News
Loading...

உடலைச் சுற்றிக்கொண்டார்கள்! - காட்சி 5 - ராஜாஜி ஹால்


முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர் வைக்கப்பட்ட ராஜாஜி ஹாலில்தான் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டது. அங்கு நாம் கண்ட சோகம், பரபரப்பு, நடிப்பு என பலவிதமான காட்சிகள் இங்கே...

சசிகலா, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், சசிகலாவின் சகோதரர் திவாகரன், திவாகரனின் மகன் ஜெயானந்த், சசிகலாவின் அண்ணி இளவரசி, இளவரசியின் மகள் பிரியா, மகன் விவேக்,  விவேக் மனைவி கீர்த்தனா, சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன், சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் உட்பட ஒட்டுமொத்த சசிகலாவின் உறவுகளால் அமைக்கப்பட்ட ‘பாதுகாப்பு வளையத்தில்’தான் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஜெ. உடல் அருகில், அமைச்சர்களால்கூட நெருங்க முடியவில்லை. ஜெயானந்தின் நண்பர் தேவாதான் உணவு, டீ  ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்தார். அடையாறு ஆனந்தபவனில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது.

அமைச்சர் ஜெயக்குமாரும், நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரையும் பரபரப்பாக இருந்தனர். மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தியவுடன், படிக்கட்டில் அமர்ந்திருந்த முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் கையைப் பிடித்தார். எழுந்த பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் சொன்ன ஸ்டாலின், சசிகலா பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. கனிமொழி அஞ்சலி செலுத்திவிட்டு சசிகலாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

உடலைச் சுற்றிக்கொண்டார்கள்! - காட்சி 5 - ராஜாஜி ஹால்

ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்த வந்தபோது, பிரதமர் மோடி வருவதாக தகவல் வந்தது. ரஜினி குடும்பத்தினரை நாற்காலிகள் போட்டு உட்கார வைத்தனர். மோடி வர தாமதம் ஆனதால் ரஜினியை அஞ்சலி செலுத்த அழைத்தனர். சிரம் தாழ்த்தி ஜெயலலிதா உடலுக்கு ரஜினி அஞ்சலி செலுத்தினார். மனைவி லதா, மருமகன் தனுஷ், மகள்கள் சௌந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் சசிகலாவிடம் பேசிவிட்டுச் சென்றனர். பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபீதாதான் அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் பரபரப்பாக வலம் வந்தார். காலையில் சேலையில் இருந்த சபீதா, மாலையில் வீட்டுக்குப் போய்விட்டு சுடிதாரில் திரும்பினார்.

கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்திவிட்டு, சசிகலாவிடம் பேசிக்கொண்டிருந்தார். விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்த வந்தனர். வெளியேறும் வழியாக விஜயகாந்த் உள்ளே வந்ததால் அவரை போலீஸ் தடுத்தது. விஜயகாந்த் குரலை உயர்த்தியதால் அவர்களை உள்ளே அனுப்பினர். ஓ.பி.எஸ், சசிகலா என யார் பக்கமும்  விஜயகாந்த் திரும்பவில்லை. ஸ்டைலாக கையை உயர்த்தி, பொதுக்கூட்டத்தில் கை காட்டுவதுபோல மக்களை நோக்கி கைகாட்டினார். 

வைகோ அஞ்சலி செலுத்திவிட்டு வந்து பேட்டி கொடுத்தார். அப்போது கேமராமேன்கள், ‘‘சார்... ரெடி’’ என்றதும் கடுப்பான வைகோ, ‘‘எனக்கு நீ ஆர்டர் போடுகிறாயா?’’ என கோபமாகக் கேட்டுவிட்டு, 20 நிமிடங்களுக்கு மேல் முழுங்கிவிட்டுதான் அங்கிருந்து நகர்ந்தார். பல ஆண்டுகளாக ஜெயலலிதா இருக்கும் திசைக்கே வராமல் இருந்த எம்.நடராஜன், ராஜாஜி ஹாலில் ‘கம்பீரமாக’த் தோன்றினார். ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் பரிவாரங்களுடன் வந்தார்.

உடலைச் சுற்றிக்கொண்டார்கள்! - காட்சி 5 - ராஜாஜி ஹால்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூட்ட நெரிசலில் சிக்கி அஞ்சலி செலுத்த வந்தார். தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஒரு போலீஸ் அதிகாரியை அழைத்து, “ஒரு மாநில முதல்வரை இப்படித்தான் கூட்ட நெரிசலில் அழைத்து வருவீர்களா?’’ என எச்சரிக்கை செய்தார். மாநில முதல்வர்களும் திரையுலகப் பிரமுகர்களும் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் கருணாஸ் அஞ்சலி செலுத்தி, செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

கேரள கவர்னர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி ஆகிய மூவரும் ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்தனர். அதை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். கேரளாவில் மூன்று நாள் துக்கம், முதல்வர் மறைவுக்கு நாளிதழ்களில் தமிழில் விளம்பரம் என கேரளா அரசு ஏற்படுத்திய ஆச்சர்யங்கள் அதிகம். அப்போலோ, போயஸ் கார்டன் என எல்லா இடங்களிலும் துரத்தியடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது கணவர் மாதவனுடன் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். “என்னை இவ்வளவு நாட்களாகத் துரத்தியவர்கள், இன்று பெரிய மனது வைத்து என் அத்தைக்கு அஞ்சலி செலுத்த அனுமதித்துள்ளனர்’’ என சொல்லிவிட்டு சோகமாக நகர்ந்தார் தீபா.

உடலைச் சுற்றிக்கொண்டார்கள்! - காட்சி 5 - ராஜாஜி ஹால்

உ.பி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வந்தபோது, ஜெயலலிதாவின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு புறப்படத் தயாரானது. அதை அறிந்த அகிலேஷ் யாதவ், கொஞ்சமும் யோசிக்காமல், காரில் இருந்து இறங்கி கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடிப்போய், அந்த வாகனத்தில் ஏறினார். அந்த வாகனத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, இளவரசி மகள் ப்ரியா ஆகியோர்  இருந்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.