News
Loading...

இரட்டை இலையை காப்பாற்றியது நடராசனா?

இரட்டை இலையை காப்பாற்றியது நடராசனா?

ஞ்சாவூரில் சசிகலா கணவர் ம.நடராசன் நடத்திய விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்களை ஒப்புக்குச் சொல்லிவிட்டு ‘நடராசனும் மன்னார்குடி குடும்பமும்தான் அ.தி.மு.கவை கட்டிக் காத்தது’ என்பது போல திவாகரன் பேச, அ.தி.மு.க-வினர் ஆடிப்போய்விட்டார்கள். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பொறுக்க முடியாமல் வெளிப்படையாகவே கர்ஜித்துவிட்டார்.

கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, “நடராசனின் மைத்துனர் திவாகரன் ஆற்றிய சொற்பொழிவு ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டனையும், நிர்வாகியையும் காயப்படுத்தியிருக்கிறது. இந்த இயக்கத்தில் எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர், இந்த இயக்கத்தை தாங்கள்தான் - தங்கள் குடும்பம்தான் வழிநடத்தியதைப்போல சொல்லியிருக்கிறார். இதற்காக ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டனிடமும் அவர் வருத்தம் தெரிவித்தாக வேண்டும். 

‘அ.தி.மு.க உருவாக்கப்பட்டு, திண்டுக்கலில் எதிர்கொண்ட முதல் இடைத்தேர்தலை நாங்கள்தான் நடத்தினோம்’ என்று திவாகரன் பேசியிருக்கிறார். அப்போது இவருக்கு என்ன வயது இருக்குமென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இவருக்கும் அந்தத் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு கூட்டாக எஸ்.டி.எஸ்ஸை அழைக்கிறார். எஸ்.டி.எஸ் தேர்தல் களத்தில் இருந்தார். அவர் ஒரு பகுதியில் இருந்தார். அதைப்போல தமிழகம் முழுக்க இருந்து புரட்சித் தலைவருடைய உண்மையான தொண்டர்கள் அந்தத் தேர்தலில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். நாஞ்சில் மனோகரன், பி.ஹெச்.பாண்டியன், அனகாபுத்தூர் ராமலிங்கம், கே.ஏ.கிருஷ்ணசாமி, ஆர்.எம்.வீரப்பன், கோவை செழியன் என பலர் அந்தத் தேர்தல் களத்தில் பணியாற்றி உள்ளனர். நாங்கள் அங்கு தொண்டர்களாகப் பணியாற்றினோம். அந்த வெற்றி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழுக்குக் கிடைத்த வெற்றி. இந்த இயக்கத்துக்குத் துரும்பையும் கிள்ளிப் போடாதவர், அந்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுவதைப்போல பேசுகிறார்.  

‘கட்சி இரண்டுபட்டபோது அதை இணைத்தவர் நடராசன்’ என்று பேசியிருக்கிறார். நடராசன் அப்போது எங்கு இருந்தார்? என்ன நிலையில் இருந்தார்? இந்த நாட்டுக்குத் தெரியாதா? ஜானகி அம்மையார் அவர்கள், ‘என் கணவர் உருவாக்கிய இந்த இயக்கம் பாழ்பட்டுவிடக்கூடாது’ என்று சொல்லி, உடைந்த இயக்கத்தை இணைப்பதற்காக, இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காக தான் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்கிறார். இந்த வரலாற்று உண்மையை மறைத்து, லட்சக்கணக்கான தொண்டர்கள் செய்த தியாகத்தின் பயனை இந்த இருவர் பெறவேண்டும் என்று எவ்வளவு ஒரு கயமைத்தனமான கருத்தை திவாகரன் சொல்லியிருக்கிறார். 

இன்று முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திடம் அம்மா ஆட்சியை ஒப்படைத்தார்கள். அவர் அடக்கமாக ஆட்சி செய்தார். அம்மா மறைவுக்குப் பிறகு அந்த வாய்ப்பு அவருக்கு மீண்டும் கிடைத்தது. இன்று அவர், மக்கள் எளிதில் அணுகக் கூடிய முதலமைச்சராக மாறியிருக்கிறார். அவருக்கு இவர்கள் தொல்லை கொடுக்க வேண்டுமென்று கருதுகிறார்கள். திவாகரன் கருத்து, கழகத்தின் பொதுச்செயலாளருக்கு மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகார மையம் ஒரு இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், மற்ற கட்சிகளைப் போல குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிகாரம் வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள். இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்” என்றார் முனுசாமி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.