை இயல்பான மரணத்தைத் தனது 90 வயதில் அடைந்திருக்கிறார். லெனின், மாவோ, ஹோசிமின் வரிசையில் வைத்துப் பார்க்கப்பட்ட மகத்தான சோஷலிசத் தலைவர். அவரது மரணத்தோடு அந்த சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. 

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவும், உலகெங்கும் இன விடுதலைக்காகப் போராடும் மக்களுக்கு ஆதர்சமாகவும், தங்கள் தேசத்தை சொந்தக்காலில் நின்று கட்டமைக்க நினைக்கும் தலைவர்களுக்கு ரோல் மாடலாகவும் இருந்தவர்; மரணத்துக்குப் பிறகும் அப்படியே இருப்பவர். ‘கம்யூனிசம் என்பது இப்போது செல்லாக்காசு ஆகிவிட்டது’ என்று சொல்பவர்களுக்குக்கூட காஸ்ட்ரோவின் கியூபாவிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. 

ஃபிடல் காஸ்ட்ரோ ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இல்லை. வசதியான குடும்பத்தில் பிறந்து, சட்டம் படித்தவர். மத்திய அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் இருக்கும் ‘லத்தீன் அமெரிக்க நாடுகள்’ எனப்படும் குட்டிக் குட்டி தேசங்களை அமெரிக்கா தனது குப்பைத் தொட்டியாகவும் சந்தையாகவும் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வந்தது கண்டு கொதித்தார். கியூபாவை வளப்படுத்த விரும்பும் ஒரு தேசியவாதியாக மாறினார். நண்பர்களோடு சேர்ந்து இதற்காக எடுத்த முயற்சிகள், அவரை ஒரு கம்யூனிஸ்ட்டாக மாற்றின. 

ஃபிடல் காஸ்ட்ரோவை ஏன் கொண்டாடுகிறோம்?

முதல் முயற்சியில் தோற்று சிறைப்பட்டபோது, ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என நீதிமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார். உலகப் புகழ்பெற்ற நூலாக அது மாறியது. இரண்டாம் முயற்சியில் மக்கள் ஆதரவோடு ஜெயித்து அவர் ஆட்சியில் அமர்ந்தபோது அமெரிக்கா பதற்றமானது. ஒட்டுமொத்த அமெரிக்கக் கண்டத்தின் முதல் கம்யூனிச தேசம்! ‘‘இரும்புத்திரை நம் வாசல் வரை எப்படி வர முடியும்?’’ என அமெரிக்காவில் கென்னடி கொதித்தார். 

ஆட்சிக்கு வந்ததும் காஸ்ட்ரோ முதலில் செய்தது, கியூபாவில் செயல்பட்டு வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை நாட்டுடமை ஆக்கியதுதான். அமெரிக்கா கோபத்தில் கொந்தளித்தது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைவிட மிகச்சிறிய ஒரு தீவு தேசம்தான் கியூபா. சுண்டெலி மாதிரி நசுக்கிவிடத் துடித்தது. அவர்களின் கவலை, கியூபாவைப் பார்த்து மற்ற நாடுகளும் ‘கெட்டுப் போய்விடக்கூடாது’ என்பதுதான்! கியூபாவை வீழ்த்தவும், காஸ்ட்ரோவைக் கொல்லவும் துடித்தது. அத்தனை முயற்சிகளும் செயலிழந்தன.

இன்னொருபுறம் கியூபா மீது அரசியல் நடவடிக்கைகளும் தொடர்ந்தன. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கியூபாவை முடக்கியது. வெறும் சர்க்கரை மட்டும் உற்பத்தி செய்யும் தேசமான அது, சோவியத் யூனியனுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்து தனக்குத் தேவையான பெட்ரோலை வாங்கியது. சோவியத் யூனியன் கியூபாவில் நிறுவிய ஏவுகணைகள், அமெரிக்கா அந்தத் தீவு மீது ராணுவ நடவடிக்கை ஏதும் எடுப்பதைத் தடுத்தது. 

‘உலகை அணு ஆயுதப் போர் நெருக்கடியின் முனைக்குக் கொண்டுவந்தவர்’ என அமெரிக்கா அவரைச் சொல்கிறது. ஆனால் அமெரிக்கா மீது ஆழ்ந்த வெறுப்பு கொண்டிருந்தாலும், கியூபாவை அவர் எந்தப் போருக்கும் இட்டுச் சென்றதில்லை. ஆனால் உலகெங்கும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராகப் போராடும் படைகளுக்கு எப்போதும் ஆதரவு தெரிவித்து வந்தார். காஸ்ட்ரோவை முன்மாதிரியாகக் கொண்டு லத்தீன் அமெரிக்காவில் பலர் உருவெடுத்தனர். நிகராகுவா, வெனிசூலா, பொலிவியா போன்ற நாடுகளில் சோஷலிச அரசு அமைந்தது.

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளைத் தாண்டி இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதுதான் கியூப மக்களின் சாதனை. பெட்ரோல், சிமென்ட், உரங்கள் என எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு. எந்தப் பொருளும் கியூபாவுக்குப் போகாமல் தடுத்து, ‘ஒரு சர்வாதிகாரியாக இருந்துகொண்டு கியூப மக்களை காஸ்ட்ரோ வதைக்கிறார்’ என பிரசாரம் செய்துவந்தது அமெரிக்கா. 

பணக்கார தேசமாகக் கருதப்படும் அமெரிக்காவில் வீடற்ற ஏழைகள் ஆயிரக்கணக்கில் உண்டு. சாலையோரங்களில், சிறுசிறு அட்டைப்பெட்டி வீடுகளில் விலங்குகளைவிட மோசமாகக் குளிரில் நடுங்கியபடி அவர்கள் நாட்களை நகர்த்துகிறார்கள். பசியால் திருடர்களாக மாறியவர்களும் உண்டு. அமெரிக்க மக்களை வதைக்கும் இன்னொரு பிரச்னை, மருத்துவம். முழுக்க முழுக்க இன்சூரன்ஸ் சார்ந்ததாக மருத்துவ சேவை இருக்கும் அமெரிக்காவில், அடித்தட்டு மக்கள் மருத்துவ காப்பீடு செய்துகொள்வதில்லை. 

அவர்களும் மருத்துவ சேவை பெற வசதியாக ‘ஒபாமா கேர்’ என்ற திட்டத்தைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் ஒபாமா பெரும் போராட்டம் நடத்தி வந்தார். இப்போது வெற்றி பெற்றிருக்கும் டொனால்டு டிரம்ப், தான் பதவிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை ரத்து செய்யப் போவதாகக் கூறி வருகிறார். ‘ஏழைகள் சிகிச்சை பெறாமல் செத்துப் போனால்தான் என்ன?’ என்ற நினைப்பு அங்கு இருக்கிறது.

கல்வியும் அங்கு காஸ்ட்லிதான். கல்விக்கட்டணம், தங்குமிடச் செலவு, புத்தகங்கள் என எல்லாவற்றுக்கும் லட்சக்கணக்கில் செலவழித்தால்தான் உயர்கல்வி பெற முடியும். இதனால் அமெரிக்கர்கள் உயர்கல்வி பெறுவது குறைந்து வருகிறது. பெண்கள் பலர் தங்கள் கற்பை விலை பேசி கல்வி கற்கின்றனர். யாராவது பணக்காரர்களுக்கு ஆசைநாயகியாக இருந்துகொண்டு கல்விச் செலவை சமாளிக்கும் இந்த அவலம் ‘Sugar daddy’ பிரச்னை என அங்கு பேசப்படுகிறது.

ஆனால் கியூபாவில் மக்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம், கல்வி தருவது அரசின் பொறுப்பு. எவ்வளவோ நெருக்கடிகள் வந்தபோதும் தன் மக்களை அந்த தேசம் பட்டினியால் சாக விட்டதில்லை. மாட மாளிகைகள் இல்லையென்றாலும், எல்லோருக்கும் கண்ணியமாக வாழ முடிகிற அளவில் வீடு இருக்கிறது. மருத்துவத்தில் கியூபா அடைந்த முன்னேற்றம் மகத்தானது. உலகிலேயே கியூபாவில்தான் டாக்டர்கள் அதிகம். 155 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். ஸ்பெஷலிஸ்ட்களை வைத்து ஆபரேஷன் செய்து தள்ளும் மருத்துவ முறையாக இல்லாமல், நோய்கள் வரும் முன் காக்கும் முழுமையான சிகிச்சை முறையைப் பின்பற்றுகிறது கியூபா. 

பிரசவத்தில் குழந்தைகள் இறந்துபோவது உலகிலேயே கியூபாவில் மிகக் குறைவு. கியூபாவில் சராசரி ஆயுள் காலம், சுமார் 80 வயது. காலரா முதல் எபோலா வரை உலக நாடுகளை எந்த நோய் தாக்கினாலும், இயற்கைச் சீற்றம் ஏதும் நிகழ்ந்தாலும், அங்கு முதலில் சென்று சிகிச்சை அளிப்பது கியூப டாக்டர்கள்தான். ‘புரட்சிக்குப் பிறகான 50 ஆண்டுகளில் உலகின் 103 நாடுகளில் 1 லட்சத்து 85 ஆயிரம் கியூப டாக்டர்கள் சேவை புரிந்திருக்கிறார்கள்’ என புள்ளிவிவரம் சொல்வது அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ்தான்.

‘‘அமெரிக்கா உலக நாடுகளுக்கு போரையும் அழிவையும் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் நாங்கள் டாக்டர்களையும் மருந்துகளையும் மனித நேயத்தையும் அனுப்பி வைக்கிறோம். உலகின் எல்லா போர் முனைகளிலும் கியூபாவுக்குப் பங்கு இருக்கும். ஆனால் ஆயுதங்களை ஏந்தி மக்களைக் கொல்வதற்கு அல்ல, அடிபட்டவர்களுக்கு சிகிச்சை தந்து காப்பாற்றவே எங்கள் டாக்டர்கள் அங்கு போகிறார்கள்’’ என காஸ்ட்ரோ ஒருமுறை சொன்னார்.

கியூபாவில் ஆரம்பக் கல்வி முதற்கொண்டு உயர்கல்வி வரை எல்லாமே இலவசம். தனியார் கல்வி நிலையங்களே அங்கு கிடையாது. கியூபா மக்களின் கல்வியறிவு 97 சதவீதம். கடந்த 98ம் ஆண்டு உலக நாடுகளின் பள்ளி மாணவர்களுடைய கல்வித் திறனை சோதித்த யுனெஸ்கோ நிறுவனம், கியூப பள்ளி மாணவர்களின் அறிவுத் திறனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தது. அமெரிக்க மாணவர்களைவிட அவர்கள் மேலானவர்களாக இருந்தார்கள். அரசு தனது வருமானத்தில் 10 சதவீதத்தை கல்விக்கு செலவிடுகிறது. 

இது இங்கிலாந்தில் 4 சதவீதம், அமெரிக்காவில் 2 சதவீதம். எனில், நாம் எந்த தேசத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வது... அமெரிக்காவையா? கியூபாவையா? வளர்ச்சி என எதைச் சொல்வது... கியூபா அடைந்ததையா? அமெரிக்கா அடைந்ததையா? இந்த வித்தியாசத்தால்தான் காஸ்ட்ரோ கொண்டாடப்படுகிறார். ‘சிங்கப்பூர் மாதிரி ஆக வேண்டும்’ என வளர்ச்சியைக் குறி வைக்கும் தேசங்கள், தங்கள் மக்களை கியூப மக்கள் போல முதலில் மாற்ற வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.