News
Loading...

ஜல்லிக்கட்டு பார்க்க ஆசை... போராட்டத்துக்கும் தயார்!

ஜல்லிக்கட்டு பார்க்க ஆசை... போராட்டத்துக்கும் தயார்!

தமிழ் மக்களின் உணர்வுகளை நீதிமன்றங்கள் புரிந்துகொள்ளாத சூழலில், நீதி தேவதையின் பக்கமிருந்து ஒற்றை ஆதரவுக்குரலாக ஒலித்தவர், உச்ச நீதிமன்ற முன்னாள்  நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. 

‘‘ஜல்லிக்கட்டு என பெயர் வைத்து ஏன் நடத்துகிறீர்கள்? ‘வீர விளையாட்டு’ என பெயர் மாற்றி நடத்தினால் சட்டம் ஒன்றும் செய்ய முடியாது’’ என யோசனை சொன்னவர். ‘‘வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நடத்த முடியும்’’ என வழி காட்டியவர். ‘‘ஏன் மெரினாவில் போராட்டம் நடத்துகிறீர்கள்? உங்கள் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.-க்கள் வீடுகளின் முன் போராட்டம் நடத்துங்கள். அவர்களை டெல்லிக்குத் துரத்தி, சட்டம் கொண்டு வரச் செய்யுங்கள்” என இளைஞர்களுக்கு யோசனை சொன்னவர். இதனால், தமிழர்களின் அன்புக்குரியவர் ஆகிவிட்டார் கட்ஜு.

டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து, ‘‘பேட்டி’’ என்றதும், ‘‘வணக்கம்... நானும் ஒரு தமிழன்தான்’’ என்று தமிழில் சொல்லி வரவேற்றார். 

‘‘ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் ஒருவழியாக வந்துவிட்டதே?”

‘‘இது மிகவும் வரவேற்க வேண்டிய ஒரு முடிவு. இந்த சட்டம் குறித்த சந்தேகமோ, பயமோ தேவையில்லை. தமிழக சட்டமன்றம் ஒரு மசோதா கொண்டுவந்து இதை நிரந்தர சட்டமாக மாற்ற முடியும். இந்திய அரசியல் அமைப்புச் சட்ட விதி 254(2)-ன்படி இதற்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று அமல்படுத்தப்படுவதால், இனி இந்த வழக்கில் சட்டரீதியான பிரச்னைகள் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.’’ 

‘‘ஜல்லிக்கட்டுக்கு நீங்கள் ஆதரவளிக்கக் காரணம் என்ன?”

‘‘தமிழர்கள் நீண்ட பாரம்பர்யமும் செழுமையான பண்பாடும் கொண்டவர்கள். 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களிலேயே ஜல்லிக்கட்டுப் பற்றிய குறிப்புகளைப் படித்ததாக எனக்கு நினைவு. பல்வேறு மாறுபட்ட பண்பாடுகளைக் கொண்ட மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிப்பது அவசியம். இந்தியாவின் ஒற்றுமைக்கு இது அவசியம்.’’  

“உங்களை ஒரு தமிழராக நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளக் காரணம் என்ன?”

‘‘எனக்கும் தமிழுக்கும் நீண்ட கால உறவு உள்ளது. அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, தமிழ் மொழியில் டிப்ளோமா படிப்பை முடித்துள்ளேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘பேச்சுத் தமிழ்’ (Spoken Tamil) படிப்பை முடித்தேன். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது, தமிழைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் அறிந்துகொண்டேன்.’’

“ஜல்லிக்கட்டுக்காகப் போராடுகிறவர்கள், பீட்டா அமைப்பைத் தடைசெய்யக் கோருகிறார்கள். அது சாத்தியமா?”

‘‘பீட்டா என்பது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமைப்பு. அது, இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு நினைத்தால் அதை சட்டப்படி தடைசெய்ய முடியும் என்பது என் கருத்து.’’

“இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சமூக வலைதளங்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன அல்லவா?”

‘‘ஒவ்வொரு காலத்திலும் ஊடகத்தின் வடிவம் மாறிக்கொண்டே வருகிறது. பொதுவாக, தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் என்பதை நான் அறிவேன். அதற்கேற்றவாறு அவர்கள் இந்தப் போராட்டத்துக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியுள்ளது ஆரோக்கியமானது. தங்களுடைய பண்பாட்டை மீட்டெடுப்பதற்குத் தன்னெழுச்சியாகப் போராடும் இளைஞர்களின் போக்கை வரவேற்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு மதங்கள் கடந்து, ஜாதி வேறுபாடுகளைக் கடந்து ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தி, அதில் வெற்றியும் பெற்றிருப்பது தமிழர்கள்தான். தமிழர்கள் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே தலைமை தாங்கி வழிநடத்தும் தகுதி உள்ளவர்கள்!’’

 “சென்ற வாரம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பை விரைந்து வழங்குமாறு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதே உச்ச நீதிமன்றம், இன்று ‘ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்பை ஒரு வாரத்துக்கு அளிக்க வேண்டாம்’ என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுள்ளதே? 

‘‘தற்போது ‘ஒரு வாரத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படாது’ என்ற அறிவிப்புக்கு, மத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் வேண்டுகோளே காரணம். மேலும், இந்த வழக்கில் ‘அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தீர்வு காணப்படலாம்’ என்ற கண்ணோட்டத்தில் தலைமை வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றிருக்கலாம்.’’

“ஜல்லிக்கட்டு வழக்கில், தீர்ப்பு காலதாமதம் ஆவதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?”

‘‘கடந்த காலத்தைப் பற்றிப் பேச வேண்டாம். இனிமேல், நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளுக்கு எதிரான எந்தவொரு செயலும் மேற்கொள்ளப்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.’’ 

“ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, இந்த ஆண்டே நடக்கும் பட்சத்தில், அதில் நீங்கள் பங்கேற்கும் எண்ணம் உள்ளதா?”

‘‘சட்டரீதியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் பட்சத்தில், அதை நேரில் கண்டுகளிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்புகள் ஏதாவது எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தால், அந்த அழைப்பைக் கண்டிப்பாக ஏற்பேன். இளைஞர்களின் போராட்டத்திலும் பங்கெடுக்கத் தயார்.’’

‘ஜல்லிக்கட்டு தொடர்பான எந்த ஆலோசனைகளுக்கும் தமிழர்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம்’ என உற்சாகமாகச் சொன்ன மார்க்கண்டேய கட்ஜு, ‘‘என் இமெயில் முகவரியை தாராளமாகக் குறிப்பிடுங்கள்” என்று கொடுத்தார்.

கட்ஜுவைத் தொடர்புகொள்ள: மின்னஞ்சல்: mark_katju@yahoo.co.in

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.