News
Loading...

சேஞ்ச் - லோதா! - நெட்வொர்க் - 3

‘சேஞ்ச்’ லோதா! - நெட்வொர்க் - 3

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், அவரது மகன், நண்பர்கள் வீடுகளில் செப்டம்பர் 12-ம் தேதி ரெய்டு நடத்தியது வருமானவரித் துறை. இதுபற்றி ‘புலி வாலைப் பிடித்த புளி வியாபாரியின் கதை’ என்ற தலைப்பில் 21.09.2016 தேதியிட்ட ஜூ.வி-யில் கட்டுரை வெளியானது. ‘விசுவநாதனின் சொத்து வளர்ச்சியில் அவரது மகன் அமர்நாத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. வியாபாரத்தில் புலியான அமர்நாத், பல துறைகளின் பிசினஸ் புள்ளிகளை நண்பர்களாக்கிக்கொண்டார். அவர்கள் மூலமாகப் பல முதலீடுகளைக் செய்திருக்கிறார். அதில், பியர்லெஸ் பங்குதாரர்களில் ஒருவரான பரஸ்மால் லோதாவும் ஒருவர்’ என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அந்த லோதா இப்போது சிக்கியிருக்கிறார்.

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரோகித் தான்டன் அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் 13.62 கோடி ரூபாய் சிக்கியது. இதில் 2.62 கோடி ரூபாய், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். இதனிடையில், டெல்லியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ரோகித் தான்டன், லண்டன், துபாயில் பல சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். அவரை அமலாக்கப் பிரிவினர் கைதுசெய்து விசாரித்தபோது, கொல்கத்தாவைச் சேர்ந்த லோதாவைக் கைகாட்டியிருக்கிறார் ரோகித் தான்டன். இதனைத் தொடர்ந்து, லோதாவைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தார்கள். அவரின் செல்போன்கள், வாட்ஸ் அப் சாட்களை ஆராய்ந்தனர். கமிஷன் அடிப்படையில் லோதா, பணத்தை மாற்றித் தரும் தகவல் தெரியவந்தது. நாடு முழுவதும் அரசியல் புள்ளிகள் லோதாவுக்கு கஸ்டமர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் சேகர் ரெட்டி. லோதாவிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சேகர் ரெட்டி, அவரது பார்ட்னர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோரது வீடுகளில் அதிரடியாகப் புகுந்தது வருமானவரித் துறை.

சேகர் ரெட்டி வீட்டில் இருந்து 177 கிலோ தங்கமும் 131 கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. இதில் 34 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். புதிய ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டிக்கு லோதா மாற்றிக்கொடுத்திருக்கும் தகவலை வருமானவரித் துறையின் அமலாக்கப் பிரிவினர் கண்டுபிடித்தனர். சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த ரெய்டுகளைப் பார்த்து அதிர்ந்துபோன லோதா, மலேசியாவுக்குத் தப்பித்துச் செல்லத் திட்டமிட்டார். தப்பிச் செல்வதற்காகக் கடந்த 21-ம் தேதி மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்த லோதாவைக் கைதுசெய்தது அமலாக்கத் துறை. கமிஷன் பெற்றுக்கொண்டு பல கோடி ரூபாய்க்குப் புதிய பணத்தையும் தங்கத்தையும் மாற்றிக் கொடுத்ததாக லோதா ஒப்புக்கொண்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து 2.6 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கி அதிகாரிகள் உதவி இல்லாமல் லோதாவால் இவ்வளவு பணத்தை மாற்றியிருக்க முடியாது. ஆகவே, லோதாவிடம் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்தில் வைத்திருக்கிறது அமலாக்கத் துறை. லோதாவிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித்  தகவல்கள் வாக்குமூலமாகக் கிடைத்திருக்கிறதாம்.

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அன்புநாதனிடம் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் நத்தம் விசுவநாதனின் மகன் அமர்நாத் கொடுத்தது என்பதை வருமானவரித் துறை அதிகாரிகள் உறுதிசெய்திருக்கிறார்களாம். லோதா கொடுத்த வாக்குமூலத்தில், ‘‘கரூரைச் சேர்ந்த அன்புநாதன் எனக்கு அறிமுகமான பிறகு, அவர் மூலமாக தமிழகத்தின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள், தமிழக அரசில் முக்கியப் பதவியில் இருக்கும் ஒரு வி.ஜ.பி ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் மூலமாக தமிழகத்தில் பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நண்பர்களானார்கள். அந்தத் தொடர்பு மூலமாக வி.ஐ.பி-க்களின் பணம் கரூர் பிரமுகர் மூலமாக எனக்கு வரும். அதை நான் வெளிநாட்டில் முதலீடு செய்வேன். அந்தப் பணத்தில் துபாயில் ஒரு வணிக வளாகம் கட்டினேன். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளேன். கரூர் பிரமுகர் கொடுத்த பணத்தில் தாய்லாந்தில் தனித்தீவு வாங்கப்பட்டிருக் கிறது. அதோடு அந்த நாட்டு காசிக்கோன் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேகர் ரெட்டியின் பணத்தையும் முதலீடு செய்தேன். இதில் எங்களுக்குப் பல ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவரும் தமிழகத்தில் முக்கியப் பதவியில் இருப்பவருமான ஏ.டி.ஜி.பி ஒருவரும் எனக்கு உடந்தையாக இருந்தார். எங்களுக்குப் பல்வேறு வகையில் உதவியாக இருந்த அவரும் எங்கள் மூலமாகப் பலகோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை எடுத்துப் பார்த்தால், அவர் எங்களுடன் எந்தெந்த நாடுகளுக்கு வந்தார் என்ற தகவல் தெரியும்’’ என லோதா கொடுத்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் இருக்கின்றன.

‘சேஞ்ச்’ லோதா! - நெட்வொர்க் - 3

லோதா வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் அமலாக்கத் துறை இறங்கியிருக்கிறது. தொடர் விசாரணையில் பலரது பெயர்களும் வெளிவரும் என்பதால் லோதாவுடன் தொடர்பில் இருந்த வி.ஐ.பி-க்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.யார் இந்த லோதா?

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் லோதா. தனது தூரத்து உறவினர் மூலமாக, 1977-ம் ஆண்டு கொல்கத்தா வந்தார். அங்கு பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்தார். தனது கல்லூரி நாட்களில் வருமானத்துக்காக, பழைய ஆங்கில மாத இதழ்களை சக மாணவர்களிடம் விற்பனை செய்துவந்த லோதா, பிறகு, வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனையில் இறங்கினார். பிறகு வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுக்கும் தொழிலைச் செய்தார். அந்தத் தொடர்புகள் மூலமாக ரியல் எஸ்டேட் துறைக்குத் தாவினார். அந்தத் துறையில் நுழைந்த சில வருடங்களிலேயே அதிகாரிகளை நட்பாக்கிக்கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் கொல்கத்தா நகரின் நம்பர் ஒன் ரியல் எஸ்டேட் நிறுவனமாக தனது நிறுவனத்தை மாற்றினார். அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும்போது, அனுமதிக்கப்பட்ட மாடிகளைவிட, கூடுதலாகச் சில மாடிகளைக் கட்டிக்கொடுப்பார் லோதா. 

அதிகாரிகள் அவர் சொன்னபடி தலையாட்டியதால் இவரது நிறுவனத்திடமே ஏராளமான கான்ட்ராக்ட்டுகள் குவிந்தன. இதனால் ‘எக்ஸ்ட்ரா ஃப்ளோர் லோதா’ என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு. இந்த நிலையில், 1990-ம் ஆண்டு பியர்லெஸ் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் எல்.ஐ.சி-க்கு சவால்விடும் அளவுக்கு இந்த நிறுவனம் உயர்ந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே பியர்லெஸ் நிறுவனம் சரிவைச் சந்தித்தது. அதன் பிறகு, தனது தொழிலை மாற்றிக்கொண்ட லோதா, கறுப்புப் பண முதலைகளிடம் உள்ள பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துகொடுக்கும் தொழிலை ஆரம்பித்தார். இந்தத் தொழிலில் இந்தியாவில் முன்னணியில் உள்ளது லோதாதான் என்பதால் நாடு முழுவதும் உள்ள பல பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்கள் ஆனார்கள். கறுப்புப் பண வேட்டையில் லோதாவும் அவர் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கும் புள்ளிகளும் உறைந்துபோயிருக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.