News
Loading...

ராம மோகன ராவ் அதிரடி! என்ன பின்னணி?

ராம மோகன ராவ் அதிரடி! என்ன பின்னணி?

ரெய்டு... துணை ராணுவம் குவிப்பு... கோட்டையில் சோதனை... மருத்துவமனை அட்மிட் என தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை சுற்றி நடந்த நிகழ்வுகளின் க்ளைமாக்ஸ் பிரஸ்மீட்டில் முடிந்திருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கொளுத்திப் போட்ட திரி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. அவர் பேட்டியில் சொன்ன விஷயங்களின் பின்புலங்கள் என்ன?

உதய் திட்டம், காவிரிப் பிரச்னை, மதுரவாயல் - துறைமுகத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா இல்லாத நிலையில் ‘மத்திய அரசுக்கு ஆமாம் சாமி’ போட்டு வந்தது அ.தி.மு.க. அரசு. தலைமைச் செயலாளரின் தலையை உருட்டியதோடு கோட்டையில் புகுந்து சோதனை போட்டார்கள். இந்த நிலையில், சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்கிற புயல்வேகப் பணிகளில் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை மாநில அரசு. மாநில சுயாட்சியைவிட சசிகலாவுக்கு மனசாட்சியாக இருக்கவே விரும்பினார்கள். எந்த போதி மரத்தின் கீழ் ஞானோதயம் பெற்றார்களோ தெரியவில்லை திடீரென வெளிப்பட்டார் அ.தி.மு.க. எம்.பி-யான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம். ‘வருமானவரித் துறை சோதனைகள் கூட்டாட்சித் தத்துவத்தின் சில அடிப்படைக் கேள்விகளையும் எழுப்புகின்றன. ராம மோகன ராவ் வீட்டில் சோதனையிட்டபோது மாநில அரசின் காவல் துறை உதவியை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அதை கேட்காமல், துணை ராணுவத்தைக் கூட்டிச் செல்வது ஒட்டுமொத்த மாநிலமும் நம்பகத்தன்மையற்றது என்று கருதுவதற்கான தோற்றத்தைத் தருகிறது. இது மிகவும் தவறான பின்பற்றக் கூடாத முன்னுதாரணமாகும்’ என சொல்லியிருக்கிறார் எஸ்.ஆர்.பி. தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு இப்படி எஸ்.ஆர்.பி-யை வைத்து அறிக்கைவிட்டதும்கூட ‘கடிதொச்சி மெல்ல எறிக’ ரகம்தான்.

எஸ்.ஆர்.பி. அறிக்கை வெளிவந்த சில மணி நேரத்திலேயே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார் ராம மோகன ராவ். அதன்பிறகுதான் மத்திய அரசுக்கு, மாநில அரசுக்கு எதிராக பிரஸ் மீட்டில் சார்ஜ் வைத்தார். எஸ்.ஆர்.பி. அறிக்கைக்கும் ராம மோகன ராவ் பிரஸ் மீட்டுக்கும் இடையே இருந்தது 15 மணி நேரம். ஆஸ்பிட்டலில் இருந்து வந்தவர் ஓய்வு எடுத்திருக்கலாம். டாக்டரின் அறிவுரையும் அதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால், அரசுகளுக்கு எதிராக அஸ்திரத்தைத் தூக்க அவருக்கு அறிவுரை வழங்கியது யார்? 

ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனபிறகு வந்த முதல் அகில இந்திய தலைவர் ராகுல் காந்திதான். அவரின் விசிட்டுக்கு பிறகுதான் அரசியல் மேகங்கள் மாறத் தொடங்கின. ‘‘எனக்கு  ஆதரவாக  பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எஸ்.ஆர்.பி. ஆகியோருக்கு நன்றி’’ என ராம மோகன ராவ் சொன்னதற்கு என்ன அர்த்தம்?

வருமானவரித் துறையினர் சோதனை போட்டபிறகு அந்த வீட்டில் என்னென்ன கண்டெடுக்கப் பட்டன என்பது பற்றிய விவரங்களை எல்லாம் தொகுத்து சம்பந்தப்பட்டவரிடம் கையெழுத்து வாங்கும் ‘பஞ்சநாமா’ ஆவணத்தை ராம மோகன ராவ் வெளியிட்டார். இப்படியான ஆவணத்தை வெளிப்படையாகச் சொல்லலாமா?

‘‘தலைமை செயலாளர் அறையில் நடந்த சோதனை என்பது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல். இதைத் தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது’’ என்கிறார் ராம மோகன ராவ். காவிரி பிரச்னையில் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு நடந்து கொண்டபோது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல் என அவர் சொல்லவில்லை. தனக்கு எதிரான விவகாரம் என்றதும் அரசியல் சட்டத்தை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். ‘‘இதைத் தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது’’ எனச் சொல்லி தமிழக அரசுக்கு மறைமுகமாக செக் வைத்திருக்கிறார். `தமிழக அரசு தவறிவிட்டது’ என்றால் அந்த அரசை நடத்தும் ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் குறிவைக்கிறார் ராம மோகன ராவ். மணல் கான்ட்ராக்ட் எடுத்தது சேகர் ரெட்டி. மணல், பொதுப்பணித் துறையின் கீழ் வருகிறது. அந்தத் துறையை வைத்திருந்தது ஓ.பன்னீர்செல்வம். அவரோடு சேர்ந்துதான் திருப்பதியில்  சேகர் ரெட்டி மொட்டை போட்டு போஸ் எல்லாம் கொடுத்தார். இதையெல்லாம் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் ராம மோகன ராவ்.

‘‘சட்டப்படி நான்தான் தலைமைச் செயலாளராக நீடிக்கிறேன். என்னை நியமனம் செய்தது முதல் அமைச்சர் புரட்சித்தலைவி அம்மாதான்’’ என ஆணித்தரமாகச் சொல்கிறார் ராம மோகன ராவ். இப்படி சொல்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அந்த தைரியம் எங்கிருந்து அவருக்கு வந்தது என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.

‘‘தலைமைச்செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையில் முதல்வரின் ரகசிய ஆவணங்கள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான கிரிமினல் வழக்கு களுக்கான ஆவணங்கள் எல்லாம் உள்ளன’’ எனச் சொல்லியிருப்பதன் மூலம் அந்த ரகசியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும் என்பதை யாருக்கோ மறைமுகமாக உணர்த்தி யிருக்கிறார்.

‘‘மறைந்த முதல்வர் அம்மா இப்போது உயிருடன் இருந்திருந்தால் மத்திய அரசுக்கு இந்த தைரியம் வந்திருக்காது’’ என்கிறார். அதோடு, ‘‘அப்போலோ மருத்துவமனையில் முதல்வரின் உடல்நிலையை கவனித்து வந்தேன்’’ என்றெல்லாம் சொல்லிவிட்டு போகிறபோக்கில், ‘‘என் வீட்டில் சோதனை நடந்தபோது அ.தி.மு.க-வினர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்?’’ எனச் சொல்கிறார். ஜெயலலிதாவையும் அ.தி.மு.க. தொண்டர் களையும் அவர் ஏன் துணைக்கு அழைத்தார் என்பதிலும் அர்த்தம் பொதிந்திருக்கிறது. 

‘‘அம்மாதான் என்னை நியமித்தார். அவர்தான் எனக்குப் பயிற்சி அளித்தார். அவரின் வழிக்காட்டுதல்படிதான் நடந்தேன்’’ எனச் சொல்வது ஒரு விஷயத்தைப் புரிய வைக்கிறது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராம மோகன ராவ் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அதிகாரி. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தேர்வுசெய்கிறது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பது மத்திய அரசின் பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறைதான். ஆனால், ராம மோகன ராவின் விசுவாசம் ஜெயலலிதாவிடம் மட்டுமே வெளிப்படுகிறதே?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.