News
Loading...

மெரினா எழுச்சி தந்த பாடம்!

மெரினா எழுச்சி தந்த பாடம்!

ங்களுக்கு இன்று அதிக உறக்கம் கிடைக்கப் போவதில்லை. இரவு முழுவதும் விழித்திருந்து துப்புரவுப் பணி செய்யப் போகிறோம்; நிறைய காபி தேவைப்படும்” - இது வால் ஸ்ட்ரீட் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறியது. இந்த வரிகளின் முழுப் பொருளையும் புரிந்துகொண்டால்தான், நம்மால் மெரினாவில் நடக்கும் மாணவர் - இளைஞர் எழுச்சியையும் அதன் வீரியத்தையும் உணர முடியும். ஆம், அமெரிக்காவில் நடந்த வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டத்துக்கும், சென்னையில் நடக்கும் மெரினா எழுச்சிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 

வால் ஸ்ட்ரீட் போராட்டம்!

நியூயார்க்கில் ஜூலை 13, 2011 அன்று சிறு பொறியாக முளைத்தது, வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றும் எண்ணம். இரண்டு மாதங்கள் நன்கு திட்டமிட்டார்கள்; போராட்டக்காரர்களுக்கு உணவு தயாரிக்க இரண்டு குழுக்கள், போராட்டச் செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்ல ஒரு குழு, போராட்ட இடத்தைச் சுத்தம்செய்ய ஒரு குழு... இப்படிப் பல குழுக்களை அமைத்தார்கள்; இத்தகைய பெரும் திட்டமிடல், ஒருங்கிணைப்புடன் செப்டம்பர் 17-ம் தேதி வால் ஸ்ட்ரீட்டை வெற்றிகரமாக முற்றுகை இட்டார்கள். 

மெரினா எழுச்சி, வால் ஸ்ட்ரீட்டைப்போல... இரண்டு மாதங்கள் எல்லாம் திட்டமிட்டு நடந்த எழுச்சி இல்லைதான்... பல குழுக்கள் இல்லைதான். ஆனால், அங்கிருந்த ஓர் ஒத்திசைவு அப்படியே மெரினாவிலும் இருந்தது. ஒரு பக்கம், இளைஞர்கள் உணவுத் தேவைகளைக் கவனிக்க... மறுபக்கம், இளைஞர்கள் போராட்டச் செய்திகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்துகொண்டிருக்க... போக்குவரத்தை ஒழுங்குபடுத்த... மெரினாவில் குவிந்திருந்த குப்பைகளை அள்ள... என கண்முன்னால் ஒரு பெரும் எழுச்சியை நம் இளைஞர்கள் நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள். ‘எல்லாச் சாலைகளும் மெரினாவை நோக்கி’ என்ற வரலாற்றைப் படைத்துவிட்டார்கள் தமிழக இளைஞர்கள்.

“ஜல்லிக்கட்டுக்கு மட்டும் அல்ல!”

வால் ஸ்ட்ரீட், அமெரிக்க அரசின் வல்லாதிக்க மனோபான்மைக்கு எதிரான போராட்டம். அதை ‘ஜல்லிக்கட்டு’க்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்துடன் ஒப்பிடுவது எப்படிப் பொருந்தும்? நிச்சயம் பொருந்தும். ஆம், போராட்டத்தின் முதல் நாளான ஜனவரி 17-ம் தேதி அன்று எழுப்பப்பட்ட கோஷங்களின் மையப் பொருள் ஜல்லிக்கட்டும்... பீட்டா எதிர்ப்பும் மட்டும்தான். ஆனால், அதற்கு அடுத்த நாளில் இருந்தே போராட்டக் களத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன; பல்வேறு கோஷங்கள் எழத் தொடங்கின. அதன் பிறகு, ‘ஜல்லிக்கட்டு’ வெறும் குறியீடு மட்டும்தான்; தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய அரசுக்கும்... அதை எதிர்த்துக் கேள்விக் கேட்கத் திராணியற்று இருக்கும் மாநில அரசுக்கும் எதிரான போராட்டம் இது” எனப் பல்வேறு அடுக்குகளில் அரசியல் பேசத் தொடங்கிவிட்டார்கள், இந்தப் போராளி இளைஞர்கள். ‘ஜல்லிக்கட்டு’, ‘பீட்டா’ என்பதோடு தங்கள் கோஷங்களை இவர்கள் சுருக்கிக்கொள்ளவில்லை. மத்திய அரசின் தமிழர் விரோதப்போக்குகளுக்கு எதிராகப் பலவிதமான கோஷங்களை எழுப்பினர். விண்ணைப் பிளந்த அந்த கோஷங்களை மெரினா மீது தாழப்பறந்த விமானங்களின் உள்ளே இருந்தவர்களும் கேட்டிருக்கலாம். 

“கொஞ்சம் விளையாட்டு... நிறைய விவாதம்!”

வழமையான நம் போராட்டங்கள் எப்படி நடக்கும்? ஒன்று, சம்பந்தமில்லாமல் நம் அரசியல்வாதிகள் கிரேக்கத்துக்கும், அமெரிக்காவுக்கும் சவால்விட்டு எதை எதையோ பிதற்றிக் கொண்டிருப்பார்கள். அல்லது, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமாக... காவல் துறை கைகாட்டுகிற மக்களே வராத சாலையில் பரிதாபமாக அமர்ந்துகொண்டு இருப்பார்கள். இவை இரண்டையும் உடைத்தது ‘மெரினா எழுச்சி’. இந்தப் போராட்டத்தைச் சுவாரஸ்யமானதாகவும்... சந்தோஷமானதாகவும், கொண்டாட்டமானதாகவும் மாற்றினார்கள் இளைஞர்கள். 

விவேகானந்தர் நினைவு இல்லத்துக்கு எதிரே மையப் போராட்டம் நடக்க... மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இளைஞர்கள், சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து ஆங்காங்கு அமர்ந்தார்கள்; கொஞ்ச நேரம் கபடி விளையாடினார்கள்; ‘கானா’ பாடினார்கள்; நடனம் ஆடினார்கள்; பின், நீண்டநேரம் அமர்ந்து... அரசியல் பேசினார்கள். தமிழகத்தைச் சூழ்ந்துள்ள சூழலியல் ஆபத்துகள், சாதியம், காவிரி, டாஸ்மாக், பெரு நிறுவனங்களின் அரசியல் என அந்த விவாதம் அனைத்துப் பரிமாணங்களையும் அடைந்தது. குடும்பம் குடும்பமாக வந்திருந்தவர்களும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டார்கள்.

மெரினா எழுச்சி தந்த பாடம்!

“அரசியல் பாதைக்கு செல்போன் ஒளி!”

போராட்டக் களத்தில் இரவு நேரத்தில் ஒரு தொய்வு ஏற்படும்போதெல்லாம், உற்சாகத்தைப் பீய்ச்சியது செல்போன் ஒளி நடனம்தான். இரவு ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை... இளைஞர்கள் தங்கள் கைகளில் இருந்த செல்போனை உயர்த்திப் பிடித்துக் காட்டி அந்த இடத்தையே ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்தார்கள். ‘‘இந்த செல்போன் ஒளியும் ஒரு குறியீடுதான்’’ என்கிறார்கள் இளைஞர்கள். ‘‘இதுவரை அரசியல்வாதிகள் சொன்ன திசையில் நாங்கள் சென்றோம். அந்தப் பாதை அழுக்கும் அருவருப்பானதுமாக இருந்தது. அங்கிருந்து வந்த முடைநாற்றம் குடலைப் புரட்டியது. அதனால், எங்கள் அரசியலை நாங்களே முன்னெடுக்க முடிவுசெய்துவிட்டோம். அந்த அரசியல் பாதைக்கு ஒளிபாய்ச்சத்தான் இந்த செல்போன் ஒளி” என்று தெளிவாகப் பேசுகிறார்கள் அவர்கள். 

‘‘சர்வரோக நிவாரணி இல்லை!’’

‘‘என்னதான் சொல்லுங்கள்? அரசியல் பேசலாம், போராடலாம். ஆனால், அந்த இளைஞர்களிடம் தத்துவம் இல்லையே... அவர்கள் நீட் தேர்வைப் பற்றிப் பேசவில்லையே... அவர்களிடம் சாதியத்துக்கு எதிரான கோஷங்கள் இல்லையே... இந்தப் போராட்டம் எல்லாம் நீர்த்துப் போய்விடும்’’ என்ற குரல்களும் கேட்கின்றன. இது பல நோய்களுக்கு ஒரே மருந்தைக் கேட்பது போன்றது. எல்லா நோய்களும் தமிழகத்தில் இருக்கின்றன. அவற்றைக் களைவதற்கு நம் இளைஞர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொன்றாகக் அவர்கள் களைவார்கள். ‘மெரினா எழுச்சி’ நிச்சயம் அவர்களின் இறுதிப் போராட்டம் அல்ல. இந்தப் போராட்டம் பல தளங்களுக்கு நிச்சயம் விரிவடையும். இனி எந்தவொரு பிரச்னைக்கும் வீதிக்கு வருவார்கள் நம் இளைஞர்கள்.

வால் ஸ்ட்ரீட் போராட்டம் அமெரிக்கப் பேரரசின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது. தமிழக இளைஞர்களின் இந்தப் போராட்டம், மத்திய பி.ஜே.பி அரசின் பிடரியில் ஓங்கி அடித்திருக்கிறது.

மெரினா எழுச்சி தந்த பாடம்!

தமிழ் இளைஞர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்!

“ஆண்களுக்கு இணையாக பெண்களும் கூட்டம் கூட்டமாகப் போராட்டக்களத்துக்குத் திரண்டுவந்தார்கள். ஆண்களுடன் இணைந்து விவாதம் நடத்தினார்கள். ஆண்களும் பெண்களும் என லட்சத்துக்கும் அதிகமாகத் திரண்ட கூட்டத்தில் எந்த பாலினப் பாகுபாடுகளும் இல்லை. ‘அவர் என்னை வெறித்துப் பார்த்தார்’... ‘இவர் தவறாக நடந்துகொண்டார்’ என எந்தச் சலசலப்பும் இல்லை. தடியடி நடத்தப்படலாம் என்ற வதந்தி பரவியபோது, பெண்களைச் சூழ்ந்து அரணாக நின்றார்கள் ஆண்கள். 

 என்.டி.டி.வி எடிட்டோரியல் இயக்குநர் சோனியா சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘பெண்களை மதிப்பதில் சென்னை ஆண்களிடம் இருந்து டெல்லிவாசிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்களில் சில:

இது மாட்டு பிரச்னை அல்ல... 
தமிழ் நாட்டுப் பிரச்னை!

டாஸ்மாக்கு இனிக்குதா
ஜல்லிக்கட்டு கசக்குதா!

ஒன்னாரூபா பேனா
மோடி ஆட்சி வேணாம்!

ஊரு சுத்துற மோடி
மெரினா பக்கம் வாடி

பொன்னாரே பொன்னாரே...
பொய்சொல்லி ஆனீரே!

சின்னம்மா சின்னம்மா... 
உங்க பதில் என்னம்மா!

சாமி சாமி சுப்பிரமணிய சாமி...
காமி காமி உன் வீரத்தை காமி!

வாடிவாசல் திறக்கும்வரை 
வீடு வாசல் கிடையாது! 

நெருங்கினா பொசுக்குற கூட்டம்
நிறுத்துவோம் ‘பீட்டா’வின் ஆட்டம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.