News
Loading...

வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன்

வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன்

‘‘1971 அக்டோபர் 31-ம் தேதி காலை பத்து மணி... வழக்கம் போல ஷூட்டிங்குக்குப் புறப்பட்டேன். அம்மாவிடம் சொல்லிக்கொண்டு புறப்படுவதுதான் வழக்கம். இடைவேளையின்போது வீட்டுக்கு வந்தேன். பிற்பகல் ஒன்றரை மணி இருக்கும்.

வீடு வெறிச்சோடி காணப்பட்டது... ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியது. சமையல்காரன் ஓடி வந்தான். ‘என்ன சமாசாரம்? யாரும் இல்லையே? அம்மா எங்கே?’ என்று கேட்டேன். ‘திடீரென்று அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க’ என்று தயங்கிச் சொன்னான் அவன்.

வாசலில் நின்ற நான் உள்ளே போகவில்லை. காரை அப்படியே அந்த ஆஸ்பத்திரிக்கு ஓட்டச் சொன்னேன். அங்கே அம்மா படுத்திருக்க, அவரைச் சுற்றிலும் டாக்டர்கள் பலர் நின்று சோதனை செய்துகொண்டிருந்தார்கள். படபடப்பால் எனக்கு முதலில் பேச்சே எழவில்லை.

அன்று ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அங்கேயே இருந்தேன். அம்மா பேசத் தொடங் கினார்கள். அம்மா என்னை படப்பிடிப்புக்குப் போகச் சொன்னார்கள். நான் போக மறுத்தேன். மாலையில் ரொம்பவும் உற்சாகமாக இருந்தார்கள். இரவு 10 மணிக்கு என்னை வீட்டுக்குப் போகும்படி சொல்லிவிட்டார்கள். 

விடியற்காலை மூன்று மணிக்கு டெலிபோனில் ‘நிலைமை கவலைக்கிடம்’ என்றார்கள். பறந்தேன் ஆஸ்பத்திரிக்கு.

நவம்பர் முதல்தேதி, என் தாயின் நிலை மோசமாகியது. ஆக்ஸிஜன் செலுத்தியும் பலனில்லை. பிற்பகலில் என்னைவிட்டு ஒரேயடியாகப் பிரிந்துவிட்டார்கள்...”

- இப்படி தன் ‘அம்மா’ சந்தியா மறைவு பற்றி எழுதினார் ஜெயலலிதா. அந்த சந்தியா ஆசை ஆசையாய் கட்டிய வீடுதான் ‘வேதா இல்லம்’. வீட்டைக் கட்டி திறப்பு விழா காண்பதற்குள் சந்தியா இறந்து போனார். தன் அம்மாவின் நினைவாக அந்த வீட்டுக்கு ‘வேதா இல்லம்’ என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா. சந்தியா என்பது சினிமாவுக்காக வைத்துக்கொண்ட பெயர். வேதாதான் அவரது பெற்றோர் வைத்த பெயர்!

அந்த ‘வேதா இல்லத்தில்’ இதோ இன்னொரு கண்ணீர்க் காட்சி. இப்படி ஒரு காட்சியை போயஸ் கார்டன் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்த்து இருக்காது. ஜெயலலிதா ராணியாக வாழ்ந்த வீட்டில் உயிரற்ற சடலமாகக் கொண்டுபோய் இறக்கப்பட்டார். அந்த வீட்டுக்கு என்ன ராசியோ தெரியாது.

‘ஜெயலலிதா காலமாகிவிட்டார்’ என்ற அறிக்கை அப்போலோ மருத்துவமனையில்  இருந்து வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே போயஸ் கார்டனில் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. திடீரென நூற்றுக்கணக்கில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். சாலையின்  இரு புறமும் தடுப்புகளை  வைத்து கூட்டத்தைக்  கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு இருந்தனர். போயஸ்  கார்டனுக்குள் நுழையும் சாலைகளுக்குள் ஆட்கள், கார்கள் நுழையாதவாறு தடுக்கப்பட்டது. கார்டன்  ஊழியர்கள், முக்கியஸ்தர்கள், போலீஸ்  வைத்து இருந்த பட்டியலில்  பெயர்  உள்ளவர்களை  மட்டுமே  அந்த வட்டாரத்துக்குள்  அனுமதித்தனர். நள்ளிரவு 12.54 மணிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று வர... தொண்டர்கள்  அதைச் சூழ்ந்துகொண்டனர். அந்த வாகனம் போயஸ் கார்டன் வீட்டுக்குள் சென்றது. அடுத்த 10-வது நிமிடத்தில் கார்டனில்  இருந்து  வெளியே சென்றது. (இந்த வாகனத்தில்தான்  பின்னர் ஜெயலலிதாவின் உடலை ஏற்றி வந்தார்கள்) ‘அப்போலோவில் இருந்து ஆம்புலன்ஸை கார்டனுக்கு முதலில் அனுப்பி, பின்னர் கார்டனில் இருந்து அப்போலோவுக்கு ஏன் அனுப்பினார்கள்?’ என்பதும் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவை சுமந்துகொண்டு அதே ஆம்புலன்ஸ் மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்தது. அப்போது நேரம் இரவு 2.30 மணி.

வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன்

அந்த நேரத்தில், அ.தி.மு.க தொண்டர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துக்கொண்டு இருந்தனர். ‘‘கடைசி வரை எங்க அம்மாவைப் பாக்க முடியாம  செஞ்சுட்டீங்களே பாவிகளா’’ என காவல்  துறையினரைப் பார்த்து சிலர் ஆவேசமாகக் கூறிக்கொண்டு  இருந்தனர்.

ஜெயலலிதா அண்ணன்  மகள்  தீபா அந்த இடத்துக்கு வந்தார். தொண்டர்கள் அவரைச்  சூழ்ந்து  கொண்டு, ‘எங்க அம்மா  மாதிரியே  இருக்க!’ என  கட்டிப்பிடித்து அழத் தொடங்கினர். ஆனால், அவரை உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர். போலீஸ் ‘பேரிகேட்’ அருகே காலைவரையில் நின்றுகொண்டு இருந்தார் தீபா. இளவரசியின் உறவினரும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சி பின்னர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவருமான ராவணன் வந்தார். அவரையும் உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். முதலில்  மிரட்டிப் பார்த்த ராவணன்  பின்பு கெஞ்சியும் பார்த்தார்.  பட்டியலில் அவர்  பெயர்  இல்லாததால் உள்ளேவிட  முடியாது எனக் கறாராகச் சொல்லிவிட்டனர் காவல் துறையினர். தேனி தங்கத்தமிழ்செல்வன் வந்தார். அவரையும் அந்த சாலைக்குள் விடவில்லை. முட்டிப்  பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார் அவர்.  அடுத்து  வந்த  செங்கோட்டையனை உள்ளே அனுமதிக்க  மறுத்துவிட, ‘‘நான்  கட்சியின் சீனியர், நான் எம்.எல்.ஏ என்னையே உள்ளவிட  மாட்டேன்றீங்க... இது எல்லாம்  யார் சொல்லி  செய்றீங்கன்னு தெரியும். யார் யாரை அனுமதிக்கணும்னு உங்களுக்குப் பட்டியல்  கொடுத்தது  யாரு?’’  எனக்  கேட்டு டென்ஷன் ஆனார். அப்போது வந்த  செந்தில்  பாலாஜியை எந்தக் கேள்வியும் இல்லாமல் காவல் துறையினர் அனுமதித்தனர். பின்னர் போயஸ்கார்டன் உள்ளே இருந்து, ‘செங்கோட்டையனையும், தங்கத் தமிழ்செல்வனையும் உள்ளே விடுங்கள்’ என்று அனுமதி தந்தார்கள். அவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அப்போதும் ராவணனை உள்ளேவிடவில்லை. அடுத்தடுத்து வந்த எம்.எல்.ஏ-க்கள்  எல்லோரையும் அடையாள  அட்டையைக்  காட்டிய  பிறகு தடை இல்லாமல் அனுமதித்தனர்.

இரவு 2.30 மணியளவில் போயஸ்  கார்டன் சாலையில் ஜெயலலிதாவின் உடல்  ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டது. அதற்கு அடுத்த வாகனத்தில் சசிகலாவும் இளவரசியும் இருக்க, அதற்குப்  பின்னால்  சசிகலாவின் உறவினர்களும் வந்தனர்.போலீஸ் வேனில் அமைச்சர்களும், கட்சியின் சீனியர்களும் வந்தனர்.

வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன்

2.40 மணிக்கு  போயஸ்  கார்டனுக்குள் ஆம்புலன்ஸ்  கொண்டு  செல்லப்பட்டது. சசிகலா, இளவரசி, அவருடைய மகன், மகள்,  டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார், டி.டி. வி. தினகரன் குடும்பத்தினர்,  திவாகரன், அவருடைய மகன்  தவிர மற்ற   அனைவருமே வேதா  இல்ல  வாசலில்  நிறுத்தப்பட்டனர். உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதிகாலை 3.30 மணிக்கு ராஜாஜி ஹாலுக்குக்  கொண்டு  செல்ல வேண்டும் என முதலில்  கூறியிருந்தனர்.ஆனால், அதிகாலை 4.30 மணியளவில்தான் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு  இருந்தது. 

‘‘இவர்கள் செல்வதற்கு முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், போயஸ் கார்டன் வீட்டுக்குள் இருந்தார். சசிகலாவின் ஆஸ்தான புரோகிதர் தேவாதியும் உள்ளே இருந்துள்ளார். உடலை வீட்டில் உள்ள அவரது அறைக்குக் கொண்டு சென்று அங்கே சிறிது நேரம் வைத்திருந்தார்கள். அப்போது அனைவரையும் சசிகலா வெளியில் போகச் சொல்லிவிட்டு... அவர் மட்டுமே இருந்துள்ளார். பிறகு கண்ணீருடன் அந்த அறையைவிட்டு வெளியே வந்த சசிகலா, மற்றவர்களை அந்த அறைக்குள் அனுமதித்துள்ளார்.வீட்டின் பூஜை அறைக்கு முன்பாக சில சடங்குகள் செய்யப்பட்டு உள்ளன. இதனை குருக்கள் தேவாதியும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செய்துள்ளனர்.  அதன்பிறகு வீட்டின் ஹாலுக்கு உடலை எடுத்துவந்தார்கள். அப்போது மற்ற உறவினர்கள் உடல் அருகே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கார்டன் ஊழியர்களும் அங்கே வைத்து அஞ்சலி செலுத்த அனுமதிக்கப் பட்டார்கள். ஜெயா டி.வி. ஊழியர்களும் காவல் துறையினரும் அப்போது அனுமதிக்கப்பட்டனர்” என்று சொல்கிறார்கள்.

இத்தனை நாளும் சிங்கம் இருந்த குகையாக இருந்தது அந்த வீடு. இனி..?

[இதை படித்துவிட்டிர்களா..? "உண்மையில் இறந்த நேரம் என்ன? - காட்சி -1 - அப்போலோ"]

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.