News
Loading...

ஒரு கலவரத்தை எப்படி அடக்க வேண்டும்? எம்ஜிஆர் கையாண்ட வழி இது!

ஒரு கலவரத்தை எப்படி அடக்க வேண்டும்? எம்ஜிஆர் கையாண்ட வழி இது!

னவரி 17 அன்று மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.இராமசந்திரன் நூற்றாண்டு கொண்டாட்டம் தொடக்க நாள்.
தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடத் தொடங்கிய நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் மாணவர்கள் ஜல்லிகட்டு தடை நீக்க போராட்டத்தை அறவழியில் தொடங்கினார்கள். காட்டுத் தீயாக மாலைக்குள் தமிழகம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்ததில் எம் ஜி ஆர் நூற்றாண்டு தொடக்க நிகழ்வு மறைந்து போனது.

ஜனவரி 23ம் தேதி வெற்றிக் கொண்டாட்டத்துடன் மாணவர் இளைஞர் போராட்டம் மெரினாவில் முடிவடைந்து கலைந்து சென்றால், பொது மக்களிடம் அரசுக்கு எதிராக போராடும் தன்னம்பிக்கை அதிகரித்து விடும்.

அதனை அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் மத்திய அரசின் உள்துறை கொடுத்த அழுத்தத்துக்கு அடிபணிந்தது தமிழ்நாட்டு பொம்மை அரசு. சென்னை காவல்துறை மாநகர ஆணையராக ஜார்ஜ் பொறுப்புக்கு வரும்போதெல்லாம் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறை அவிழ்த்து விடப்படும். இவை எல்லாம் ஒன்றிணைந்து ஜனவரி 23 அதிகாலை மெரினாவில் காவல் துறையினரை மனித உரிமை மீறல் நடவடிக்கையை நடத்த வைத்தது.

போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை எல்லாம் முடிந்த பின் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முதல் லெட்டர் பேடு கட்சி வரை கவரிங் நகை கணக்காக கண்டன அறிக்கைகளை மீடியாக்களுக்கு கொடுத்து கொண்டிருந்தனர்.

ஆனால் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ரணகளமான மெரினா கடற்கரைக்கோ, அலங்காநல்லூருக்கோ செல்லவில்லை. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போராட்ட களத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள், மத பிரார்தனை நடத்த போராட்டகாரர்கள் எப்படி அனுமதிக்கலாம் என்று திரியைக் கொளுத்தினார். இதை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இவரது தொடக்க கால அரசியல் நினைவலைகளில் வந்து போனது.

1982 மார்ச் மாதம் பிரிக்கப்படாத அன்றைய கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் இந்து – கிறிஸ்தவ மதத்தினருக்கிடையில் மதக் கலவரம் வெடித்தது. இடதுசாரி இயக்கங்கள் பலமாக இருந்த மாவட்டம். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தலைமையகமாகவும் இருந்தது. அன்றைய மதக் கலவரத்திற்கு காரணம் ஆர்எஸ்எஸ். அந்த அமைப்பில் பிரம்மச்சாரி வாழ்க்கையோடு தொண்டராக தன்னை இணைத்துக் கொண்டவர்தான் பொன் ராதாகிருஷ்ணன்.
இந்து – கிறிஸ்தவ மோதலில் மண்டைகாடு கலவர பூமியானது, ஊரடங்கு, ஊருக்குள் வெளியில் இருந்து யாரும் உள்ளே நுழைய முடியாத நிலைமை.

எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பின் ஏற்பட்ட முதல் மதக் கலவரம். அமைதியை ஏற்படுத்த முதல்வர் எம்ஜிஆர் தானே நேரில் செல்ல முடிவெடுத்தார். உளவுத் துறை, காவல் துறை தடுத்த போதும் மண்டைக்காடு செல்வதில் உறுதியாக இருந்தார்.
அதற்கு முன்னதாக மண்டைக்காடுக்கு குன்றக்குடி அடிகளாரை அனுப்பி வைத்தார் எம்ஜிஆர். கலவர பூமிக்குள் அனுமதிக்க காவல்துறை மறுத்தது. உங்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை என்றனர். அதனை மீறி ஊருக்குள் நுழைந்த அடிகளார், நேராகச் சென்று அமர்ந்தது கிறிஸ்தவர்கள் வழிபடும் சர்ச்சில். அடிகளார் சென்ற அடுத்த நாள் அன்றைய தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் உமாநாத் மண்டைகாடு வந்தடைந்தார்.

இவர்களைத் தொடர்ந்து முதல்வர் எம்ஜிஆர் வந்தார். கலவர பூமி சாந்த பூமியானது. சகோதர உறவு பலப்பட்டது.
கலவரம் நடக்கும் இடத்திற்கு மக்கள் தலைவர்கள், மதத் தலைவர்கள் உடனடியாக சென்றால் அசம்பாவிதங்கள் தடுக்கப்படும் என்பதற்கு மண்டைக்காடு மதக் கலவர இடத்திற்கு தலைவர்கள் உடனே வந்தது ஒரு உதாரணம்.

ஆனால் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, ஒட்டு மொத்த தமிழக மக்கள் பங்கேற்ற போராட்டம் மெரினாவில் நடந்தது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இருந்தது கூப்பிடு தூரத்தில். அதிகாலையில் தொலைக்காட்சியில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் காவல்துறையின் வன்முறை அதிர்ந்து போனதாகவே அறிக்கைகள் வந்தன.

குறைந்த பட்சம் கட்சி கடந்து, அரசியல் பார்வை கடந்து மனிதாபிமானத்தோடு மெரினா நோக்கி கட்சி தலைவர்கள் வந்திருந்தால் ஆளும் அதிகார வர்க்கமும், அவர்களால் ஏவிவிடப்பட்ட காவல் துறையும் அதிர்ச்சிக்குள்ளாகி அடக்கி வாசித்திருப்பார்கள். இவ்வளவு பெரிய சேதாரம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்காது. அரசியல் நாகரிகம் பேசும் தலைவர்கள் எம் ஜி ஆர் வழியையும், மத நல்லிணக்கம் பேசுவோர் அடிகளார் வழி நடப்பார்களா என்பதே தமிழக மக்களின் கேள்வி!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.