News
Loading...

ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டார் சசிகலா!

ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டார் சசிகலா!

தீபனை யாரும் மறந்திருக்க முடியாது. எம்.ஜி.ஆர் உடல்தாங்கிய ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை பிடித்துத் தள்ளியவர் தீபன்தான். ‘முதல் மரியாதை’ படத்தில் ரஞ்சனியின் கணவராக வருவார். இவர் ஜானகி எம்.ஜி.ஆரின் தம்பி மகன். அரசியல் நடவடிக்கைகளில் இருந்து இவர் ஒதுங்கி இருந்தாலும் அவ்வப்போது கருத்துகளைச் சொல்லி வருபவர். அ.தி.மு.க-வில் இப்போது ஏற்பட்டு இருக்கும் அசாதாரணமான சூழ்நிலைகள் பற்றி அவரது கருத்துகளை அறிய தொடர்புகொண்டோம்.

‘‘அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?’’

‘‘இது மிகவும் வருத்தமான விஷயம்.’’

‘‘சசிகலாவுக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன?’’ 

‘‘எல்லோரையும் மிரட்டி பதவிக்கு வந்துள்ளார் சசிகலா. ஒட்டுமொத்தமாக கட்சியைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மிரட்டித்தான் இதைச் செய்துள்ளார். இதற்கு நடிகர் ஆனந்த்ராஜ்கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக இனி எதிர்ப்பு தெரிவிப்பார்கள். உடனடியாக ரியாக்ட் செய்யாமல் மெதுவாகத்தான் செய்வார்கள். அவர்களால் இந்தக் கட்சியை சரியாகக் கொண்டு செல்ல முடியாது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஏதோ பேராசைப்பட்டு வந்துவிட்டார்கள். குறிப்பாக சசிகலா பொதுச்செயலாளராக வருவதில், பெண்களுக்குத் துளியும் விருப்பம் இல்லை.’’

‘‘இந்த எதிர்ப்பாளர்களுடன் சேர இருக்கிறீர்களா?’’

‘‘தமிழகத்தில் உள்ள அத்தனை பேரும் சசிகலாவுக்கு எதிராகத்தான் உள்ளனர். இப்போது அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையுமே மிரட்டித்தான் பணிய வைத்துள்ளனர். கட்சிக்காரர்கள் இரட்டை இலை சின்னம் போய்விட கூடாது என்பதால்தான் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கட்சிக்கு உள்ளேவிட வேண்டாம் என்றுதான் நடராஜனை ஜெயலலிதா ஒதுக்கிவைத்திருந்தார். ஆனால், அந்த நடராஜனை சசிகலா  உள்ளே கொண்டு வந்துவிட்டார். அது தவறு. நடராஜன் அ.தி.மு.க-வுக்குள் வரக்கூடாது. அடுத்த நான்கு வருடங்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாமல் எம்.எல்.ஏ-க்கள் பயப்படுகிறார்கள். மக்கள் செல்வாக்கு உறுதியாக சசிகலாவுக்குக் கிடையாது.’’

‘‘எம்.ஜி.ஆர் உறவினரான நீங்கள் ஏன் கட்சிக்குள் வராமல் இருந்தீர்கள்?’’ 

‘‘எம்.ஜி.ஆர் மறைந்தபோது நான் டீன் ஏஜ் சிறுவனாக இருந்தேன். அப்போது ஜானகி அம்மாதான் கட்சியைத் தலைமை ஏற்று நடத்தினார்கள். பிறகு, கட்சி  இரண்டாகப் பிரிந்து தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்குப் பிறகு ‘ஜானகி அம்மாவும்  ஜெயலலிதா அம்மாவும் ஒன்றாகச் சேர வேண்டும்’ என்று தொண்டர்கள் விரும்பினார்கள். அதனால், ஜெயலலிதா அம்மாவே, ஜானகி அம்மாவைத் தலைமை ஏற்குமாறு பகிரங்கமாக அறிக்கை கொடுத்தார். ஆனாலும் ஜானகி அம்மா ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சொல்லி, அ.தி.மு.க தலைமையை ஜெயலலிதாவுக்குக் கொடுத்துவிட்டு பெருந்தன்மையுடன் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். அவர்கள் செய்த தியாகத்துக்குத் தலைவணங்குகிறோம். 

சசிகலா, தனது சொந்த ஆசைக்காக ஜெயலலிதாவைப் பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவைக் காப்பாற்ற முடியாதவர்கள் எப்படி கட்சியைக் காப்பாற்றுவார்கள்? 75 நாட்களாக ஜெயலலிதாவை கட்சிக்காரர்களிடம் காட்டாமல் வைத்திருந்ததே மிகப் பெரிய தவறு. இத்தனை நாட்கள் அவரை மறைத்து வைத்திருந்தது அவருடைய சுயநலத்துக்காகத்தான். அதன் பின்னணியில் நடராஜன் கை ஓங்கி உள்ளது. இனி, நடராஜன் சொல்வதைக் கேட்டுத்தான் நடக்கப் போகிறார்கள். இனி பெரிய பிரச்னைகள் கட்சியில் உருவாகும்.’’

ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டார் சசிகலா!

‘‘ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பி வருகிறார்களே?’’

‘‘அதுகுறித்து அப்போலோ மருத்துவனை தலைவர்தான் சொல்ல வேண்டும். பொதுவாக, நோயாளி எப்போது டிஸ்சார்ஜ் ஆவார்கள் என்று மருத்துவர்கள்தான் சொல்வார்கள். ஆனால், டாக்டர் ரெட்டியோ, ‘ஜெயலலிதா முடிவு பண்ணுவாங்க...’ என்று சூசகமாக சொல்லிவிட்டார். ஒரு நோயாளி எப்படி சொல்ல முடியும்? அது சந்தேகம் தந்தது. ‘சிகிச்சையின்போது ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் அவருடன் இருந்திருக்க வேண்டும்’ என்று நீதிமன்றமே கருத்து தெரிவிக்கிறது. முதலில் இருந்தே வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அடக்கு முறைகளை ஏவியதோடு, காவல் துறையை வைத்துக்கொண்டு எல்லாப் பிரச்னைகளையும் அமைதியாக்கிவிட்டனர். 

சசிகலாவை தலைவர் என்று ஜெயலலிதா என்றைக்கும் கூறியது இல்லை. மருந்து மாத்திரை எடுத்து கொடுப்பதற்கும் துணிகளை மடித்து அயர்ன் செய்து கொடுப்பதற்கும்தான் அவரை வீட்டில் வைத்திருந்தார்கள். சசிகலாவை ஜெயலலிதா மிகவும் நம்பினார். ஆனால், ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டார் சசிகலா. சுருக்கமாகச் சொன்னால், ஜெயலலிதா அம்மா ஏமாற்றப்பட்டார்.’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.