News
Loading...

தீபா பேரவை ஒருங்கிணைப்பாளரின் பேட்டி

தீபா பேரவை ஒருங்கிணைப்பாளரின் பேட்டி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, இப்போது ‘முதல்வர் பதவி’யைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். ஆனால், ‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவே அவரது இடத்துக்கு வரவேண்டும்’’ என்கிறார் சேலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். இதற்காகவே ‘எங்கள் அம்மா ஜெயலலிதா - தீபா பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்தபடி, பல மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து பரபரப்பாக இயங்கிவரும் ராமச்சந்திரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘ அ.தி.மு.க-வின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் யாரும் உங்கள் அமைப்பில் இணையவில்லையே?’’

‘‘முக்கியமானவங்க எல்லாரும் நிச்சயம் வருவாங்க. ஆனா, இப்போதைக்கு வர மாட்டாங்க. தீபா அம்மா வந்தால் எல்லோரும் வந்திடுவாங்க!’’

‘‘ஓ.பன்னீர்செல்வம் அங்கு மனவருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருவேளை ஓ.பி.எஸ் உங்கள் பக்கம் வந்தால் அரவணைத்துக்கொள்வீர்களா?’’

‘‘இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லக் கூடாது. தீபா அம்மாதான் இதற்கு பதில் சொல்ல முடியும். தமிழ்நாட்டில் உள்ள அடிமட்டத் தொண்டர்களையெல்லாம் ஒருங்கிணைத்து தீபா அம்மாவிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் என்னுடைய பணி. இருந்தாலும் சொல்கிறேன். தீபா அம்மாவின் புதிய கட்சிக்கு அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பி.எஸ் உட்பட யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வார். வேண்டாம் என்று சொல்ல மாட்டார் என நினைக்கிறேன்.’’

‘‘தீபா சி.எம். ஆகிடுவாங்களா? முதல்வரானால் தீபா போடும் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்?’’

‘‘ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பது எங்கள் நோக்கம் இல்லை. ஆனா, தீபா அம்மா சி.எம் ஆகிடுவாங்க. அவங்க சி.எம் ஆக வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம், எதிர்பார்ப்பு. புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மா 2016 தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவந்து டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சொன்னாங்க. தீபா அம்மா சி.எம் ஆனதும் ஒரே கையெழுத்துப் போட்டு ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளும் இழுத்து மூடப்படும்.’’

‘‘நீங்கள் புதியதாக வெளியிட்டிருக்கும் கட்சிக் கொடியில்  புதுப்புது நிறங்கள் எதைக் குறிக்கின்றன?’’

‘‘அதைப் பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது சார். நாங்க அடிப்படையில் அ.தி.மு.க-காரங்க. அ.தி.மு.க கொடியில் தீபா அம்மா போட்டோ போட்டு பேனர் வெச்சோம். அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தக் கூடாதுன்னு போலீஸ்காரங்க மிரட்டினாங்க. சரின்னுட்டு கட்சியில் இருக்கிற எங்க ஊர்க்காரங்க 10 பேர் சேர்ந்து உக்காந்து யோசிச்சோம். ‘அ.தி.மு.க கொடி நடுவில் வெள்ளை கலர் எதுக்கு’ன்னு முடிவுபண்ணி அதைத் தூக்கினோம். அந்த இடத்தில் புரட்சித் தலைவி அம்மா எப்பவும் விரும்பிக் கட்டும் பச்சைப் புடவை கலரை போட்டுடலாம்னு ஒருமனதாகத் தீர்மானித்து கறுப்பு, பச்சை, சிவப்பு நிறக் கொடியை உருவாக்கிட்டோம். நடுவில் ஜெயலலிதா போட்டோவும் போட்டுட்டோம். 

கொடியில் பச்சை கலர் போட்டதற்கான காரணத்தை நான் சொல்லிட்டேன். கறுப்பு, சிவப்பு கலர் போட்டதற்கான காரணத்தை அ.தி.மு.க-காரர்களிடம்தான் நீங்க கேட்கணும்.’’ 

‘‘அ.தி.மு.க உயர் மட்ட நிர்வாகிகள்தான் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்துள்ளார்கள். ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?’’

‘‘ஜெயலலிதா இடத்துக்கு யார் வரணும்னு தீர்மானிக்கும் பொறுப்பு கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கும் உண்டு. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மக்கள் தலைவர்கள். அவர்களின் இடத்துக்கு வருபவர்களும் மக்கள் தலைவர்களாக இருக்க வேண்டும். மக்கள் தலைவராக இல்லாத சசிகலாவைத் தேர்ந்தெடுத்திருப்பது எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் செய்கிற துரோகம்.’’ 

‘‘அ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்க தீபாவை முன்னிறுத்த என்ன காரணம்?’’

‘‘நம்ம தமிழ்ச் சமூகத்தில ஒரு குழந்தைக்கு தாய் - தந்தைக்குப் பிறகு அத்தைதான் முக்கியம். அதை அம்மாவே, ‘அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடம்மா...’ என்று பாடி இருக்கிறார். (உண்மையில் அந்தப் பாடல்காட்சிக்கு நடித்தவர் கே.ஆர்.விஜயா!) தாய் - தந்தையை இழந்து நிற்கும் தீபா அம்மா, இப்போ தன் அத்தையான ஜெயலலிதாவையும் இழந்து நிற்கிறாங்க. உடனே, ‘தமிழக மக்களாகிய நாம்தான் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’ என்று முடிவெடுத்தேன்.’’

‘‘பேரவைத் தொடக்க விழாவுக்கு 300-க்கும் குறைவான பேர்தானே வந்திருந்தார்கள்? எந்த அடிப்படையில், தீபாவை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த முடியும் என நம்புகிறீர்கள்?’’

‘‘இதுவரை தமிழ்நாடு முழுவதும் 30 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துட்டோம் (அடேங்கப்பா!). நாளையே தேர்தல் வைக்கட்டும்... நாங்கதான் ஜெயிப்போம்.’’ 

‘‘நீங்கள் தீபாவை முன்னிறுத்தி அரசியல் கட்சி தொடங்குகிறீர்கள். ஆனால், தீபா வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டால் என்ன செய்வீர்கள்?’’

‘‘தீபா நிச்சயம் வெளிநாட்டுக்குப் போகமாட்டார். அவர் இந்த மண்ணுக்குரியவர். இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் ஜெயலலிதா அம்மா இருந்த இடத்தில இருந்து பணியாற்றுவார்.’’ 

நடத்துங்க ராமச்சந்திரன்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.