News
Loading...

ரத்தவெறி பிடித்து அலைகிறார் வைகோ! கொந்தளிக்கும் தி.மு.க-வின் மா.செ.

ரத்தவெறி பிடித்து அலைகிறார் வைகோ!

டல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட கருணாநிதியை நலம் விசாரிக்கச் சென்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை, தி.மு.க தொண்டர்கள் தடுத்து நிறுத்தி, தாக்க முயற்சித்த சம்பவம் தமிழக அரசியல் அரங்கை அதிரவைத்தது. வைகோவுக்கு எதிரான தி.மு.க-வினரின் அந்த நடவடிக்கையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார் தி.மு.க-வின் அரியலூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சிவசங்கர். இது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

‘‘தி.மு.க., அ.தி.மு.க தொண்டர்கள் அடித்துக்கொண்டு தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடவேண்டும். அதைப் பார்த்து குளிர்காய வேண்டும் என்று வைகோ நினைக்கிறார். அரசியலில் நாடகம் ஆடுவதே அவருக்கு வேலையாகிவிட்டது. கொஞ்ச நாட்களாகவே, தி.மு.க-வுக்கு எதிராக மக்களிடம் விஷத்தை விதைத்துக்கொண்டிருக்கிறார். சாதி ரீதியாகத் தலைவரை வைகோ கேலி பேசியது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

ஆடுதுறையில் அண்ணன் கோ.சி.மணியின் இறுதிச்சடங்கு நடந்துகொண்டிருந்த நேரத்தில், உள்ளே நுழைய வைகோ முற்பட்டார். ‘எங்க தலைவரை திட்டிவிட்டு, நல்ல பெயர் வாங்குவதற்காக இங்கு வந்திருக்கியா?’ என்று கேட்டு தி.மு.க தொண்டர்கள் வைகோவைத் தடுத்து நிறுத்தினார்கள். அதற்கு அவர், ‘இது ஸ்டாலின் செய்த ஏற்பாடுதான்’ என்று பத்திரிகையாளர்களிடம் பதிவு செய்தார். அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பதற்கு முதல் நாள் அப்போலோவில் பத்திரிகையாளர்களிடம், ‘சில நயவஞ்சகர்கள் ஆட்சியை குறுக்குவழியில் கைப்பற்ற நினைக்கிறார்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்ப்பதே தி.மு.க-வின் வேலை’ என்று தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்தார். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்குள் கலகத்தை மூட்டிவிட்டு தொண்டர்கள் அடித்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். அரசியலில் ரத்த வெறிபிடித்து வைகோ அலைகிறார்.

 ஜெயலலிதா இறந்த நாள் அன்று தளபதி ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்துவிட்டுச் சென்றனர். அந்த இடத்தில்கூட ஜெயலலிதாவைப் பற்றிப் பேசாமல், தி.மு.க-வை வசைபாடினார் வைகோ. நாகரிகம் கருதி இவரது பேச்சை மீடியாக்காரர்கள் துண்டித்தார்கள். அந்த அளவுக்கு அவரது பேச்சு மிக மோசமாக இருந்தது. ஓர் அரசியல் கட்சியின் தலைவரான இவர், எந்த இடத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்கிறார். அரசியலில் நாகரிகம் தெரியாமல் பேசுவது வைகோதான். ‘இந்த சந்தர்ப்பத்தில், இப்படி யாரும் பேச மாட்டார்கள். இந்தப் பேச்சுக்கு அன்னாரின் முகத்தில் காரி உமிழ்வார்கள்’ என்று அப்போதே ஃபேஸ்புக்கில் நான் பதிவு வெளியிட்டிருந்தேன். தலைவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது வைகோ வரக்கூடாது என்று தொண்டர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதேபோல், தலைவரை திருமாவளவன் நலம் விசாரிக்க வந்தபோது, ‘வைகோ இங்கு வரக்கூடாது’ என்று தொண்டர்கள் அவரிடம் சொல்லியுள்ளனர். இந்தத் தகவல் எப்படியும் வைகோவுக்குப் போயிருக்கும். ஆனால், அப்படியிருந்தும் மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்றால், ஏதாவது பிரச்னை செய்து தி.மு.க-வுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதுதானே அவரது நோக்கம்? 

ரத்தவெறி பிடித்து அலைகிறார் வைகோ!

திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் உட்பட எல்லோரும் வருத்தம் தெரிவிக்கிறார்கள். தொண்டர்களைக் கடுமையாகக் கண்டித்து தளபதி ஸ்டாலின் தனது வருத்தத்தைப் பதிவுசெய்துள்ளார். இத்தனைக்கும் பிறகு, ‘நான் கனிமொழியிடம் பேசிவிட்டுத்தான் வருகிறேன். இது ஸ்டாலின் ஏற்பாடுதான். தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுகிறார் ஸ்டாலின்’ என்று வைகோ அறிக்கை விடுகிறார். ஸ்டாலின் அறிக்கைவிட்ட பிறகும் அவரைப் பற்றி விமர்சிப்பது சரியா? இது அரசியல் கட்சித் தலைவர் செய்யும் வேலையா?

 தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது, ஸ்டாலினுக்குப் பதவி கிடைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் வைகோ கட்சி நடத்துகிறாரே தவிர, மக்களுக்கு நல்லது செய்வதற்காக அல்ல. எங்கள் கட்சித் தலைமை அவரைப் பற்றிப் பேசக்கூடாது என்று சொல்லிய பிறகும் நான் கருத்து தெரிவித்துள்ளேன். என் மீது கழகம் நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. நான் கவலைப்பட மாட்டேன். நானும் ஒரு அடிமட்டத் தொண்டன்தான். தலைவரைப் பற்றிப் பேசினால் விட்டுக்கொடுக்க மாட்டேன்’’ என்று கொந்தளித்து முடித்தார் சிவசங்கர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.