News
Loading...

கப்பலை பிடிக்க படகு ஓட்டிய ஜெயலலிதா!

ஜெயலலிதா

ப்பாவை இழந்து, அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த ஜெயலலிதா, மூன்று வயதிலேயே நாட்டியம் கற்கத் தொடங்கிவிட்டார். பிழைப்பு தேடி, மைசூரிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்ததும், மகளை சர்ச் பார்க்கில் படிக்கவைத்தார் அம்மா சந்தியா. படிப்பில் திறன்மிகு மாணவியாக இருந்த ஜெயலலிதா, மெட்ரிகுலேசன் தேர்வில் மாநிலத்திலேயே இரண்டாமிடம் பெற்றார். 

அரசாங்கத்தின் படிப்பு உதவித்தொகையுடன் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மேற்படிப்புக்கு இடம் கிடைத்தும், குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிப்புத்துறைக்குத் தள்ளப்பட்டார். நாட்டியம், நாடகம், சினிமா என அடுத்தடுத்த படியேறி உச்சம் தொட்ட அவரது கலைத்தொழில் காலகட்டத்திலிருந்து சில குறிப்புகள்:

* அம்மா சந்தியாவுடன் ‘சைல மகாத்மே’ கன்னடப்படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தார் ஜெயலலிதா. நடிக்கவேண்டிய குழந்தை நட்சத்திரம் வரவில்லை என்பதால், சந்தியாவின் அனுமதி பெற்று, ஜெயலலிதாவை நடிக்கவைத்தார் டைரக்டர் அரூர் பட்டாபி. பள்ளிக்கூட நாடகத்தில் பார்வதி வேடத்தில் நடித்த குழந்தை ஜெயலலிதாவை படக்குழு பாராட்டியது. ஆண்டு: 1961.

 * அவர் நடித்த ‘டீ ஹவுஸ் ஆஃப்  ஆகஸ்ட்  மூன்’  ஆங்கில  நாடகம் பார்த்த முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி. கிரியின் மகன் சங்கர் கிரி,  ‘தி எபிஸில்’  ஆங்கிலப்படத்தில்  நடிக்க வைத்தார். படத்தில் ஜெயலலிதா பேசிய வசனங்களைக் கேட்டவர்கள், ‘‘இவர் பேசுவதுதான் இங்லீஷ், மற்றவர்கள் பேசுவதெல்லாம் பட்லர் இங்லீஷ்’’ என்று குறிப்பிட்டார்கள்.

* ஆரம்பத்தில் ஒய்.ஜி.பி நாடகக்குழுவில் அம்மா சந்தியாவுடன் இணைந்து பல மேடை நாடகங்களில்  நடித்திருக்கிறார். கதாநாயகியாக அவர் நடித்த  ‘அண்டர் செக்ரட்டரி’ நாடகம்  பெயர் வாங்கிக்கொடுத்தது. அந்த நாடகத்தில் ஜெய லலிதாவின் ஜோடியாக நடித்தவர்  சோ.ராமசாமி.

ஜெயலலிதா

* அவரது பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நடந்தது. தலைமையேற்று வாழ்த்திப் பேசிய சிவாஜிகணேசன், ‘‘தங்கச்சிலை போல இருக்கும் இந்தப்பெண், எதிர்காலத்தில் சினிமாவில் ஒளிர்வார்’’ என்று குறிப்பிட்டார்.

* அது 1964ஆம் ஆண்டு.  சிவாஜி கணேசன் நடித்த ’கர்ணன்’  படத்தின்  100 ஆம் நாள் விழா சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்தது. அம்மா சந்தியாவுடன் விழாவுக்குப் போயிருந்த ஜெயலலிதாவைப் பார்த்த டைரக்டர்  பி.ஆர் பந்துலு, அடுத்து இயக்க இருக்கும் ‘சின்னதே கொம்பே’ கன்னடப்படத்தில் நாயகியாக நடிக்க கேட்டிருக்கிறார். அம்மாவும் மகளும் சம்மதம் சொன்னார்கள். கல்யாண்குமார் ஜோடியாக ஜெயலலிதா நடித்த அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. அவருக்கு 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது.

* தர் இயக்கத்தில் 1965ல் வெளிவந்த  ‘வெண்ணிற ஆடை’  ஜெயலலிதாவின் முதல் தமிழ்ப்படம் என்கிற பதிவைப் பெறுகிறது. அப்போது அவரது வயது 16.   அதில் ஸ்லீவ் லெஸ் உடையணிந்து நீர்வீழ்ச்சியில் ஆடிப்பாடும் பாடல் காட்சிக்காக  ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ சான்றிதழ் , படத்துக்குக் கொடுக்கப்பட்டது. 18 வயது நிரம்பாததால் அவரால்  தனது  முதல் தமிழ்ப்படத்தை இரண்டாண்டுகளுக்குப் பிறகே பார்க்க முடிந்தது.

* ‘வெண்ணிற ஆடை’  படம்  வெளியானதும்  ஜெயலலிதா  தமிழ் சினிமாவின்  உச்சநட்சத்திரமானார். அடுத்த  ஒரே  வருடத்துக்குள்  23 திரைப்படங்களில் ஒப்பந்தமானார். அதில்  ஒன்றுதான்  எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’. எப்படி ஒப்பந்தமானார் என்பதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. 

ஒய்.ஜி.பியின் ‘அண்டர் செக்ரட்டரி’ நாடகத்தின்  25 ஆவது  மேடைக்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த  எம்.ஜி.ஆர். ஜெய
லலிதாவின் நடிப்புத்திறனைக் கண்டு வியந்தார். உடனே இயக்குநர் பந்துலுவை தொடர்பு கொண்டு,   ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் நாயகியாக ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்ய வைத்தார்.  

அந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு படகில் சிறிது தூரம் பயணித்து, கப்பலை அடையவேண்டும். எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்கள் கப்பலுக்குச் சென்றுவிட்டார்கள். 

தாமதமாக வந்த ஜெயலலிதா, யார் உதவியையும் எதிர்பார்க்காமல், அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகில், உதவியாளரையும் ஏற்றிக்கொண்டு, அவரே துடுப்பு போட்டு ஓட்டிக்கொண்டு கப்பலை அடைந்திருக்கிறார். அவரது துணிச்சலைக் கண்டு, வியந்து பாராட்டினார் எம்.ஜி.ஆர். மாபெரும் வெற்றி பெற்ற ‘ஆயிரத்தில் ஒருவன்’ தொடங்கி, ‘பட்டிக்காட்டுப் பொன்னையா’ வரை எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா இணைந்து நடித்த 28 படங்களும் பெருவெற்றியை அடைந்தன.

* சிவாஜி கணேசனோடு  அவர்  17  திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இருவரும்  இணைந்த முதல் படமான ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’யில்   சிவாஜியின்  மகளாக  நடித்திருந்தார் ஜெயலலிதா. சிவாஜி - ஜெயலலிதா ஜோடி சேர்ந்த ‘பட்டிக்காடா பட்டணமா’  சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.  சிறந்த  நடிகைக்கான பிலிம்பேர் விருதை  வென்றார் ஜெயலலிதா.

* படப்பிடிப்பில் தனக்கான காட்சி இல்லாதபோது, ஏதேனும் ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பது ஜெயலலிதாவின் பழக்கம். ‘அன்பைத்தேடி’ படப்பிடிப்பிலும் அப்படித்தான் இருந்தார். படத்தின் நாயகன் சிவாஜிகணேசனுக்கு கோபம் வந்துவிட்டது. இயக்குநர் முக்தா சீனிவாசனை அழைத்து, “இது தொழில் செய்ற இடம். 

இங்க வந்தா, டைரக்டர் எப்படி சொல்லித் தர்றார், மத்தவங்க எப்பிடி நடிக்கிறாங்கனு பாக்கணும். அதவிட்டுட்டு, புஸ்தகம் படிச்சிட்டிருந்தா என்ன அர்த்தம்?’’ என்று கேட்டிருக்கிறார். தகவல் தனக்குக் கிடைத்ததும், ‘இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்’ என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார் ஜெயலலிதா.

* தர்மேந்திராவுடன் ‘ இஸ்ஸத்’  இந்திப்படத்தில் நடித்தபோது,  ஒன்றரை மாதம் குலு மணாலியில் இருந்த ஜெயலலிதா, அவ்வப்போது  படக்குழுவுக்கு  சமைத்துக் கொடுத்து சபாஷ் வாங்கியிருக்கிறார்.

* ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது…’ பாடல் இடம்பெற்ற ‘சூரியகாந்தி’  படத்தின் 100 ஆம்  நாள்  விழாவுக்கு தந்தை  பெரியாரை அழைக்க வேண்டுமென படக்குழு விரும்பியது. ‘அவர் வரமாட்டார்’ என்று  சொன்னார்  இயக்குநர் முக்தா சீனிவாசன். ‘நீங்கள் போய் கேளுங்கள், வருவார்’ என்றார் ஜெயலலிதா.  கதையைக்  கேட்ட பெரியார், விழாவில் கலந்து சிறப்புரையாற்றி, அனைவரையும் பாராட்டியிருக்கிறார்.  

* ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த 92 தமிழ்ப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றவை. அவர் நடித்த ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை’ மற்றும்  ‘மணிப்பூர் மாமியார்’  படங்கள் வெளிவரவில்லை . 1992ல் ‘நீங்க நல்லா இருக்கணும்’ அரசு பிரசாரப்படத்தில் முதல்வராகவே தோன்றினார். சினிமாவில் அவரது கடைசிப்படம் இதுவே.

* சில படங்களில் சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். ஆனாலும் எம்.ஜி.ஆரின் விருப்பத்தையேற்று, எம்.எஸ்.வி. இசையில் ‘அடிமைப்பெண்’ படத்தில் பாடிய ‘அம்மா என்றால் அன்பு…’ பாடல் அனைத்து தரப்பையும் கவர்ந்து, ஜெயலலிதாவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. குன்னக்குடி வைத்யநாதன் இசையில் ஆல்பங்களில், சில பக்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

* 1965லிருந்து  1980ஆம் ஆண்டு வரை, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற பெருமையைப் பெற்றிருந்தார் ஜெயலலிதா.

* 1967-ல் அவருக்கு ‘காவிரி தந்த கலைச்செல்வி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.   பல படங்களில் அவரது பெயருக்கு முன்  ‘கலைச்செல்வி’ ஜெயலலிதா என்று குறிப்பிட்டு கவுரவப்படுத்தினார்கள்.

* 1971ல்  ‘தங்க கோபுரம்’, 1972ல்  ‘ராமன் தேடிய சீதை’,  1973ல்‘ சூரியகாந்தி’, 1974ல்  ‘திருமாங்கல்யம்’,  1975ல் ‘யாருக்கும் வெட்கம் இல்லை’ என தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதை வாங்கிய பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு.

* ‘நதியைத் தேடிவந்த கடல்’ படத்தோடு நடிப்பை நிறுத்திக்கொண்ட ஜெயலலிதா, அரசியலில் படிப்படியாக உயர்ந்து முதலமைச்சராக வலம் வந்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.