News
Loading...

ஜெயலலிதா சமாதிக்கு அனுமதி பெறப்பட்டதா?

ஜெயலலிதா சமாதிக்கு அனுமதி பெறப்பட்டதா?

மிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. 

கடந்த 10-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான முன் அனுமதியின்றி மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முதலாவதாக, எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள பகுதியானது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.2 பகுதியில் வருகிறது. அதாவது, வளர்ச்சியடைந்த பகுதியாக இது அடையாளம் காணப்படுகிறது. இதன்படி ஏற்கெனவே இருக்கும் கடற்கரைச் சாலைக்கு கிழக்குத் திசையில் எந்தவித கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதியில்லை. ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளக்கூட முறையான அனுமதி வாங்க வேண்டும்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனிடம் கேட்டோம். “கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சமாதி பகுதியில் உடல் அடக்கம் செய்யவோ, மணிமண்டபம் கட்டவோ அனுமதி வாங்கியிருக்க வாய்ப்பு இல்லை. ஜெயலலிதா மறைந்த சில மணி நேரங்களிலேயே, அவரது உடலை அங்கு அடக்கம் செய்ய அனுமதி பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை. மத்திய அரசிடம் ஃபார்ம்-1 மூலமாக அனுமதி கோர வேண்டும். அந்த ஆவணத்தோடு சேர்த்து திட்ட விவரங்களை அளிக்க வேண்டும். குறிப்பிட்ட மதிப்புக்கு மேலான கட்டடம் என்றால், சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உயரலை கோட்டிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பல்வேறு மேப்களைத் தயாரித்துத் தரவேண்டும். மாவட்ட அளவிலான சி.ஆர். ஸோன் குழுவில் இந்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் அந்த மனுவை மாநில கடற்கரை மண்டல மேலாண்மை அதிகார மையத்துக்கு பரிந்துரைப்பார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடும் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை அதிகார மையக்குழு, இந்த மனுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அவசரக்கூட்டம் நடத்தி, தகவல்களின் அடிப்படையில் அனுமதி வழங்கவும் வாய்ப்பிருக்கிறது. 

 ஆனால், எவ்வளவு பரப்பளவு, அதில் எந்த மாதிரியான கட்டடம் அமையப் போகிறது என்பது போன்ற அடிப்படைத் தகவல்கள் எதுவும் இல்லாமல், பல துறைகளும் அனுமதி அளித்திருக்க வாய்ப்புக் குறைவு. இதையும் தாண்டி உள்ளாட்சி / மாநகராட்சி அனுமதி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதி ஆகியவையும் தேவை. மீனவர்கள் தங்களோட குப்பத்தில் வீடுகட்ட அனுமதி அளிக்காத சி.எம்.டி.ஏ. இந்தத் திட்டத்துக்கு ஆறு மணி நேரத்தில் அனுமதி வழங்கியிருக்குமா என்ன? ஒருவேளை அப்படி அனுமதி வழங்கியிருக்கிறது என்றால், அரசே தவறான முன்னுதாரணமாக உள்ளது என்றுதான் அர்த்தம். பாமரனுக்கு ஒரு சட்டம். அரசுக்கு ஒரு சட்டம் என்றெல்லாம் கிடையாதே?’’ என்று கேட்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

 தென்னிந்திய மீனவர் நலச்சங்க தலைவர் பாரதியிடம் கேட்டபோது, “ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கட்டடத்துக்கு உள்ளேயே இன்னொரு கட்டுமானப் பணி என்று சொல்லிதான் அனுமதி வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் எப்படி அனுமதி வாங்கினார்கள் என்பது தெரியவில்லை. பெரிய திட்டங்களுக்குத்தான் நேரடியாக மத்திய அரசின் அனுமதி வாங்குவது வழக்கம். எனவே உடனடியாக அனுமதி வாங்குவது எல்லாம் நடக்காத காரியம்’’ என்கிறார்.

 பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், “பல்வேறு துறைகளிலிருந்து சில மணி நேரங்களில் அனுமதி கிடைத்திருக்கும் என்பது நம்பமுடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. ஒரு முதல்வரை கவுரவப்படுத்தும் விஷயமாக இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த இடத்தில் நினைவிடம் கட்ட மாநில அரசு தீர்மானம் கொண்டுவந்துள்ளதுதான் பிரச்னைக்கு உரியது. ஏனென்றால், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுப்படி எந்தவிதமான நிரந்தரக் கட்டுமானங்களும் இந்தப் பகுதிக்குள் வரக்கூடாது.  கடலோர ஒழுங்குமுறை எல்லைக்குள் வரும் பகுதிக்குள் விதிகளை மீறி கட்டடம் கட்டக்கூடாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதல்வராகப் பதவிவகித்த ஜெயலலிதாவுக்கு, அரசியலமைப்பை மீறி நினைவிடம் அமைப்பது சரியான முன்னுதாரணமாக இருக்காது” எனத் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.