பிரசித்தி பெற்ற டாடா குழும நிறுவனங்களின் முதலீட்டு நிறுவனம் ‘டாடா சன்ஸ்’ ஆகும். இதன் தலைவராக தமிழரான என்.சந்திரசேகரன் (வயது 54) நேற்று நியமிக்கப்பட்டார்.
1868–ம் ஆண்டு, டாடா குழுமங்களின் நிறுவனரான ஜாம்சேட்ஜி டாடாவால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தலைவர் பதவியை வழக்கமாக டாடா குழுமங்களின் தலைவர்தான் வகிப்பது வழக்கம்.
மிஸ்திரி கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ரத்தன் டாடா தற்காலிகமாக இந்த பதவியில் அமர்ந்தார்.
இப்போது இந்த பதவியில் சந்திரசேகரனை அமர்த்தலாம் என 5 உறுப்பினர்களை கொண்ட தேடல் குழு இறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, டாடா சன்ஸ் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் சந்திரசேகரனின் நியமனம் முடிவு செய்யப்பட்டது.
இவர் டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
சந்திரா என்றழைக்கப்படுகிற இவர், தமிழ்நாட்டின் நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் பிறந்தவர். திருச்சியில் ஆர்.இ.சி. என்றழைக்கப்பட்டு வந்த பிராந்திய பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ., பட்டம் பெற்றவர். 1987–ம் ஆண்டு டி.சி.எஸ். நிறுவனத்தில் சேர்ந்தார். அவரது தலைமையின் கீழ் அந்த நிறுவனம் 2015–16 நிதி ஆண்டில் 16.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடி) லாபம் சம்பாதித்தது குறிப்பிடத்தகுந்தது. புகைப்பட கலைஞர், இசை ஆர்வலர், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் என பல முகங்களை கொண்டவர்.
தேசிய கம்பெனி சட்ட நடுவர் மன்றத்தில் மிஸ்திரி தொடுத்துள்ள வழக்கால் டாடா சன்ஸ் சட்ட போராட்டத்தை சந்தித்து வருகிற தருணத்தில், சந்திரசேகரன், அதன் தலைமை பொறுப்புக்கு வருகிறார்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.