News
Loading...

தமிழர் மரபை மூடி மறைக்க சதி! மௌனம் காக்கும் மத்திய அரசு!

தமிழர் மரபை மூடி மறைக்க சதி! மௌனம் காக்கும் மத்திய அரசு!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வு ஒரு சதவிகிதம்கூட முடியாத நிலையில், தொடர் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இதையடுத்து, ‘தமிழரின் பண்பாடு, நாகரிகம் வெளிவருவதை விரும்பாத சக்திகள் ஆய்வைத் தடுக்கின்றன’ என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

கீழடியில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தொல்லியல் ஆய்வில், தமிழர்களின் பண்டைய நாகரிகத்தைப் பறைசாற்றும் 5,300 அரிய பொருட்கள் கிடைத்தன. தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி தொடர வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன. ஆனால், தொடர் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்தியா முழுவதும் 5 இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்தன. அதில் கீழடி தவிர ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 இடங்களில் தொடர் ஆராய்ச்சி நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால், தமிழகம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலம் வத் நகரில் இது சம்பந்தமாக நடைபெற்ற விழாவில் மாநில முதல்வரோடு மத்திய அமைச்சரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடி குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு எழுதிவரும் எழுத்தாளர் சு.வெங்கடேசனிடம் பேசினோம்.

“திராவிட நாகரிகத்தின் ஆணிவேரான தமிழர்களின் தொன்மை, தனித்துவம் வாய்ந்தது. கீழடியில் நடைபெற்ற ஆய்வில் அதற்கான ஆதாரங்கள் நிறையக் கிடைத்திருக்கின்றன. இந்தியாவில் ஐந்து இடங்களில் அகழாய்வுகள் நடந்துவந்த நிலையில் இங்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கீழடி ஆய்வை 110 ஏக்கர் பரப்பளவில் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை ஒரு சதவிகிதம்கூட ஆய்வு முழுமையாக நிறைவடையவில்லை. ஒரு சதவிகித ஆய்வுகூட முடியாத நிலையில் எது குறித்து ஆய்வறிக்கை தயாரிக்க முடியும்? அந்த இடத்தில் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகத்தைப் பற்றி ஆய்வு அறிஞர்களால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது.

தமிழர் மரபை மூடி மறைக்க சதி! மௌனம் காக்கும் மத்திய அரசு!

முழுமையாக ஆய்வு நடைபெற்றால் தமிழர்களின் தொன்மையான தகவல்கள் வெளி வந்துவிடும் என்று கருதுகின்றனர். எனவே, முழுமையான அறிக்கை வெளிவந்து விடக்கூடாது என்று நினைக்கின்றனர். அவர்கள்தான் இந்த ஆய்வைத் தடுக்கின்றனர். அகழ்வாராய்ச்சி தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு வட இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. கீழடி ஆய்வைத் தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசுதான் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து பிரதமருக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

கீழடி ஆய்வு முழுமையாக நடைபெறாமல் சங்பரிவார் அமைப்புகள் தடுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். “கீழடி அகழ்வாராய்ச்சியில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள் பொக்கிஷமாகக் கிடைத்திருக்கின்றன. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 5 ஆயிரம் பொருட்களில் ஒன்றுகூட மதசார்பு கொண்டவை அல்ல. அத்தனைப் பொருட்களும் மதசார்பின்மைக்கு அடையாளமாக இருக்கின்றன.

தமிழர் மரபை மூடி மறைக்க சதி! மௌனம் காக்கும் மத்திய அரசு!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒரு கால கட்டத்தில் நாடாளுமன்றம், அறிவியல் அமைப்புகள், தேவாலயங்கள் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது. மோதலின் இறுதியில், இனி அரசாங்கத்தில் தேவாலயங்கள் மேலாதிக்கம் செலுத்தக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. தேவாலயங்களின் ஆதிக்கம் குறைந்த பிறகுதான் அந்த நாடுகளில் வேகமான அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தியாவில் பெளத்த மதம் அழிந்தபிறகு, சாதி மத ஆதிக்கம் அதிகரித்தது. கீழடியில் ஆய்வு நிறுத்தப்பட்டதற்கு இதுபோன்ற ஆதிக்கம்தான் காரணம். தமிழகத்தின் வரலாற்றைக் கட்டமைக்கும் நல்ல வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். ஆனால், இப்படிப்பட்ட வரலாற்று உண்மைகள் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆய்வு தொடர அனுமதி கொடுக்க மறுக்கின்றனர்” என்றார்.

மாநில தொல்லியல் துறையைக் கவனித்துவரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் பேசினோம். “கீழடியில் ஆய்வு மேற்கொள்ள இந்த ஆண்டுக்கு மத்திய தொல்லியல் துறை நிதி ஒதுக்கவில்லை என்பது எங்கள் கவனத்துக்கு வந்தது. நான் அண்மையில் டெல்லி சென்றபோது மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறேன். விரைவில் நிதி ஒதுக்கி ஆய்வு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான உத்தரவுகள் வரும் என்று மத்திய அரசிடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. இதைத் தெரிந்துகொண்டுதான் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவசரமாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்” என்றார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.