News
Loading...

ரெட்டிக்கும், ராவுக்கும் விசுவாசம்! - மீடியாவை விரட்டிய அதிகாரிகள்!

ரெட்டிக்கும், ராவுக்கும் விசுவாசம்! - மீடியாவை விரட்டிய அதிகாரிகள்!

‘தமிழகத்திலேயே முதன்முறையாக’ என்கிற வரலாற்று அவமானத்தைப் படைத்திருக்கிறது தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை. அதைவிட அவமானம், தலைமைச் செயலகத்திலேயே அவரது அறை சோதனை போடப்பட்டிருப்பது. இன்னொரு மானக்கேடும் உண்டு. துணை ராணுவத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இது எல்லாவற்றையும்விட கொடுமை கைதுசெய்யப்பட்டவர்களை போட்டோ எடுக்கக்கூடாது என்று மீடியாவை தமிழக போலீஸ் மிரட்டியதுதான். சேகர் ரெட்டியின் செல்வாக்கு தமிழக காவல் துறையில் எவ்வளவு ஊடுருவி இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் சாட்சி.

சம்பவம் 1

மணல் கான்ட்ராக்டரும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமாக இருந்தவருமான சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டுதான், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் தலை உருண்டதற்கு அச்சாரம். சேகர் ரெட்டி அவரது கூட்டாளிகள் சீனிவாசலு ரெட்டி, பிரேம் ஆகியோர் வீடுகளில் சோதனை போட்டது வருமானவரித் துறை. சோதனையில் ரூ. 131 கோடி ரொக்கப் பணமும், 171 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் மீது லஞ்ச ஊழல், கூட்டுச்சதி உள்பட 5 சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து சி.பி.ஐ. கைதுசெய்தது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கிற சி.பி.ஐ. கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது செய்தி சேகரிக்க ஏராளமான மீடியாவினர் குவிந்திருந்தனர்.

ரெட்டிக்கும், ராவுக்கும் விசுவாசம்! - மீடியாவை விரட்டிய அதிகாரிகள்!

ராம மோகன ராவ் வசிக்கும் அண்ணா நகர் பகுதியில்தான் சேகர் ரெட்டியின் வீடும் உள்ளது. அங்கேயும் கேமராவுடன் திரண்டனர் பத்திரிகையாளர்கள். வீட்டின் போர்டிகோவில் இருந்து உச்ச வேகத்தில் வெளியேறிய கார் ஒன்று மீடியாவினர் மீது மோதுவது போல் சீறிப் பாய்ந்தது. அந்த காரில் சேகர் ரெட்டியின் மனைவி மற்றும் சிலர் இருந்தனர். வீட்டில் இருந்த பூந்தொட்டிகளை இடித்துத் தள்ளியபடி வேகம் பிடித்துப் பறந்து சென்றது அந்த கார். வீட்டில் இப்படி என்றால் கோர்ட்டில் அதைவிட மோசமான அனுபவம். சேகர் ரெட்டியை மீடியாவினர் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்பதற்காக கட்டுமஸ்தான ஆட்கள் (பெளன்ஸர்கள்) பத்திரிகையாளர்களைப் படம் எடுக்கவிடாமல் சுற்றி நின்று கொண்டதோடு கேமராமேன்களைத் தள்ளிவிட்டனர். பெளன்ஸர்களுக்குத் துணையாகச் செயல்பட்டனர் போலீஸார். பெளன்ஸர்களைப் பாதுகாப்பது போல ஐகோர்ட் போலீஸ் உதவி கமிஷனர் ஜான் அருமைராஜ், இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் வளையம் அமைத்தபடி நின்றனர். மஃப்டி பெண் போலீஸார், பெண் செய்தியாளர்களைத் தள்ளினார்கள். சேகர் ரெட்டியைப் படம் எடுக்க முடியாமல் கேமராக்கள் கீழே விழுந்தன. பெளன்ஸர்களும் காக்கிகளும் கைகோத்துக் கொண்ட காட்சியைப் பார்த்து மீடியாவினர், “ஐகோர்ட்டுக்குள் பெளன்ஸர்கள் எப்படி வர முடியும்? அவர்்களுக்கு என்ட்ரி பாஸ் எப்படிக் கிடைத்தது?’’ என்று போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். எதையும் கண்டுகொள்ளவில்லை போலீஸ். இரண்டு தரப்பும் கூட்டணி போட்டு கேமராக்கள் மீது கைவைத்து படம் எடுக்க முடியாத அளவுக்குச் செயல்பட்டனர். 

‘‘வழக்கு விசாரணைக்கு வருபவர்கள் வழக்கறிஞரின் அனுமதிச்சான்று, வழக்கு பற்றிய விவரத்தைச் சொன்னால்தான் அனுமதிச் சீட்டே கிடைக்கும். மத்திய தொழிற் பாதுகாப்புப் படை பாதுகாப்பில் இருக்கும் ஐகோர்ட்டுக்குள் பெளன்ஸர் களை உள்ளே அழைத்து வந்தது போலீஸ். சேகர் ரெட்டிக்குக் காட்டப்பட்ட விசுவாசம் இது” என்று வழக்கறிஞர்கள் சிலர் குற்றம்சாட்டினார்கள்.

ரெட்டிக்கும், ராவுக்கும் விசுவாசம்! - மீடியாவை விரட்டிய அதிகாரிகள்!

சம்பவம் 2

தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில் ரெய்டு நடத்தப்பட்டது. அங்கே செய்தி சேகரிக்க குவிந்த மீடியாவினரும் கீழே தடுத்து நிறுத்தப்பட்டனர். இரண்டாவது தளத்தில் இருக்கும் தலைமைச் செயலாளர் அறைக்குச் செல்லவிடவில்லை. நீதிமன்றத்தில் காக்கிகள் இதைச் செய்தார்கள் என்றால், இங்கே செய்தித் துறையினர். ராம மோகன ராவ் பற்றிய செய்திகள் மீடியாவில் வந்துவிடக்கூடாது என்பதற்காக செய்தித் துறையினர்,  பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தினார்கள். ராம மோகன ராவ் அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட ஃபைல்கள், லேப் டாப், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை யாரும் படமெடுத்துவிடக் கூடாது என்பதில் உஷாராக இருந்தனர். செய்தித் துறையின் கூடுதல் இயக்குநர் எழில் ஏற்பாட்டில்தான் இதெல்லாம் நடந்தது. செய்தித் துறையினர் ராம மோகன ராவுக்காக வேலை பார்த்தார்கள்.

போலீஸும் அரசு அதிகாரிகளும் ராம மோகன ராவுக்கும் சேகர் ரெட்டிக்கும் விசுவாசம் காட்டுவது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. இதனால்தான் ரெய்டுக்கு துணை ராணுவப் படை அழைத்து வரப்பட்டதா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.