News
Loading...

சசிகலாவை தாக்கிப் பேசியிருந்தால்... அது என் அசரீரியாக இருக்கும்!

சசிகலாவை தாக்கிப் பேசியிருந்தால்... அது என் அசரீரியாக இருக்கும்!

.பன்னீர்செல்வம் முன்பு முதல்வராக ஆனபோது, முதல்வர் நாற்காலியில்கூட  உட்கார மாட்டார். முதல்வர் அறையில் அமர்வதையோ, முதல்வருக்கு உரிய காரில் செல்வதையோ தவிர்த்தார். இனி, ஜெயலலிதா வந்துவிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. இப்போது டெல்லி சென்ற முதல்வர் பன்னீர் செல்வம், தமிழ்நாட்டுக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இப்போது, நன்றாக செயல்படுகிறார்” என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நற்சான்றிதழ் அளிக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன். 

அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஜெயலலிதா மறைவு, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளதா?”

“ஜெயலலிதா காலமாகிவிட்டார். கருணாநிதி உடல்நலம் குணமாகி வீடு திரும்பியுள்ளார். ஒரு தலைவரை வைத்துத்தான் சமுதாயமே நகர்கிறது என்பது தவறான கருத்து. அரசியல் தலைவர்களை, அரசியல் தலைவர்களாக மட்டுமே பார்க்காமல், அதீத சக்தி படைத்தவர்களாகவும், அவதாரப் புருஷர்களாகவும் கருதுவது தவறு.” 

“தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீதான தாக்குதல் பற்றி?”

“தி.மு.க., ம.தி.மு.க. என்ற இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு சம்பந்தப்பட்ட விஷயம் இது. அந்தக் கட்சிகளின் தொண்டர்களின் உணர்வு எப்படியோ அப்படித்தான் நிலவரமும் இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் பண்பாடு இப்படித்தான் இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் தி.மு.க தலைவரைப் பார்க்க தம்பிதுரையும், ஜெயக்குமாரும் போனபோது ஒன்றும் நடக்கவில்லை. ஒருவரை எதிரியாகவும், இன்னொருவரை பரவாயில்லை என்றும் தொண்டர்கள் நினைக்கின்றனர். தலைவர்களைப் பின்பற்றித்தான் தொண்டர்களும் நிற்பார்கள்.” 

“சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்ற கருத்து அந்தக் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் வலுப்பெற்றுள்ளதே?”

“அ.தி.மு.க-வின் பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் முடிவுசெய்ய வேண்டிய விஷயம் இது. அவர்கள் சட்டப்படியான பொதுக்குழுவைக் கூட்டி விதிமுறைப்படி முடிவு எடுப்பார்கள். அதன்படி யாரையும் அவர்கள் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. அ.தி.மு.க-வைப் பற்றி கூற எனக்கு எந்தவித உரிமையும் இல்லை. நான் சசிகலாவை சந்திக்கச் சென்றது, ஜெயலலிதா மரணம் குறித்து துக்கம் விசாரிக்கத்தான். அதுதான் தமிழகத்தின் மரபு. இதில் அரசியல் காரணங்கள் ஒன்றும் இல்லை.” 

“2011 டிசம்பரில் அ.தி.மு.க-வில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது நீங்கள், சசிகலாவை தாக்கிப் பேசினீர்களே?”

“நான் அவர்களைப் பற்றி பேசினேனா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்கள் பற்றி எப்போதும் எந்தக் கருத்தும் நான் தெரிவிப்பது இல்லை. நான் பேசியதாக நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் அது எனது அசரீரியாக இருக்கும்.”  

“ஜெயலலிதா  மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தி.மு.க., பா.ம.க கட்சிகள் வலியுறுத்தி உள்ளனவே?”

“எனக்கு அதில் உடன்பாடு இல்லை.  ரப்பரை இழுப்பதைப்போல, சுதந்திரத்தையும் இழுத்தால், ஒரு கட்டத்தில் அது அறுந்துபோய்விடும்.”

“சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் பேசியிருக்கிறாரே?”

“அவருடைய விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தலைவருக்கும் பல பக்தகோடிகள், ஆதரவாளர்கள் உள்ளனர். சில கட்சிகளில் தலைவர்களைத் தெய்வமாக்கி வைத்துள்ளனர். ஒரு தலைவரைப் பின்தொடர்பவர் களைவிட  பக்தர்கள்தான் அதிகம் உள்ளனர். அ.தி.மு.க-வில் ஆட்சி அமைப்பதற்கு உரிய பெரும்பான்மை இருக்கிறது. எம்.எல்.ஏ-க்கள் அவர்களுடைய தலைவரைத் தேந்தெடுப்பார்கள். இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது.” 

“மத்திய அரசுக்கு ஆதரவாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சமீபகாலமாக அ.தி.மு.க ஆதரவு தெரிவித்து வருகிறதே?”

“ஜி.எஸ்.டி மசோதா வந்தபோது அதனால் மாநில உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்று ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். அதை அமல்படுத்துவது இன்னும் பரிசீலனையில்தான் இருக்கிறது. மத்திய அரசுக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்கிறது என்ற ஒரு ஐயம் வராமல் தடுப்பது  அவர்களின்  சுயதன்மைக்கு அவசியமான ஒன்று. சுயதன்மையை இழந்து பி.ஜே.பி பக்கம் சாய்வதாகத் தெரிந்தால்... அ.தி.மு.க அல்ல, எவர் சாய்ந்தாலும், பகுத்தறிவு இயக்கத்தில் வளர்ந்த தமிழகம் அவர்களை மன்னிக்காது.” 

“அ.தி.மு.க-வை மோடி வளைக்கப் பார்க்கிறாரா?”

“தமிழகத்தின் மீது மோடி அக்கறை செலுத்துகிறார். நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கிறார்.  அதேபோல இப்போது அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அதை மறுக்க வேண்டியது அ.தி.மு.க-வின் கடமை.”

“பி.ஜே.பி-யைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியை கோவையில் சந்தித்திருக்கிறீர்களே. என்ன காரணம்?”

 “கோவையில் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, அங்குள்ள ஆர்ய வைத்திய ஃபார்மஸிக்குச் சென்றேன். அங்கு சுப்பிரமணியன் சுவாமி புத்துணர்வு சிகிச்சைக்காக வந்திருப்பதாகச் சொன்னார்கள்.  தெரிந்த தலைவர் என்பதால் அவரை சந்தித்தேன். அவருடைய உடல்நிலை குறித்து என்னிடம் சொன்னார். இன்றைய பொதுவான அரசியல் நிலவரம் குறித்தும் பேசினோம்.”

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.