News
Loading...

திடீர் தீபக்! - காட்சி 6 - எம்.ஜி.ஆர் சமாதி

திடீர் தீபக்! - காட்சி 6 - எம்.ஜி.ஆர் சமாதி

எம்.ஜி.ஆர். புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே ஜெயலலிதாவும் புதைக்கப்பட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னாலே ஜெயலலிதா முகம் நினைவுக்கு வரும். ஜெயலலிதா பெயரைச் சொன்னாலே எம்.ஜி.ஆர். முகம் நினைவுக்கு வரும். இந்த பந்தம்தான் மரணத்துக்குப் பிறகும் தொடர்கிறது அவர்கள் இருவருக்குள்ளும்!

ஜெயலலிதா இறந்துவிட்டார் என்றதுமே ‘அம்மாவை எங்கே அடக்கம் செய்வார்கள்?’ என்பதுதான் அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி. ‘‘கடற்கரையில்தான் வைப்பார்கள்’’ என ஒரு தரப்பு சொன்னது. ‘‘சிறுதாவூர் பங்களாவில் வைக்கப் போகிறார்கள். சில மாதங்கள் கழித்து அங்கு நினைவகம் எழுப்புவார்கள்’’ எனவும் சொல்லப்பட்டது. ஆனால், சிறுதாவூர் சென்னைக்கு வெளியே இருப்பதால் ஒதுக்குப் புறமாகப் போய்விடும் என நினைத்தார்கள். அப்போலோவில் இருந்து ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனுக்கு எடுத்துச் செல்லப்படும் முன்பே, கடற்கரையில்தான் உடல் அடக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியானது. 

இரவோடு இரவாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் எம்.ஜி.ஆர் சமாதிக்குச் சென்று வேலைகளைத் தொடங்கினார்கள்.  எம்.ஜி.ஆர் சமாதிக்கு நேர்கோட்டில் கொஞ்சம் தள்ளி இடம் தோண்டப்பட்டது. அந்த இடத்தை பார்க்கக் கூட்டம் திரண்டிருந்தது. ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடலைப் பார்த்துவிட்டு வந்த கூட்டம் நேராக அங்கே வர, பெரும் கூட்டம் கூடியது. அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிக் கொண்டிருந்தது போலீஸ். லாரி லாரியாக கொண்டுவரப்பட்ட இரும்பு தடுப்புகளைக் கொண்டு சமாதியின் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. எம்.ஜி.ஆர் சமாதிக்கு வெளியே இருந்த கூட்டம், ‘‘எங்களை உள்ளே விடுங்கய்யா’’ என போலீஸாரிடம் போராடிக் கொண்டிருந்தார்கள். சமாதியில் சவப்பெட்டியை வைப்பதற்கான உள்பகுதி சிமென்ட் செங்கல்லால் எழுப்பப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் போலீஸ் வாகனம் தவிர, எந்த வாகனமும் கடற்கரை சாலையில் நுழையத் தடை விதிக்கப்பட்டது. நண்பகலுக்குள் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படும் இடம் தயாரானது, வி.ஐ.பி-க்கள் அமர்வதற்கான குஷன் சேர்கள் கொண்டுவரப்பட்டன. ஜெயலலிதா உடலை அடக்கம் செய்வதற்கான சந்தன மரத்தால் செய்யப்பட்ட பெட்டி வந்து சேர்ந்தது. அந்தப் பெட்டியை, அடக்கம் செய்யும் குழி அருகே ரோலிங் கயிற்றைவைத்து குழிக்குள் இறக்கி ஒத்திகை பார்த்தார்கள். ராஜாஜி ஹாலில் இருந்து இறுதி ஊர்வலம் கிளம்பியது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருடைய கான்வாய் போல அமைந்திருந்தது இறுதி ஊர்வலம். தமிழக காவல் துறையினர் அணிவகுத்து முன்னே வந்தனர். அதன்பின் ஜாமர் வாகனம், பைலட், வாகனங்கள் வந்தன. முதலில் வந்த பைலட் காரில் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் அமர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் உடல் கொண்டுவரப்பட்ட ராணுவ வண்டியில் சசிகலா, பன்னீர்செல்வம், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், இளவரசி மகள் ப்ரியா ஆகியோர் அமர்ந்திருந்தனர். அதற்குள் சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் குஷன் நாற்காலிகளை ஆக்கிரமித்திருந்தனர். பாதுகாப்பு வாகனத்திலே சசிகலாவின் கணவர் நடராஜனும் வந்து சேர்ந்தார்.

திடீர் தீபக்! - காட்சி 6 - எம்.ஜி.ஆர் சமாதி

ஜெயலலிதாவின் உடலை ராணுவத் தளபதிகள் சுமந்தபடியே சமாதிக்குள் நுழைந்தனர். அங்கே ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மலர்த் தூவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உடல் அடக்கம் செய்யப்பட்ட சந்தன பெட்டியின் உள்ளே உப்பு பாக்கெட்களும் சில கெமிக்கல்களும் போடப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிக்குள் பகவத் கீதையின் ஒரு பகுதி வைக்கப்பட்டது. அதோடு ஜெயலலிதா பயன்படுத்தும் வாசனைத் திரவியம் ஸ்ப்ரே செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் குழிக்கு அருகில் இறக்கப்பட்டதும் சொல்லி வைத்தார் போல அங்கே வந்து நின்றார் சசிகலா. உடலை இறக்கி வைத்த ராணுவத் தளபதிகள், தேசியக் கொடியை மடித்து அதை சசிகலாவிடம் கொடுத்தார்கள். அந்தக் கொடியை வாங்கத்தான் சசிகலா தயாராக அங்கு வந்து நின்றார்.

உடலை சந்தனப் பெட்டிக்குள் வைத்ததும் சசிகலாவின் ஆஸ்தான புரோகிதரான தேவாதி, இறுதிச் சடங்குகளை செய்ய ஆரம்பித்தார். சடங்குகளை யார் செய்வார்கள் என்கிற சஸ்பென்ஸ் சில நிமிடங்களில் உடைந்தது. ஒரு இளைஞரை கையைப் பிடித்து அழைத்து வந்தார் சசிகலா. அவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். இதுவரை தலைக் காட்டாத தீபக் திடீரென வந்தது பலரின் புருவத்தை உயர்த்தியது. பெட்டியைச் சுற்றிலும் சிறிய அளவிலான சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள். திருநீறு தூவி, உடலைச் சுற்றிப் பால் தெளித்தார்கள். தேவாதி, சொல்லச் சொல்ல சசிகலாவும், தீபக்கும் இதை செய்தார்கள். ரத்த உறவுகளே இறுதிச் சடங்குகளை செய்வது வழக்கம். ஆனால், அதிலும் சசிகலாதான் பிரதானமாக இடம்பெற்றார். இறுதிச் சடங்குகள் முடிந்து உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடப்பட்டபோது சுற்றியிருந்தவர்கள் கதறினார்கள். முதல்வர் பன்னீர்செல்வம் அழுகையை அடக்க முடியாமல் தேம்பத் தொடங்கினார். ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு மரியாதை செய்தனர். சந்தனப் பெட்டி குழிக்குள் வைக்கப்பட்டதும் சுற்றி நின்ற சிலர், செயின், பணம் போன்றவற்றை குழிக்குள் வீச முற்பட்டதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. மண்ணால் குழியை முழுவதும் மூடியபிறகே அங்கிருந்து சசிகலா உள்ளிட்டவர்கள் கிளம்பினார்கள்.

திடீர் தீபக்! - காட்சி 6 - எம்.ஜி.ஆர் சமாதி

திடீர் தீபக்! - காட்சி 6 - எம்.ஜி.ஆர் சமாதி

எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்த ஜெயலலிதா, இறுதிப் பயணத்தை எம்.ஜி.ஆர் அருகிலேயே நிறைவு செய்துவிட்டார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.