News
Loading...

மன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம்! - ஸ்டாலின் Vs சசிகலா

மன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம்! - ஸ்டாலின் Vs சசிகலா

ந்தியாவையே திகைக்கவைத்தது ஜெயலலிதாவின் மரணம் என்றால், அதைத் தொடர்ந்து அதிரவைத்தது சசிகலாவின் ஆளுமை!

`தோழி' என்ற உறவில் இருந்து `தலைவி' என்ற உயரத்துக்கு ஒரே நாளில் விஸ்வரூபம் எடுத்தார் சசிகலா. யார் இவர்?

ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க கோட்டையின் தலைமை பீடத்துக்கு புரமோட் ஆனது எப்படி? 

‘ஜெயலலிதாவைவிட சசிகலா தடாலடியானவர்; மன்னிக்கும் மனோபாவமே இல்லாதவர்; யாரையும் தூக்கி வீசத் தயங்காதவர்...’ - இப்படி பலவிதமான முகங்கள்தான் சசிகலாவின் அடையாளம். கடந்த 5-ம் தேதி அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் சசிகலாவை நேரில் பார்த்தபோது, அது தலைகீழ் பிம்பமாகி இருந்தது.  

அப்போலோவில், போயஸ் தோட்டத்தில், ராஜாஜி ஹாலில், எம்.ஜி.ஆர் சமாதியில்... என நான்கு இடங்களிலும் நான்கு விதமாக இருந்தார் சசிகலா. அப்போலோவில் உடைந்து கதறிய சசிகலா, போயஸ் கார்டனில் ஜெ. உடலுக்கான சடங்குகளை முடித்துவிட்டு அங்கேயே நின்றார். எல்லோரையும் அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, ஜெ-வின் உடலிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். ஆம்... 

ஜெ. இறந்துவிட்டார் என்பதை மறந்து, பழைய சம்பவங்களை நினைவுபடுத்துவதுபோல்  ஜெயலலிதாவின் சடலத்தின் முன் சன்னமான குரலில் அவர் பேசிக்கொண்டிருந்தாராம்.

மன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம்! - ஸ்டாலின் Vs சசிகலா

ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தி காலை 4:45 மணிக்கு ஜெ. உடலைத் தூக்கியபோது அழுகை நிதானமாகி இருந்தது. ராஜாஜி ஹாலில் நாள் முழுக்க நின்றபோது, அவர் கண்கலங்கவே இல்லை. ஜெ-வின் முகத்தைச் சரிசெய்தபோது மட்டும் தாங்க முடியாமல் குலுங்கினார்.

நான்கு முறை ஜெ-வின் உடல் அருகே வந்து நின்ற மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சசிகலா சட்டையே செய்யவில்லை. பிரதமர் மோடி வந்தபோது முதலமைச்சர் பன்னீர்செல்வம் குலுங்கி அழுதார். ‘your sister has died. but your brother  is alive. I'm your brother’ என சசிகலாவின் தலையில் கைவைத்து மோடி சொல்ல, ‘Ok sir’ என்று மட்டும் சொன்னார். பிற மாநில முதலமைச்சர்கள் வந்தபோதும் அப்படித்தான். எம்.ஜி.ஆர் சமாதியில் ஜெ-வின் உடலைக் கீழே இறக்கியபோது கதறி அழுவார்; மயங்கி விழுவார் எனப் பலரும் எதிர்பார்த்திருக்க, சலனமே இல்லாமல் நின்றார் சசிகலா.

 `ஜெ-விடம் சசிகலா நிறைய நாடகங்கள் போடுவார்; கட்சிக்காரர்களைப் பழிவாங்க என்ன வேண்டுமானாலும் செய்வார்; ஜெ-வை எப்போது, எப்படி ஏமாற்றுவது என அவருக்கு நன்றாகத் தெரியும்’ என அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளே பலமுறை சொல்வது உண்டு. உடல்நிலை சரியில்லாமல் ஜெ. அப்போலோவில் அட்மிட் செய்யப்பட்ட சில நாட்களில், மக்கள் மத்தியில் அந்தச் சலசலப்பு பெரியதானது. ‘ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கே அம்மா சிகிச்சை பெறுவதைக் காட்டாமல் இருப்பது ஏன்?’ என்ற கேள்வி வலுத்தது. `ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட இசட் பாதுகாப்பு பிரிவு எங்கே போனது? அவர் எங்கே இருந்தாலும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் இருக்க வேண்டும். அந்தப் பாதுகாப்பைத் திடீரென விலக்கிக்கொண்டது ஏன்? சசிகலாவே இதை முடிவுசெய்தாலும் மத்திய அரசு இதை எப்படி வேடிக்கை பார்க்கிறது?’ என எழுப்பப்பட்ட  அதிமுக்கியக் கேள்விகள் பதில் இல்லாமல் அலைகின்றன. 

ஜெ-வின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில்கூட அவரைப் பார்க்க தமிழ்நாடு ஆளுநர் அனுமதிக்கப்​படவில்லை. இந்த இரும்பு வளையத்தை, சசிகலாவைத் தவிர்த்து வேறு யாரும் போட்டிருக்க முடியாது. அரசுப் பதவிகளிலோ கட்சிப் பொறுப்புகளிலோ இல்லாத ஒருவரின் வார்த்தைக்கு எப்படி இத்தனை பேர் குலைநடுங்​கினார்கள்?

மன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம்! - ஸ்டாலின் Vs சசிகலா

காப்பாற்ற முடியாத மருத்துவப் போராட்டத்தில்தான் ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவர்கள் குழு அறிவித்தது. ஆனால், ஜெ-வின் உடல்நிலை சகஜ​மாகி டிஸ்சார்ஜ் செய்கிற அளவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட​போதுகூட, அதுகுறித்த புகைப்படங்களோ, வீடியோ பதிவோ வெளியாகாதது ஏன்? முதலமைச்சரின் முகத்தைப் பார்க்கத் துடித்த கோடிக்கணக்கான மக்களை எப்படி ஒரே ஒரு தோழி ஏமாற்றலாம்? ‘அம்மாவின் முகத்தைக் கடைசி வரைக்கும் பார்க்கவிடாமாப் பண்ணிட்​டீங்களே பாவிகளா?’ என அப்போலோ வாசலில், ஆம்புலன்ஸை மறித்து அலறிய பெண்களின் கண்ணீருக்கு என்ன பதில்? 

தான் சிகிச்சைபெறுவதை யாரும் பார்க்க வேண்டாம் என ஜெ. சொல்லி யிருந்தாரா? புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது அவர் உத்தரவா என்ன? ஜெ. உடல்நிலை தேறியதாகச் சொல்லப் பட்டபோது பன்னீர்செல்வம் போன்ற முக்கியமான கட்சி நிர்வாகிகளே அவரைப் பார்த்துப் பேச அனுமதிக்கப்​படவில்லையே? 

`எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல தலைவர்களின் மரணங்களின்போதும் இதுபோன்ற சர்ச்சைகள் கிளம்பத்தான் செய்தன. ஆனால், சிகிச்சை நடந்தபோது ஜெயலலிதாவுக்கு சசிகலா எந்த அளவுக்கு உதவியாக இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ‘நிச்சயம் குணமாகிவிடுவார்’ என நம்பியதால்தான் போட்டோ, வீடியோ எல்லாம் எடுக்கவில்லையே தவிர, இப்படி ஒரு துயரமாக மாறும் என யாரும் கற்பனைகூட செய்யவில்லை. போட்டோ எடுக்கும் நிலையிலும் ஜெயலலிதா இல்லை என்பதுதான் உண்மை’ என்கிறார்கள் அப்போலோ தரப்பில். 

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி பதவி இழந்தபோது வண்டி வண்டியாகக் கண்ணீர் வடித்த மாண்புமிகுக்கள், ஜெ. இறந்த தகவல் கேட்டும் சிலையாக நின்றதுதான் உச்சபட்ச அதிர்ச்சி. ஆளுநர் மாளிகைக்குக் கிளம்பிப்போய் சொட்டுக் கண்ணீர்கூட விடாமல் பதவியேற்ற அமைச்சர்கள் சட்டைப்பையிலும், சட்டென ஜெ. படத்தைப் பின்னால் தள்ளிவிட்டு சசிகலா படத்தை வைத்துக்கொண்டார்கள். அப்போலோவிலும், அஞ்சலி, அடக்கம் நடந்த இடங்களிலும் மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினார்கள்; உருண்டு புரண்டார்கள். ஆனால் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என எவர் கண்ணிலும் துளி ஈரத்தைப்  பார்க்க முடியவில்லை. ஜெ. உடலுக்குக் கீழே அமர்ந்து, வெறுமனே மௌனம் காக்கிற அளவுக்கு அமைச்சர்கள் தங்களின் மனநிலையைத் தேற்றி, மாற்றியது எப்படி?

மன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம்! - ஸ்டாலின் Vs சசிகலா

அஞ்சலி செலுத்தும் இடத்தில் ஜெ-வால் கட்டம் கட்டப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் அத்தனை பேரும் ஒன்று சொன்னதுபோல் நின்றதை, ஓ.பி.எஸ் போன்ற மூத்த அமைச்சர்கள் எப்படிச் சகித்துக்கொண்டார்கள்? சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரனைக் கட்டம்கட்டி கம்பி எண்ணவைத்தார் ஜெ. ஆனால், ஜெ-வின் தலைமாட்டில் நாள் முழுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் அதே பாஸ்கரன். அவருக்கு அருகே நின்ற சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுக்கு போன் வந்துகொண்டே இருந்தது. இன்னோர் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம். 26 வயதேயான இளவரசி மகன் விவேக்கைப் பார்த்துக்கூட அ.தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் பயப்படுகிறார்கள். ‘அடுத்து அ.தி.மு.க-வின் தலைமைக்கு தியாகத் தலைவி சின்னம்மாதான் வர வேண்டும்’ என மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஜெயா டி.வி-யில் முழங்குகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் சின்னம்மாவுக்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றுகிறார்கள். செய்தி, விளம்பரம், பேட்டி என, ‘சின்னம்மாவை விட்டால் வேறு நாதி இல்லை’ எனச் சித்திரிக்கும் அத்தனை வேலைகளும் மும்முரமாக நடக்கின்றன.

எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவரப்பட்டு முன்னிறுத்தப்பட்டவர் ஜெயலலிதா. கொ.ப.செ-வாக அறிவிக்கப்பட்டவர். ராஜ்ய சபா எம்.பி., சத்துணவு வாரிய உயர்மட்டக் குழு உறுப்பினர்... எனப் பல பதவிகளில் அமரவைத்து அழகு பார்க்கப்பட்டவர்; 28 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்து தமிழ்நாட்டு மக்களின் மனதில் குடிகொண்டவர்; அரசியல் சூறாவளியாக சுழன்றவர். ஆனால், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அவராலேயே இவ்வளவு சுலபமாக கட்சிக்காரர்களைக் கட்டிவைத்திருக்க முடியவில்லை. கட்சி இரண்டாக உடைந்து, சின்னம் பறிபோய், தோல்விக்கு ஆளாகி, மறுபடியும் கட்சியைத் தொடர ஜெயலலிதா படாதபாடுபட்டார்.

ஆனால், ஜெ-வுக்குக் கிளம்பிய எதிர்ப்பில் ஐந்து சதவிகிதம்கூட சசிகலாவுக்குக் கிளம்பவில்லை. சலசலப்பு புள்ளிகளாகச் சொல்லப்பட்ட தம்பிதுரை, செங்கோட்டையன் போன்ற சீனியர்களே, ‘சின்னம்மாதான் தலைமை ஏற்க வேண்டும்’ என வலிய வந்து முன்மொழி​கிறார்கள். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத, பொதுக்கூட்டம், பிரசாரம் என கட்சி சம்பந்தப்பட்ட எதிலும் முன் நிற்காத சசிகலா, ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்கப்போவது, இதுவரை உலக அரசியலிலேயே நடக்காதது. இப்போது சசிகலா கட்சியில் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. அதற்கான அடையாள அட்டை அவரிடம் இருக்கிறதா... இல்லையா என்பதைக்கூட இதுவரை வேறு யாரும் கண்டது இல்லை. 

இந்த அளவு மாஸ் லீடர் மாஸ்க், எப்படி ஜெ. இறந்த சில நாட்களிலேயே சசிகலாவின் முகத்தில் மாட்டப்படுகிறது? இதற்கான வேலைகளைப் பின்னணியாக இருந்து செய்பவர்கள் யார்? தி.மு.க-வின் உடைப்புத் தந்திரம், மத்திய பா.ஜ.க அரசின்அகாஜுகா நிர்பந்தங்களைத் தாண்டி, எதற்கும் கலங்காதவராக சசிகலாவைப் பொதுச்செயலாளர் பதவியை நோக்கி இழுத்துச் செல்லும் அந்த நம்பிக்கை சக்தி யார்? ஆயிரமாயிரம் கேள்விகள் நீள்கின்றன. 

‘சசிகலாவின் சக்தி சசிகலாவேதான். அவருக்குப் பின்னணி சக்தி எல்லாம் தேவை இல்லை’ எனச் சொல்பவர்கள், ஜெ. இறந்தபோது அப்போலோவில் நடந்த நடவடிக்கைகளைச் சொல்கிறார்கள். 

``ஜெ. இறந்த தகவலைக் கேட்டதும் உடைந்து அழுத சசிகலா, அடுத்தடுத்து செய்த நடவடிக்கைகள் அதை உணர்த்தின. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இதே பன்னீருக்கு எம்.எல்.ஏ ஸீட்கூட கொடுக்கக் கூடாது என ஜெ-விடம் போராடியவர் சசிகலா. ஆனால், இப்போது சூழல் உணர்ந்து அவரே அதே  பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க ஒப்புக்கொண்டார்.

புதிய அமைச்சரவை என்றதுமே, சில அமைச்சர்களை நீக்க உடனே பட்டியல் ரெடி செய்தார்கள் மன்னார்குடி உறவுகள். ஆனால், ஒரு முறைப்போடு அதே அமைச்சரவையை உறுதிசெய்தார் சசிகலா. ஜெ. உடலை அடக்கம்செய்வது எங்கே என அதிகாரிகளும் சீனியர் நிர்வாகிகளும் குழப்பிக்கொண்டே இருந்தபோது, `எம்.ஜி.ஆருக்கு அருகேதான் அக்கா இருக்க வேண்டும். மக்கள் அதைத்தான் ஏற்பார்கள்' என முதலில் சொன்னதும் சசிகலாவே.

ஜெ-வின் அருகிலேயே இருந்து அவருடைய முழு மனதையும் புரிந்தவர் சசிகலாதான். கட்சியில் பெரிய பொறுப்பு அவருக்கு இல்லாவிட்டாலும், கட்சியில் எடுக்கப்பட்ட பெரும்பாலான நடவடிக்கைகள் சசிகலாவாலேயேதான் எடுக்கப்பட்டன. கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்ட பின்னணியில் சசிகலா மட்டுமே இருந்தார். கட்சிக்காரர்கள் அனைவருக்கும் சசிகலாதான் ஜெ-வின் சாவி என்பது நன்றாகத் தெரியும்’’ என்கிறார்கள் விளக்கமாக.

சசிகலாவுக்கு ஜெ. கொடுத்திருந்த மறைமுக முக்கியத்துவம் அப்படி. ஒரு நேர்காணலில், `என் தோழி சசிகலா மிகவும் தவறாகச் சித்திரிக்கப்பட்டு, தவறாகவே புரிந்து​கொள்ளப்பட்டவர். அவர் எனக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதாலேயேதான் அவர் மீது விமர்சனங்கள். என்னை என் அம்மாபோல் பார்த்துக்கொண்டவர் சசிகலா' எனச் சொன்னவர் ஜெயலலிதா.

ஆனாலும், மன்னார்குடி உறவுகளுடன் சேர்ந்து ஆட்சிக்கு எதிரான வேலைகளைச் செய்ததாக, கார்டனை விட்டு அதே சசிகலா வெளியே துரத்தப்பட்ட கதையையும் மறக்க முடியாது. சசிகலாவால் உறவுகளுக்குக் கடிவாளம் போட முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தை, இறுதி அஞ்சலி நிகழ்வுகளே எடுத்துக்காட்டிவிட்டன. 
     
ஜெயலலிதாவின் தோழி என்ற விதத்தில் சசிகலாவைக் கட்சிக்காரர்கள் ஏற்றுக்​கொண்டாலும், உறவினர்கள்ரீதியான அதிருப்தி ஒவ்வொரு தொண்டனின் உள்ளத்திலும் கொந்தளிக்கவே செய்கிறது. கட்சியினரின் ஆவேசத்தைப் புரிந்துகொள்கிற நிலையில் மன்னார்குடி உறவினர்கள் இல்லை. அதிகாரிகளை அணி சேர்ப்பதும் கட்சிக்காரர்களை மிரட்டுவதுமாக, அவர்களின் வேலைகளைத் தொடங்கிவிட்டனர். மன்னார்குடி உறவுகளைப் பொறுத்தமட்டில், அவர்களை வீழ்த்த யாரும் தேவை இல்லை. அவர்களை அவர்களே வீழ்த்திக்கொள்வார்கள். 

இது சசிகலாவுக்குத் தெளிவாகவே தெரியும். ஆனால், கட்சியை நடத்த அவருக்கு நம்பிக்கையான ஆட்கள் வேண்டும்.  அதனால்தான் சர்ச்சைக்கு உரிய உறவுகளை உடனே கார்டன் பக்கம் வரவிடாமல் தடுத்திருக்கிறார். ஆனால், உறவுகளின் பிடியில் இருந்து அவர் விலக நினைத்தபோதே அவருக்கான சிக்கல்களும் தொடங்கிவிட்டன. கட்சியின் சட்ட விதிமுறைகளைச் சொல்லி, `நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என சசிகலாவையே மிரட்டுகிற அளவுக்கு உறவினர்கள் சிலரே வேலை பார்க்கிறார்கள். கார்டனை கடிதம் மூலம் மிரட்டுகிற ஒரு முக்கியப் புள்ளி, `கஷ்டப்பட்ட நான் ரோட்டுல நிற்கிறேன். சும்மா நின்னவங்க எல்லாம் உங்ககூட நின்னு போஸ் கொடுக்கிறாங்க' என்ற சென்ட்டிமென்ட் மிரட்டல்கள், சேகர் ரெட்டி மீதான பிடி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இறுக்கும் என்ற புலனாய்வுத் தகவல்கள், கொங்கு மண்டலத்தில் அணி சேர்க்கும் முயற்சிகள், மீடியாவின் தாக்குதல்கள்... என சசிகலா முன்பு நீண்டு கிடக்கும் சவால்கள் அதிகம். சசிகலாவால் இத்தனை சவால்களைச் சமாளிக்க முடியுமா? 

பரமபதத்தில் சோழிகள் உருட்டப்படுகின்றன. வந்து விழுந்திருக்கிற சோழி... தோழி. 

இன்னோர் ஆட்டம் ஆரம்பமாகிறது!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.