News
Loading...

உண்மையில் இறந்த நேரம் என்ன? - காட்சி -1 - அப்போலோ

உண்மையில் இறந்த நேரம் என்ன? - காட்சி -1 - அப்போலோ

னித்திருந்து பொதுவாழ்க்கை வாழ்ந்த பெண்களின் வாழ்வு பெரும்பாலும் கேள்விக்குறியில் தான் நிறைவுபெறுகிறது. ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவரது  உடல்நிலை சீராகி வருவதாக அப்போலோ நிர்வாகமும், அ.தி.மு.க. பிரமுகர்களும் சொல்லி வந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி மாலை திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். ‘எக்மோ’ உள்ளிட்ட இதய இயக்கவியல் கருவிகள் அவருக்குப் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ அறிக்கை வெளியிட்டது.

அதேசமயம் அப்போலோ மருத்துவமனையின் அதிகாரபூர்வ ‘ட்விட்டர்’ வலைதளமும், அப்போலோ மருத்துவமனையின் செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டியின் வலைதளமும் முதல்வருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தன. 4-ம் தேதி இரவு ஏழு மணியளவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புனிதநீரும் அப்போலோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எதற்கும் தயாராக தமிழகம் இருந்த சூழலில், 5-ம் தேதி மதியம் 2:30 மணியளவில் ‘முதல்வரைக் காப்பாற்ற தொடர்ந்து எங்களால் இயன்றதை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அவர் அபாயக்கட்டத்தில்தான் இருக்கிறார்’ என மீண்டும் அப்போலோ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியானது. தமிழகம் பதைபதைப்புக்கும் பரபரப்புக்கும் ஆயத்தமாக்கிக்கொள்ளத் தொடங்கிய நேரமும் அதுதான். பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, மக்களும் அவரவர் வீடுகளுக்குச் சென்று அடங்கினர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

மாலை 4:00 மணியளவில் கூட்டம் அப்போலோவை முற்றுகையிடத் தொடங்கியது. மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, பிரதமருக்கு தமிழக முதல்வரின் உடல்நிலை பற்றி அப்டேட் செய்துகொண்டிருக்க, எய்ம்ஸில் இருந்து மீண்டும் மருத்துவர்கள் சென்னை அப்போலோவுக்கு விரைவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாக்டர் கில்நானி, டாக்டர் த்ரிகா, டாக்டர் நரங் மற்றும் டாக்டர் தல்வார் கொண்ட குழு அப்போலோ வந்தனர். முதல்வர் உடல்நிலை குறித்தான பரிசோதனைகள் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. 

சிகிச்சை நடந்துகொண்டிருந்த அதேசமயம், 5:00 மணிக்கு அப்போலோவில் வரிசைகட்டி நின்ற ஆம்புலன்ஸுகள் வழியாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த இதர நோயாளிகள் அப்போலோவிலிருந்து மற்ற அப்போலோ கிளைகளுக்கு மாற்றப்பட்டனர். ‘அபாயக்கட்டம்’ என்று சங்கீதா ரெட்டியே கூறிவிட்ட நிலையில், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதிலிருந்து மற்ற நோயாளிகளைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே அப்போலோ முன் கூடியிருந்த மாவட்டச் செயலாளர்களிடம், ‘‘4:00 மணிக்கு தகவல் வெளியாகும். எதற்கும் தயாராக இருங்கள்’’ என மேலிட ஆணை செய்தியாகப் பரப்பப்பட்டிருக்கிறது.

மாலை 5:30 மணியளவில் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சி தொடங்கி தந்தி, புதிய தலைமுறை என அத்தனை செய்திச் சேனல்களும் ‘முதல்வர் ஜெயலலிதா காலமானார்’ என்னும் செய்தியை வெளியிட்டன. ஒரு சில நிமிடங்களிலேயே ‘காலமானதாக தகவல்’ என்றும், ‘அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை’ என்றும் தொலைக் காட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றின. அப்போலோவும் ‘ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றனர், சில தொலைக்காட்சிகள் முதல்வர் உடல்நிலை பற்றி தவறான செய்திகளை ஒளிபரப்பின’ என்றும் தகவல் வெளியிட்டது.

தகவல் வெளியிட்டுத் திரும்பப் பெற்ற அந்த இடைப்பட்ட நேரத்தில், அப்போலோ வாசலில் கலவரம் தொடங்கியது. மக்கள், தடுப்புகளை உடைக்கத் தொடங்கினார்கள். அப்போலோவின் முகப்பில் இருந்த எமர்ஜென்சி பகுதி என அறிவிப்பு தாங்கிய போர்டுகளை மக்கள் துவம்சம் செய்தனர். நாற்காலி உட்பட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து போலீஸ்காரர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்தக் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீஸ்காரர்கள் தடியடி நடத்தினர். பின்னர் பொதுமக்களையும், அ.தி.மு.க தொண்டர்களையும் மருத்துவமனை வாசல் பகுதியை விட்டு சுமார் நூறு மீட்டர் தொலைவில் நிறுத்தி, பாதுகாப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர்.  மறுபக்கம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் வெளியே நின்றுகொண்டிருந்த மக்கள் கதற, அங்கேயே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தற்கொலைக்கு முயன்றார். கட்சிக்கொடியும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ‘முதல்வர் இறந்ததாக வெளியான செய்தி தவறு’ என்ற செய்தி வந்ததும் தொண்டர்கள் மீண்டும் கொடியை முழுக் கம்பத்துக்கு ஏற்றி, ‘புரட்சித்தலைவி அம்மா வாழ்க’ என கோஷம் எழுப்பினார்கள்.  

அப்போலோவில் பரபரப்பு ஒருவாறு கட்டுக்குள் வந்ததும் போலீஸ் படைப்பிரிவுகள், சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள், என்.எஸ்.ஜி. காமாண்டோக்கள் மற்றும் பவுன்சர்களும் மருத்துவமனையின் முன் குவிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வெளியேற்றப்பட்டனர். எந்த ஒரு தவறான செய்திகளும் தமிழக மக்களுக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காக, அனைத்து நெட்வொர்க்குகளும் சில நிமிடங்கள் தடை செய்யப்பட்டன. இதனிடையே, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மருத்துவமனைக்குள் சென்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு இரவு சரியாக 10.45-க்கு மருத்துவமனயை விட்டு வெளியேற, அவரைத் தொடர்ந்து மற்ற போலீஸ் அதிகாரிகள் தடுப்புக்கயிறு கொண்டு இருபுறமும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யத் தொடங்கினர். 

காவல்துறையினர் மற்றும் என்.எஸ்.ஜி.படைவீரர்கள் பாதுகாப்பை தீவிரமாக பலப்படுத்த, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், “முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி சிகிச்சை பெற்றுவந்தார். உடல்நிலை சீராக இருந்த நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட, அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 11.30 மணியளவில் உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என 12:03-க்கு அறிக்கை வெளியிட்டது. இதனால், நூறடித் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டு அழத்தொடங்கி ,மருத்துவமனை நோக்கி முன்னேறத்தொடங்கினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்ததால் அனைத்தும் கட்டுக்குள்  கொண்டு வரப்பட்டன. பின்னர் ஜெயலலிதாவின் உடலை போயஸ் கார்டன் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அப்போலோ மருத்துவமனை முதல் கிரீம்ஸ் சாலை வழியாக போயஸ் கார்டன் வரை அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டு, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

அறிவிப்பு வெளியாவதற்கு முன்புதான் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில், கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆளுநர் மாளிகை விரைந்தது ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி தலைமையிலான குழு. ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வருக்கான பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 32 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.  அதேசமயம் அப்போலோவிலிருந்து, அரசு கார்களில் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். முதல்வர் இறப்பின் மீதான அதிகாரபூர்வ அறிவிப்பும், புதிய முதல்வர் பதவிப் பிரமாணமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் நடைபெற்றன.

முதல்வரின் உடல் எந்நேரமும் அப்போலோவிலிருந்து போயஸ்கார்டன் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் நள்ளிரவு 1.50 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்குள் சென்று ஆலோசனை நடத்தினர். பின் சரியாக அதிகாலை 2.26-க்கு பலத்த பாதுகாப்போடு, ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையை விட்டு வெளிவந்தது. தங்க ப்ளேட்டிங் செய்யப்பட்ட ஐஸ்  பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அந்தப்பெட்டி ஃப்ளையிங் ஸ்க்வாட் ஆம்புலன்ஸ் சர்வீஸில் இருந்து வாங்கப்பட்டது. “வி.ஐ.பி-க்களுக்கும், சாதாரண மக்களுக்கும் தனித்தனியே ஐஸ்பெட்டி உண்டு. ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரது உடலை வைக்க எங்களுக்கு ஐஸ் பெட்டி வேண்டும் என அப்போலோ தரப்பிலிருந்து அழைப்பு வந்த நிலையில், அவருக்கென தனியாக அதிக நேரம் குளிர்ந்த நிலையில் இருக்கும், தங்க ப்ளேட்டிங் செய்யப்பட்ட புதுஐஸ் பெட்டியைத் தயார் செய்து அனுப்பினோம். அதன் பெறுமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்’’ என்றார் அதன் உரிமையாளர் சாந்தகுமார்.

இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக, அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே அதாவது 11:00 மணிக்கே ஐஸ்பெட்டி கேட்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் மாலை 5.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டு, தொலைக்காட்சி ஊடகங்கள் மீண்டும் அந்த செய்தியை திரும்பப் பெற்றுக் கொண்டது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

‘‘4-ம் தேதி இரவு 7 மணிக்கு முதல்வருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. அப்போதே அவரது இதயத்தின் செயல்பாடு நின்றுவிட்டது. அதன் பிறகு சிகிச்சை முயற்சிகள் எடுக்கப்பட்டதாகச் சொல்வது சந்தேகமாக இருக்கிறது. எம்.எல்.ஏ-க்களிடம் கையெழுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்பு ஆகியவை நடக்கும் வரை அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டன” என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் வலம் வருபவர்கள் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். உடலை ‘எம்பாமிங்’ செய்ததற்கான அடையாளம் ஜெயலலிதாவின் கன்னத்தில் இருப்பதைப் பார்க்கும்போது இப்படித்தான் நம்பத் தோன்றுகிறது!

[இதை படித்துவிட்டிர்களா..? " வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன் "]

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.