குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, சஹாரா, பிர்லா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பிரதமர் மோடி லஞ்சம் வாங்கினார் என்று, ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள மேசேனா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல் காந்தி மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் அவர் பேசியவதாவது:
குஜராத் மாநில முதலமைச்சராகச் செயல்பட்டபோது, பிரதமர் மோடி ஏராளமான புகார்களில் சிக்கியுள்ளார். அதில் ஒன்றே, சஹாரா மற்றும் பிர்லா தொழில் குழுமங்களிடம் இருந்து, பல முறை லஞ்சம் வாங்கிய புகாரும். கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் தொடங்கி, பிப்ரவரி 2014 வரையான காலத்தில் மட்டும் 9 முறை, இந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து, பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் நரேந்திர மோடிக்கு கைமாற்றப்பட்டுள்ளது.
இதற்கான வருமான வரித்துறை ஆதாரங்களும் உள்ளன. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், காங்கிரஸ் கட்சியினரை குற்றம்சாட்டும் மோடி, இந்த லஞ்சப் புகார் பற்றி என்ன சொல்லப் போகிறார்.
முதலமைச்சராக இருந்த காலத்திலேயே இப்படி லஞ்சம் வாங்கியவர், தற்போது பிரதமர் பதவியை மட்டும் சீராக வழிநடத்துவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். அவர் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்? அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சந்தேகத்திற்கு உரியது.
தற்போது அமல்படுத்தியுள்ள ரூபாய் நோட்டுகள் சீர்திருத்த நடவடிக்கையும் கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டமே. கார்ப்பரேட் நலனுக்காக, அப்பாவி மக்களை பிரதமர் மோடி பலி கொடுத்துள்ளார்.
இவ்வாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.