News
Loading...

செல்போன் டவர்கள் விற்பனைக்கா? - கொந்தளிக்கும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்

செல்போன் டவர்கள் விற்பனைக்கா? - கொந்தளிக்கும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்

ங்கள் சொந்த வீட்டிலேயே காசு கொடுத்து சாப்பிடும் நிலை உங்களுக்கு உருவானால் எப்படி இருக்கும்? மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இப்படி ஒரு சங்கடத்துக்கு ஆளாக உள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் உயிர்மூச்சாக விளங்கும் 65 ஆயிரம் செல்போன் டவர்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் அரசின் மறைமுக முயற்சி,  பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், ஊழியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சமீபத்திய வர்தா புயலின்போது காணமுடிந்தது. புயலின் கோரத் தாண்டவத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் செல்போன், இன்டர்நெட் சேவைகள் ஸ்தம்பித்துப்போயிருந்த நேரத்தில், மக்களுக்குக் கைகொடுத்தது பி.எஸ்.என்.எல் தொடர்பு மட்டுமே! ‘‘இதற்குக் காரணம், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தரம்வாய்ந்த நெட்வொர்க். சேவையிலும் நாங்கள்தான் முன்னிலையில் உள்ளோம்” எனப் பெருமையோடு சொல்கிறார், பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சி.செல்லப்பா. அவரிடம் பேசினோம்.

செல்போன் டவர்கள் விற்பனைக்கா? - கொந்தளிக்கும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்

“தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மைக்ரோவேவ் டவர்களை மட்டுமே சார்ந்துள்ளன. இயற்கைச் சீற்றங்களின்போது அவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டுவிடும். ஆனால், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் வலுவானது. பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களால் இவை இணைக்கப்பட்டுள்ளன.  மழை, புயல் என எது வந்தாலும் பி.எஸ்.என்.எல் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. இந்தியா முழுவதும் எங்களுடைய 65 ஆயிரம் செல்போன் டவர்களில் சுமார் 50 ஆயிரம் டவர்கள் இப்படி இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 50 சதவிகிதமான டவர்கள், எக்ஸ்சேஞ்ச் வளாகத்துக்கு உள்ளேயே அமைந்துள்ளன. எனவே, டவரில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்துவிடுவோம். எனவே, சேவை ஒருபோதும் பாதிக்கப்படாது.

கட்டமைப்பு வசதிகளில் மட்டுமல்ல, பாரபட்சமற்ற சேவையிலும் நாங்கள்தான் நம்பர் ஒன். தனியார் நிறுவனங்களின் டவர்கள், பெரும்பாலும் நகர்ப்புறங்களில் மட்டுமே உள்ளன. கிராமப்புறங்களில் இருப்பது நாங்கள்தான். நக்சலைட்டுகள் பிரச்னை உள்ள பகுதிகளிலும்கூட பி.எஸ்.என்.எல் சேவை கிடைக்கிறது. 

ஆனால், எங்கள் சேவையின் தரத்தை உயர்த்துவதில் அரசு முட்டுக்கட்டை போடுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு 4ஜி அனுமதியைக் கொடுத்த அரசு, தன் சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு மட்டும் அனுமதி தராமல் இழுத்தடிக்கிறது. மேலும், அடிமடியிலேயே கைவைப்பதைப்போல 65 ஆயிரம் டவர்களைத் தனியாருக்குக் கொடுக்க முயற்சிக்கிறது. இதை எதிர்த்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் 50 ஆயிரம் அதிகாரிகள், இரண்டு லட்சம் ஊழியர்கள், ஒன்றரை லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் என அனைவரும் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தோம். இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார் அவர் உறுதியாக.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 65 ஆயிரம் டவர்களை நிர்வகிக்க துணை நிறுவனம் ஒன்று உருவாக்கப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் கூறிவருகிறது. ‘‘இப்படிச் செய்வதன் மூலமாக, எளிதாக 65 ஆயிரம் டவர்களையும் தனியாருக்குக் கொடுத்துவிடலாம் என்பது அரசின் கணக்கு” என்கிறார்கள் ஊழியர்கள். அதன்பின் தனது இந்த டவர்களின் சேவை பெற பி.எஸ்.என்.எல் நிறுவனமே கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும். இப்படி, இந்தப் பொதுத் துறை நிறுவனம் படிப்படியாக ஒழிக்கப்பட்டுவிடும் என்பது அதிகாரிகள், ஊழியர்களின் அச்சம். ஆனால், ‘‘நிறுவனத்தை லாபத்தில் இயங்க வைக்கவே இந்த முயற்சி. இதை ஊழியர்களுக்குப் புரிய வைப்போம்” என்கிறார் பி.எஸ்.என்.எல் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம்  ஸ்ரீவத்ஸவா. டவர்களை நிர்வகிக்கப் போகும் புதிய நிறுவனத்தில் பி.எஸ்.என்.எல் சார்பில் யாராவது இருப்பார்களா? பி.எஸ்.என்.எல்-லுக்கு ஏதேனும் உரிமை இருக்குமா என மத்திய அரசு எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. 

இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது வாடிக்கையாளர்களையும் பாதிக்கும் என்பதே உண்மை. இந்தியாவில் முதன்முதலில் தனியாருக்குத் தான் செல்போன் சேவைக்கான அனுமதி தரப்பட்டது. அப்போது இன்கமிங், அவுட்கோயிங் என அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. 2002-ல், செல்போன் சேவையில் பி.எஸ்.என்.எல் இறங்கியவுடன், இன்கமிங் அழைப்புகள் இலவசம் என்று அறிவித்தது. அதன் பிறகுதான், தனியார் நிறுவனங்களும் இன்கமிங் அழைப்புகளை இலவசமாக மாற்றின. எனவே, பி.எஸ்.என்.எல் நிறுவனம் பலவீனமானால், செல்போன், இன்டர்நெட் கட்டணங்கள் உயரக்கூடும்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.