News
Loading...

தி.மு.க-வை குறிவைக்கும் பி.ஜே.பி! - ஐ.டி ரெய்டில் ஆயிரம் கோடி

தி.மு.க-வை குறிவைக்கும் பி.ஜே.பி! - ஐ.டி ரெய்டில் ஆயிரம் கோடி

ரூர் அன்புநாதன் வீட்டில் உருவான ரெய்டு சூறாவளி, சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன், சர்வேயர் ரத்தினம் என பலரின் கணக்குகளை முடித்துவிட்டு, தற்போது ஈ.டி.ஏ., ஸ்டார், புகாரி குழுமங்களை மையம் கொண்டுள்ளது.

ஈ.டி.ஏ-வின் ‘புரொஃபைல்’!

இந்தியாவில் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் எப்படியோ... அப்படி அரபு நாடுகளில் ஈ.டி.ஏ என்ற ‘எமிரேட்ஸ் டிரேடிங் ஏஜென்சி’. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்துக்கு ‘பிசினஸ் நெட்வொர்க்’ இருக்கிறது. கட்டுமானம், சாலைப் பணி, ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, மின் வணிகத் திட்டங்கள், கப்பல் போக்குவரத்து, துறைமுக மேலாண்மை, மெட்ரோ ரயில், ஏர்கண்டிஷன் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல்ஸ், மின் இயந்திரவியல் பயன்பாடு, தங்கம் - வைர விற்பனைத் தொழில் என்று இந்த நிறுவனம் கால் பதிக்காத துறைகளே இல்லை. 

30 நாடுகளில் 70-க்கும் அதிகமாக இவர்களின் துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. 75 ஆயிரம் பேர் நேரடியாக வேலை செய்கின்றனர். உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் பிரதான சக்கரவர்த்திகள், பி.எஸ்.ஏ என்ற பி.எஸ்.அப்துர் ரகுமானும், அவருடைய உறவினர் சலாவுதீனும் தான். இருவருமே தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கடலோரக் கிராமமான கீழக்கரையைச் சேர்ந்தவர்கள்.

பி.எஸ்.ஏ-வும் சலாவுதீனும்... 

ஈ.டி.ஏ நிறுவனத்தைத் தொடங்கிய பி.எஸ்.அப்துர் ரகுமான், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். பி.எஸ்.ஏ-வின் விசுவாசத்துக்கு எம்.ஜி.ஆர் தீவிரமான ரசிகர். அதேநேரத்தில் கருணாநிதியோடும் அப்துர் ரகுமானுக்கு நல்ல நட்பு இருந்தது. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தைத் தயாரித்தது அப்துர் ரகுமானின் கிரசன்ட் மூவிஸ் நிறுவனம்தான். தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஜெமினி மேம்பாலம் ஈ.டி.ஏ நிறுவனத்தால் கட்டப்பட்டது. 
இந்திரா காந்தி எமர்ஜென்சி பிரகடனம் செய்த காலத்தில், அப்துர் ரகுமான், தமிழகத்தில் இருந்து தப்பி துபாய் சென்றார். அங்கு போய் அவர் ஆரம்பித்ததே, ஈ.டி.ஏ என்ற கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில், துபாய் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. துபாயின் வளர்ச்சியோடு சேர்ந்து ஈ.டி.ஏ நிறுவனமும் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் தன்னுடைய உறவினர் சலாவுதீனிடம் நிர்வாகத்தை ஒப்படைத்திருந்தார் அப்துர் ரகுமான்.
ஆனால், கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் உரசல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் துபாய் மன்னர் குடும்பம், நிறுவனத்தின் இயக்குநர்கள், ஊழியர்கள் என எல்லோருமே சலாவுதீன் பக்கம் இருந்தனர். அதனால், அப்துர் ரகுமான் முற்றிலுமாக ஓரம்கட்டப்பட்டார். ஆனால், நிறுவனத்தில் அவருக்கும், அவருடைய வாரிசுகளுக்கும் கணிசமான பங்குகள் இருந்தன. துபாய் மற்றும் சவுதி அரச குடும்பங்கள் ஈ.டி.ஏ நிறுவனத்தில் 51 சதவிகிதப் பங்குகளை வைத்திருந்தன. ஒரு கட்டத்தில் ஈ.டி.ஏ நிறுவனத்துக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்று சலாவுதீன் கணக்குக் காட்ட, சர்ச்சைகள் வெடித்தன. இதையடுத்து நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து சலாவுதீன் ஒதுங்கிக்கொண்டார். 

ஈ.டி.ஏ-வின் பொற்காலம்!

ஈ.டி.ஏ நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து சலாவுதீன் ஒதுங்கிக்கொள்வதற்கு முன்பே, ஸ்டார் குரூப் நிறுவனத்தை அவர் தொடங்கி இருந்தார். 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் நிறுவனம்தான் மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்தது. காரணம், சலாவுதீனுடன் தி.மு.க-வுக்கு இருந்த நெருக்கம்தான். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு 517 கோடி ரூபாயை பிரீமியமாக அரசு செலவழித்தது. பதிலாக ஸ்டார் நிறுவனம் பயனாளிகளுக்காக மருத்துவமனைகளுக்குச் செலுத்திய தொகை சுமார் ரு.415 கோடி மட்டுமே. இரண்டாவது ஆண்டில், ரூ.750 கோடி பிரீமியம் அரசு கொடுத்தது. 

மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் பதவியைக் கேட்டு வாங்கியதற்குப் பின்னால் ஈ.டி.ஏ நிறுவனம் இருந்தது. காரணம், அப்போது ஈ.டி.ஏ நிறுவனம் மிகப் பெரிய அளவில் அந்தத் தொழிலில் அடியெடுத்து வைத்திருந்தது. அதுபோல, புதிய தலைமைச் செயலகம் கட்டிய ‘ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன்’, ஈ.டி.ஏ ஸ்டார் குழுமத்தின் ஓர் அங்கம். புதிய தலைமைச் செயலகம் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,750 கோடி ரூபாய் செலவில், 350 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நகரியத்தை அமைக்க முந்தைய தி.மு.க அரசு முடிவு செய்தது. இந்தப் பணியை இவர்களின் ஈ.டி.ஏ ஸ்டார் ப்ராப்பர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம்தான் ஒப்படைத்தார்கள்.

ஸ்பெக்ட்ரத்தால் பெற்ற பயன்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று, ‘ஜெனிக்ஸ் எக்ஸிம் வெண்டர்ஸ்’. சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனம், வெறும் 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஈ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் தலைவர் சலாவுதீனின் மகனுடையது. அந்தக் காலத்தில், கனிமொழி ஒருங்கிணைத்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு ஈ.டி.ஏ. ஸ்டார் 1 கோடி ரூபாய் கொடுத்ததும், துபாயில் ஸ்டாலினுக்கு சலாவுதீன் பாராட்டு விழா நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

அ.தி.மு.க-வோடு நெருங்க முயற்சி!

ஈ.டி.ஏ நிறுவனம் தி.மு.க-வோடு காட்டிய நெருக்கம் ஜெயலலிதாவுக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. எனவேதான், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சலாவுதீன் ஜெயலலிதாவைச் சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்தும், கடைசிவரை அப்பாயின்ட்மென்ட் கொடுக்கவில்லை ஜெயலலிதா. ஆனால், மறைமுகமாக சலாவுதீன் குருப் அ.தி.மு.க-வோடும் நெருங்கித்தான் இருந்தது.

1995-காலகட்டத்தில், மன்னார்குடி குடும்பத்துக்கு இந்தோனேஷியாவில் சொத்துக்களையும் முதலீடுகளையும் உருவாக்கிக் கொடுத்தவர் களஞ்சியம். மண்டபம் களஞ்சியம் என்று இவர் பிரபலம். ஈ.டி.ஏ, ஸ்டார் மற்றும் புகாரி குழுமங்களுக்குத் தேவையான நிலங்களை வளைத்துக் கொடுக்கும் வேலையையும் இவர்தான் செய்துவந்தார். சென்னையில் உள்ள ‘சிட்டி சென்டர்’ கட்டடம் ஈ.டி.ஏ. குரூப்புக்குச் சொந்தமானது. அந்தக் கட்டடம் கட்டுவதற்கு குடிசைப் பகுதியை காலிசெய்து கொடுத்தவர் களஞ்சியம்தான். இந்தவகையில் இவர்கள் அ.தி.மு.க-வோடும் நெருக்கமாகத்தான் இருந்துள்ளனர். 

ஈ.டி.ஏ, ஸ்டார் மற்றும் புகாரி...

புகாரி என்பது தனி நிறுவனம் அல்ல  (தமிழகம் முழுவதும் உள்ள புகாரி உணவகங்களுக்கும் தற்போது ரெய்டு நடக்கும் புகாரி நிறுவனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை). ஈ.டி.ஏ, ஸ்டார் நிறுவனங்களின் பங்குதாரர்கள், வாரிசுகளை உள்ளடக்கியதுதான் புகாரி குழுமம். ஈ.டி.ஏ குழுமம், ஸ்டார் குழுமம் சேர்ந்தும், தனித்தனியாகவும் செய்யும் எல்லாத் தொழில்களிலும் புகாரி குழுமம் இருக்கும். அங்கிருப்பவர்கள்தான் இங்கிருப்பார்கள்; இங்கு செயல்படுபவர்கள்தான் அங்கும் பொறுப்புகளில் இருப்பார்கள்.

தி.மு.க-வை குறிவைக்கும் பி.ஜே.பி! - ஐ.டி ரெய்டில் ஆயிரம் கோடி

ரெய்டுக்கான பின்னணி...

தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளின் நிதி மூலதனங்களையும் நொறுங்கச் செய்ய வேண்டும் என்பது பி.ஜே.பி-யின் திட்டம். ஒரு வருடமாக இதற்கென தீவிரமான நடவடிக்கைகளை பி.ஜே.பி அரசு எடுத்துவருகிறது. முதற்கட்டமாக தமிழகத்துக்கு சிறப்பு ‘டீம்’ ஒன்றை அமைத்து, தி.மு.க - அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகளின் நிதி கஜானாக்களைக் கண்காணித்து வந்தது. அதன்பிறகுதான் இந்த ரெய்டுகள் தொடங்கின. கரூர் அன்புநாதன் தொடங்கி, நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், ராமச்சந்திரன், ரத்தினம் என்று நீண்டது ரெய்டு. அந்த ரெய்டுகள் அ.தி.மு.க-வுக்கான ‘செக்’. இப்போது ஈடிஏ., புஹாரி, ஸ்டார் குழுமங்களில் நடைபெற்ற ரெய்டுகள் தி.மு.க-வுக்கான ‘செக்’. 

சென்னை, மதுரை, தூத்துக்குடி, கீழக்கரை உட்பட சுமார் 75 இடங்களில் நடைபெற்ற இந்த ரெய்டுகளில், பல நூறு கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன. போலி ஆவணங்கள், போலி பில்கள் மூலம் செலவுகளைப் பல மடங்கு அதிகரித்துக்காட்டி வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. நஷ்டக் கணக்கு காட்டுவதற்காக சில டம்மி நிறுவனங்களை நடத்தியிருப்பது, உற்பத்தி – விற்பனை அளவை குறைத்துக் காட்டியிருப்பது, அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பங்குதாரர்கள் மூலம் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டிருப்பது போன்ற பல மோசடிகளுக்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன. தற்போது ரெய்டுகளில் சிக்கியவற்றை வைத்து நடத்தும் ஆய்வுகள் முடியும்போது, வரி ஏய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி மோசடியின் அளவு 1,000 கோடி ரூபாயைத் தாண்டலாம் என்கிறார்கள்! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.