News
Loading...

ஜெ.,க்கு பேரறிவாளன் கண்ணீர் கடிதம்..!

ஜெ.,க்கு பேரறிவாளன் கண்ணீர் கடிதம்..! என் அம்மாவை தேற்றிய அம்மா என்னை துயரகடலில் தள்ளிவிட்டு சென்று விட்டாரே..!

ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சிறையில் இருந்த படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அழாதீர்கள் அம்மா, உங்கள் மகன்தான் உங்களுடன் சேரப்போகிறானே… கலங்காதீர்கள்!” எனை ஈன்றவள் கரம்பற்றி, ஒரு தாயின் பரிவுடன் கண்ணீர் துடைத்துவிட்ட ‘அம்மா’, எம்மை துயரக்கடலில் தள்ளிவிட்டு, வங்கக் கடலோரம் நிரந்தரமாக துயிலப் போய்விட்டார்.

நிரபராதியான ஒரே புதல்வனை அநீதியின் சதி வலையினின்று மீட்கப் போராடிய, 23 ஆண்டுகால தன்னலம் கருதா தியாகம் அங்கீகரிக்கப்பட்ட தருணம் அந்தச் சந்திப்பு. அந்த நம்பிக்கை வார்த்தைகள்தான், “விடுதலை செய்வதென எனதரசு முடிவெடுத்திருக்கிறது” என்ற செம்மாப்புடன் முழங்கிய அந்த ஒற்றைச் சொல்லில்தான்,

எங்கள் ஒட்டுமொத்த எதிர்காலமும் உறுதியோடு பயணித்துக் கொண்டிருக்கிறது.

அவரது முடிவில், அறிவிப்பில் அரசியல் கலந்திருப்பதாக சிலர் சொன்னார்கள். உண்மைதான். சாமான்ய மனிதனின், தாய் ஒருத்தியின் நியாயக் குரலை அங்கீகரிக்கும் அரசியலை அதில் கண்டேன்.

கூட்டாட்சி முறைமைக்காக குரல் எழுப்பும் தமிழகத்தில், தண்டனைக் குறைப்பில் தனக்குள்ள அதிகாரத்தை நிலைநாட்டும் மாநில உரிமையின் கலகக் குரலை அதில் கண்டேன்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவியாக அல்ல. ஆட்சிப் பீடத்தின் அதிகாரமிக்க பதவியில் அமர்ந்துகொண்டு அங்கீகரித்த அரசியல் அது.

அந்த ஆழம் உணர்ந்தவர்களுக்குத் தெரியும், அந்த சந்திப்பு உணர்ச்சிகள் சங்கமித்த வரலாறு என்பது…

2011 ஆம் ஆண்டு மூவர் உயிர்காக்க, சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்திலும் பின்னர், 2014 ஆம் ஆண்டில் எழுவர் விடுதலை தீர்மானத்திலும் அவர் கையாண்ட, ‘திருவாளர்கள்’ என்ற சொல்லின் ஆழமும்,

அது சொல்லிச்சென்ற கதைகளும் ஏராளம். அகிம்சையை போதித்து வளர்த்த தனது மகனை ‘கொலைகாரன்’ என குத்திக்கிழித்த கொடூரத்திலிருந்து மீட்டு மருந்திட்ட மரியாதைக்குரிய சொல் அது.

தளைப்படுத்தப்பட்ட தலைவர்களை மீட்கவே அரசியல் செய்து, அவர்களின் சிறைவாசத்தை மட்டுமே பொதுவெளியில் அங்கீகரித்து, பழக்கப்பட்டுப்போன பழைய தலைமுறை ஒன்றின் கருதுகோளினை கேள்வி எழுப்பிய கம்பீரம் அவர்.

மூவர் தூக்கு, எழுவர் விடுதலை என்பதில் மட்டுமல்ல; ஈழ விடுதலையிலும், காவிரி நீர், முல்லை பெரியாறு நீர்ப் பங்கீடு போன்றவற்றிலும், இன்னும் இதுபோன்ற மக்கள் சார்ந்த சிக்கல்களிலும் சாமான்யர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தன்னை தகவமைத்துப் போராடிய பாங்கு எவருக்கும் வாய்த்திராத வரம்.

சாமான்ய மக்களுக்காகவே வாழ்ந்தார், சாமான்ய மக்களுக்காகவே செயலாற்றினார், மக்கள் பணியிலேயே உயிரும் துறந்தார். மண்ணில் மனிதகுலம் வாழும் வரை மக்களின் மனங்களில் வாழ்வார்.

அவரது கைகளால் விடுதலை பெற்று, எனது அன்னையோடு நேரில் நன்றி கூறி மகிழ வேண்டும் என்ற பெருங்கனவோடு காத்திருந்த நான், கடற்கரை மணல் பரப்பில், கல்லறையில் துயிலும் அவரை எங்கணம் எதிர்கொள்ளப்போகிறேன்?

இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதியிருந்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.