News
Loading...

கடலில் கரைந்த கடைசி நிமிடங்கள்!

கடலில் கரைந்த கடைசி நிமிடங்கள்!

விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரோடு ஆரம்பித்த மெரினா போராட்டம், கடைசி நாளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரோடு முடிவுக்கு வந்தது. மெரினாவில் போலீஸ் அத்துமீறல் நிகழ்ந்தபோது, ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் கடலை நோக்கி ஓடினர். கைகோத்து தண்ணீரில் நின்றபடி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். ‘போலீஸ் நெருங்கினால் கடலுக்குள் போவோம்’ என அவர்கள் சொன்னதால், ஆரம்பத்தில் தூக்கிய லத்திகளுக்கு ஓய்வு கொடுத்தது போலீஸ். எனினும், அவர்களைக் கரைக்கும் வேலையை விடாமல் செய்தது.

ஒருபக்கம்... சீமான், ராகவா லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி என பிரபலங்கள் அடுத்தடுத்து படை எடுத்து சமாதானம் பேசினார்கள். மறுபக்கம், போலீஸாரும் இளைஞர்களைத் தனித்தனியாக அழைத்து மெரினாவில் இருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனிடையே 23-ம் தேதி மாலை, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், தோழர் தியாகு, இயக்குநர் கௌதமன் ஆகியோர் வந்து தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் பற்றி விளக்கிக் கூறினர். முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனின் பேச்சும், இயக்குநர் கௌதமனின் அறிவிப்பும் போராட்டக்காரர்கள் மத்தியில் எடுபட்டதால், கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டத்தினர் கலைய ஆரம்பித்தனர். ஆனாலும், சுமார் 500 பேர் ‘நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை போகமாட்டோம்’ என அறிவித்து அன்று இரவும் மெரினாவிலேயே தங்கியதால் கடற்கரைச் சூடானது.

24-ம் தேதி காலை... மெரினா முழுமையாகக் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. கடல் அருகே நின்று போராடும் சில இளைஞர்களின் பெற்றோருக்கு போலீஸ் போன் செய்து வரவழைத்து இருந்தது. அவர்களை மட்டும் கடற்கரைக்குச் செல்ல அனுமதித்தது போலீஸ். அவர்கள் வந்து உருக்கமாகக் கூப்பிட்டதால், போராட்டத்தை முடித்துக்கொண்டு பிள்ளைகள் போனார்கள். ஒரு கல்லூரி மாணவியை அழைத்துச் செல்ல அவர் அம்மா வந்ததும், இருவரும் கண்ணீரோடு கட்டியணைத்து அழுததும், போராட்டக்களத்தில் எஞ்சியிருந்தவர்கள் அவர்களுக்கு நெகிழ்ச்சியோடு விடை கொடுத்ததும் எவரையும் இளகச்செய்யும் காட்சி.  

போராட்டத்தை முடித்துவிட்டுக் கிளம்பிய ஹரிபாபுவிடம் பேசினோம். ‘‘எங்களுக்கு உணவு, தண்ணீர் வருவதை போலீஸார் தடுத்துவிட்டனர். எண்ணூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் இருந்து மீனவர்கள் படகுகள் மூலம் கொண்டுவந்த உணவையும் எங்களுக்குக் கிடைக்காதபடி செய்துவிட்டனர். கடற்கரையில் ஊற்று தோண்டி, கிடைத்த உப்புத் தண்ணீரையே குடித்துவந்தோம். திறந்தவெளிச் சிறைச்சாலையில் இருப்பதைப்போல உணர்ந்தோம். ‘தொடர்ந்து மெரினாவில் இருந்தால் வழக்குப் பதிவுசெய்து உங்கள் வாழ்க்கையையே சீரழித்துவிடுவோம்’ என போலீஸார் மிரட்டினர்’’ என்றார் வேதனையுடன். 

மெரினா போராட்டக் குழுவில் ஒருவராக இருந்த அப்துல் ஹமீது, போலீஸாரோடு இணைந்து இவர்களுக்கு உதவினார். ‘‘பலர் கையில் சுத்தமாகப் பணம் இல்லை. நாங்கள் எங்கள் கையில் இருந்த பணத்தை அளித்து உதவி செய்தோம். அருகில் இருக்கும் மீனவப் பகுதி மக்கள் கொண்டுவந்த உணவுகளையே பகிர்ந்து சாப்பிட்டார்கள். வீடு செல்பவர்களுக்கு கோயம்பேடு மற்றும் சென்ட்ரல் பகுதிகளுக்குப் பேருந்து வசதியைப் போலீஸார் ஏற்படுத்திக் கொடுத்தனர்’’ என்றார்.

கடலில் கரைந்த கடைசி நிமிடங்கள்!

24-ம் தேதி இரவு வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த இளைஞர் பாலுவிடம் பேசினோம். ‘‘கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்; அவர்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்; போலீஸார் நடத்திய வன்முறையில் நிகழ்ந்த பாதிப்புகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு அறிவிக்க வேண்டும்’’ என்று போராட்டக் குழுவினர் சார்பில் கோரிக்கை வைத்தார். 

‘‘நாங்கள் வலியுறுத்தும் மூன்று கோரிக்கைகளும் செய்தியாக மீடியாவில் வந்தால் மட்டுமே... மெரினாவில் இருந்து கிளம்புவோம்’’ என அவர்கள் போலீஸாரிடம் கூறினார்கள். இதனையடுத்து அங்கிருந்த நமது செய்தியாளர்கள், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக ‘விகடன்’ இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டு அவர்களிடம் செல்போனில் காண்பித்தனர். ‘‘ஏம்பா... இவ்வளவு பெரிய ‘விகடன்’ மீடியாவிலேயே நியூஸ் போட்டதா அவங்களே சொல்றப்ப... நீங்க இங்கிருந்து கிளம்புங்கப்பா’’ என போலீஸார் கூறினர். அப்போதே போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அவர்கள் அறிவித்துவிட்டு... ‘தமிழர்களாக வந்தோம்; தமிழர்களுக்காகப் போராடினோம்; இப்போது தமிழர்களாகச் செல்கிறோம்’ என ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துச்சொன்னபடியே கலைந்து சென்றனர்.

கடலில் கரைந்த கடைசி நிமிடங்கள்!

அரசு செய்யவில்லை... தனி நபர்கள் சாதித்தனர்!

ஜல்லிக்கட்டு சட்டம் குறித்து, போராடும் இளைஞர்களுக்குப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினர் எழுத்தாளர் சு.வெங்கடேசனும், ‘பூவுலகின் நண்பர்கள்’ பொறியாளர் சுந்தரராஜனும். இவர்கள், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனை 22-ம் தேதி மாலை சந்தித்தனர். தமிழக அரசின் அவசரச்சட்ட நகலை வாங்கிப்பார்த்த அரிபரந்தாமன், ‘‘தெளிவாக இருக்கிறதே சட்டம்” என்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து மாணவர்களுடன் பேசவும் அவர் முன்வந்தார். 23-ம் தேதி போலீஸ் எடுத்த அவசர நடவடிக்கைகளால் நிலைமை விபரீதமாகிவிட, அதன்பிறகும் போராட்டத்தைக் கைவிடாமல் கடலில் நின்ற இளைஞர்களிடம் வந்து பேசினார் அரிபரந்தாமன். பலர் போராட்டத்தைக் கைவிட்டனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடர்ந்து போராடியவர்களுக்கு, அரிபரந்தாமன் உரையை டி.வி-யில் நேரலையாக ஒளிபரப்பியது போலீஸ். அவர்களில் பலர் இதில் திருப்தியாகி கலைந்து சென்றனர். 

சமயங்களில் இப்படித்தான்... அரசு செய்ய வேண்டிய வேலைகளை தனிநபர்கள்தான் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.