News
Loading...

177 கிலோ தங்கமும் 100 கோடி ஆவணமும்...! - கைதாவாரா ராமமோகன ராவ்?

177 கிலோ தங்கமும் 100 கோடி ஆவணமும்...!  - கைதாவாரா ராமமோகன ராவ்?

மிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டின் அதிர்ச்சியில் இருந்து அமைச்சர்கள் இன்னும் மீளவில்லை. 'புதிய தலைமைச் செயலாளர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். ராமமோகன ராவ் வீட்டில் நடந்த ரெய்டால் அவருக்கு ஆதரவான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் அச்சம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். 

அன்புநாதன் டூ ஆர்.எம்.ஆர்!

நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் எந்தவிதச் சோர்வும் இல்லை. நேற்று தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்திய ரெய்டில், ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு மட்டுமே அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடித்தது. பின்னர் தலைமைச் செயலகத்திற்குள்ளும் நுழைந்து தேடுதலை நடத்தினர். முடிவில், ' சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டதாக' தகவல் வெளியானது. தமிழக அரசின் 78 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக வருமான வரித்துறையினர் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்துள்ளனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது' என அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதைப் பற்றியெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. "தலைமைச் செயலாளர் வீட்டை குறிவைத்ததன் பின்னணி நேற்று தொடங்கியதல்ல. சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கரூர், அன்புநாதன் குடோனில் பிடிபட்ட பணத்தில் இருந்தே தேடுதலை தீவிரப்படுத்தினோம். அதன்பிறகு, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் பண்ணை வீடுகள், கீர்த்திலால் காளிதாஸ் நகைக்கடை என ஆளும்கட்சி வட்டாரத்தின் கஜானா நீளும் இடங்களில் துருவிக் கொண்டே இருந்தோம். ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பிற்குப் பிறகு, மேலும் சில இடங்களில் இருந்து கறுப்புப் பணம் வெளியாகலாம் என சில முக்கிய நகை வியாபாரிகளை குறிவைத்தோம். பாரிமுனையில் உள்ள மார்வாடிகளின் பண பரிவர்த்தனைகளை அலசினோம். தங்கமாக வாங்கி குவிக்கும் வேலையில் தமிழக அரசுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டிருந்தனர். தினம்தோறும் மாற்றப்பட்ட தொகைகளை, இத்தனை கோடிகள் என துண்டுச் சீட்டில் பென்சிலால் எழுதி வைத்திருந்தனர். அத்தனை தங்கமும் சேகர் ரெட்டிக்குச் சென்றது என அறிய முடிந்தது. சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தலைமைச் செயலாளருக்காக மாற்றப்பட்ட தங்கம் என்பதை கண்டறிந்தோம்" என விவரித்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், 

177 கிலோ தங்கமும் 100 கோடி ஆவணமும்...!  - கைதாவாரா ராமமோகன ராவ்?

இரக்கமே காட்ட வேண்டாம்! 

" ஜெயலலிதா இருக்கும்போதே சேகர் ரெட்டியின் அனைத்து பரிவர்த்தனைகளும் புலனாய்வுப் பிரிவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுவிட்டோம். சேகர் ரெட்டி வீட்டிலேயே எங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் கிடைத்துவிட்டன. அதில், தலைமைச் செயலாளரின் பங்கு பற்றியும் விரிவாகவே பேசிவிட்டார் ரெட்டி. எங்களுடைய தேடுதலில், ரெட்டி வீட்டில் இருந்து 177 கிலோ தங்கம் பிடிபட்டது. 'இது அனைத்தும் தலைமைச் செயலாளருக்கு சொந்தமானது' என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். நேற்று நடத்திய சோதனையில், ராம் மோகன ராவின் வீட்டில் ஒரு ரகசிய அறையைக் கண்டுபிடித்தோம். அதில் இருந்தும் சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. முப்பது லட்ச ரூபாய்க்குப் புதிய நோட்டுகள், 100 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் என  நாங்கள் எதிர்பார்க்காத வகையில் அனைத்தும் கிடைத்தன. சோதனைக்கு அவரிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.

முகத்தை மட்டும் இறுக்கமாக வைத்துக் கொண்டார். அவரது வீட்டின் முன்பு தேவையற்ற தகராறு நீடித்ததால், மத்திய துணை ராணுவப் படையின் உதவியை நாடினோம். மற்றபடி, வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநில அரசின் திட்டங்களில் தலைமைச் செயலருக்கு வந்து சேர்ந்த தொகைகள், பொதுப் பணித்துறையின் மூலம் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள், கனிமவளம், உயர்கல்வி, பள்ளிக் கல்வி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் அவர் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகள் என அனைத்து விவரங்களும் நிதித்துறை அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு சேர்த்தோம். அன்புநாதனில் தொடங்கிய ஆட்டம் கார்டன் வரையில் எப்படியெல்லாம் முடிவடைகிறது என நிதித்துறை அமைச்சகத்துக்கு விரிவான அறிக்கையை அனுப்பினோம். ' யாரிடமும் இரக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை. அதிகாரத்துக்குள் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் வளையத்துக்குள் கொண்டு வாருங்கள்' என உறுதியான குரலில் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது எங்கள் வளையத்துக்குள் ஆளும்கட்சியின் ஐந்து அமைச்சர்கள் உள்ளனர். அவர்களின் கணக்கு வழக்குகளையே ரெட்டிதான் கவனித்து வந்திருக்கிறார்" என்றார் விரிவாக. 

177 கிலோ தங்கமும் 100 கோடி ஆவணமும்...!  - கைதாவாரா ராமமோகன ராவ்?

மணலில் கால் வைத்த ஆர்.எம்.ஆர்! 

"மணல் வியாபாரத்திற்குள் கால் நுழைத்ததுதான் தலைமைச் செயலாளர் செய்த முதல் தவறு. ' ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி இந்தளவுக்கு இறங்கிப் போகலாமா' என சக அதிகாரிகளே சுட்டிக் காட்டினர். எதைப் பற்றியும் அவர் கண்டு கொள்ளவில்லை. அரசின் ஒப்பந்தப் புள்ளிகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதைத் தீர்ப்பதில் ஆர்.எம்.ஆர் (ராமமோகன ராவ்) வல்லவர். முட்டை கொள்முதலில் கோலோச்சிய 'புஷ்டியான' நிறுவனத்திற்கு சாதகமாகவே டெண்டர் விதிகளை மாற்றினார். இதனால், முட்டை கொள்முதல் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விலையில்லா மிதிவண்டி, சத்துணவுப் பொருட்கள், பொதுப்பணித்துறை பணிகள் என மிகப் பெரிய ஒப்பந்தங்கள் அனைத்தும் ஆர்.எம்.ஆர் சிக்னல் இல்லாமல் நிறைவேறாது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஐ.சி.டி என்ற பெயரில் கம்யூட்டர் கல்வியை ஏழை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதற்காக 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிக்காக வந்தவர்களிடம் பேரம் படியாததால், மத்திய அரசுக்கே இந்தப் பணம் திருப்பி அனுப்பப்பட்டது. இதன் பின்னணியில் ஆர்.எம்.ஆர் இருந்தார். கடந்த ஐந்தாண்டுகளில் ஆர்.எம்.ஆர் மகன் விவேக் வைத்ததுதான் கோட்டைக்குள் சட்டமாக இருந்தது. சீனியர் அமைச்சர்கள் துணையோடு ஆந்திராவில் ஏராளமான வர்த்தகங்களைத் தொடங்கினார். சேகர் ரெட்டி குறிவைக்கப்பட்டபோதே, தன் பக்கம் வருமான வரித்துறை பார்வை திரும்பும் என எதிர்பார்த்திருந்தார் ஆர்.எம்.ஆர். இதைத் தடுப்பற்காக டெல்லி வட்டாரத்தின் உதவியை நாடினார். ' பைல் அனைத்தும் பி.எம்.ஓ அலுவலகத்தில் இருக்கிறது. எங்களால் எதுவும் செய்ய முடியாது' எனக் கை விரித்துவிட்டனர். ' இவ்வளவு சீக்கிரம் வருவார்கள்' என அவரும் எதிர்பார்க்கவில்லை. ஆர்.எம்.ஆர் துணையோடு கோட்டைக்குள் ஒரே துறையில் நீண்டகாலம் கோலோச்சும் அதிகாரிகளையும் வருமான வரித்துறை துருவ ஆரம்பித்திருக்கிறது. இதனிடையே ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கைதாவாரா? 

' ராமமோகன ராவை கைது செய்ய முடியுமா?' என்ற கேள்வியை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். " துணை ராணுவப் படையோடு ரெய்டுக்குச் சென்றது தவறில்லை. ஆனால், சட்டம் மட்டும் ஒரு நாட்டை வழிநடத்துவதில்லை. மரபுகளும் சேர்ந்துதான் வழி நடத்துகின்றன. பத்து வருடங்களுக்கு முன்பு எஸ்மா சட்டம் கொண்டு வந்து, நள்ளிரவில் அரசு அதிகாரிகளை தேடித் தேடி கைது செய்தார் ஜெயலலிதா. அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஜெயலலிதா செய்தது சட்டப்படி தவறு கிடையாது. அதேபோல்தான் இதுவும். ஒன்றைக் கவனிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரிகள் யாரும் வன்முறையில் ஈடுபடப் போவது கிடையாது. இங்கு மத்திய படையைக் கொண்டு போக வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டில் ஊழல் செய்பவர்கள் மட்டும்தான் பயந்தவர்கள். தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட இரண்டு பிரதான கட்சிகளும் வழக்குகளில் சிக்கியுள்ளன. இந்த இரு கட்சிகள் மீதும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றைக் காட்டி பயமுறுத்தலாம். அதைத்தான் மத்திய அரசு செய்து வருகிறது. ஆர்.எம்.ஆர் வீட்டில் கைப்பற்றப்பட்டது லஞ்சப் பணம் என்று நிரூபித்தால், அவரைக் கைது செய்யலாம். பொதுவாக, வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து என்றால் கைது செய்ய மாட்டார்கள். ஒரு வழக்கில் முக்கியமான அதிகாரி ஒருவரைக் கைது செய்ய நேர்ந்தபோது, சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக இருந்த சர்மா, ' நாளையே வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்க்கவில்லை' என நீதிமன்றத்தில் நிரூபனம் ஆகலாம். ஆனால் கைது செய்துவிட்டால் களங்கம் தீராது' என்றார். கைது நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது. மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின்கீழ் தலைமைச் செயலாளர் மீது வழக்குப் பதிவது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. இது லஞ்சப் பணம் எனக் காட்டினால், கைது நடவடிக்கைகளை எடுப்பார்கள்" என்றார் உறுதியாக. 

வழக்கமாக, ஆட்சி மாற்றம் நடக்கும்போது தி.மு.க அதிகாரிகள், அ.தி.மு.க ஆட்சியால் பழிவாங்கப்படுவார்கள். ஆனால், தி.மு.க தலைமையிடம் நெருக்கம் காட்டிய ஆர்.எம்.ஆருக்கு ஜெயலலிதா கொடுக்கப்பட்ட இடத்தை பிரமிப்போடு பார்க்கிறார்கள் கோட்டையில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.