News
Loading...

பவர்சென்டர் திவாகரன்... பல்டி அடித்த ஆர்.காமராஜ்!

‘பவர்சென்டர்’ திவாகரன்... பல்டி அடித்த ஆர்.காமராஜ்!

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலாவையும் அவரது உறவுகளையும் தைரியமாக எதிர்த்த அ.தி.மு.க-வினர் எல்லாம், ஜெ. மறைவுக்குப் பிறகு மன்னார்குடி வகையறாக்களிடம் சரண்டராகும் படலம் அரங்கேறி வருகிறது. 

 சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி உறவுகளை 2011 டிசம்பரில் ஜெயலலிதா தூக்கியெறிந்தார். அப்போது, பதவியைத் தக்கவைக்க ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக மாறினார், தற்போது உணவுத் துறை அமைச்சராக இருக்கும் ஆர்.காமராஜ். சசிகலாவின் சகோதரர் திவாகரன் தொடர்பான அத்தனை ரகசியங்களையும் ஜெ-விடம் அவர் போட்டுக்கொடுத்தார். இதனால், ஆர்.காமராஜ் மீது கடும் கோபத்தில் இருந்தார் திவாகரன். ஜெ. மறைவுக்குப் பிறகு, மன்னார்குடி சொந்தங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. அதனால், திவாகரனின் காலில் விழுந்து விசுவாசம் காட்டினார் ஆர்.காமராஜ்.

சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடி அரசியல் வட்டத்தில் பரபரப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது, திவாகரனும் அமைச்சர் ஆர்.காமராஜும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டனர். 

இதுகுறித்து உள்விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம். ‘‘ஜெ. ஆட்சியின்போது திவாகரனைக் கைதுசெய்வதற்காக, அவரை போலீஸ் வலைவீசித் தேடியது. அவரது மனைவி ஹேமலதாவை நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீஸார் விசாரித்தனர். இதை எதிர்பார்க்காத திவாகரன், தானாகவே வந்து வலங்கைமானில் நீதிபதியிடம் சரண் அடைந்தார். அதன் பிறகு ஜெயில், வழக்கு என அலைக்கழிக்கப்பட்டு பலவித கஷ்டங்களுக்கும் ஆளானார். இவை அத்தனைக்கும் ‘ஆர்.காமராஜ்தான் காரணம்’ என்று திடமாக நம்பினார் திவாகரன். அதன் பிறகு, இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக மாறிப் போனார்கள்’’ என்றனர்.

திவாகரனை சந்திக்க அமைச்சர் காமராஜ் விரும்பியுள்ளார். அவரை சந்திக்க திவாகரன் முதலில் சிக்னல் தரவில்லையாம். ஒருகட்டத்தில், ‘நான் அண்ணனால் உருவாக்கப்பட்டவன். இந்தப் பதவி அவர் போட்ட பிச்சை. எனவே, நானே நேரடியாக அவரது வீட்டுக்குப்போகிறேன். என்னை சந்திக்க மறுத்தால் அவரது வீட்டு வாசலிலேயே எவ்வளவு நாட்களாக இருந்தாலும் காத்திருப்பேன்’ என திவாகரன் காதுகளில் கேட்கும் அளவுக்கு தகவலைத் தட்டிவிட்டுள்ளார் காமராஜ். அதன்பிறகே, திவாகரனிடம் இருந்து காமராஜுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்ததாம்.

சம்பவம் நடைபெற்றபோது, உடன் இருந்தவர்களிடம் பேசினோம். ‘‘மன்னை நகரில் உள்ள தனது வீட்டில் திவாகரன் இருந்தார். அதைத் தெரிந்துகொண்ட       ஆர்.காமராஜ், மதிய நேரத்தில் பத்துப் பேரை அழைத்துக்கொண்டு சந்திக்க வந்தார். நேராக திவாகரன் இருந்த அறைக்குச் சென்றார். திவாகரனுக்கு சால்வை போர்த்தி திடீரென அவரது காலில் விழுந்து தொட்டு வணங்கினார். அமைதியான முகத்துடன் திவாகரனும் அதை ஏற்றுக்கொண்டார். பின்னர் இருவரும் இருபது நிமிடங்களுக்கு மனம்விட்டுப் பேசினர். ‘நடந்தது நடந்து போச்சு. இனி எல்லாம் நல்லதே நடக்கட்டும்’ என்று திவாகரன் சொன்னார். அதாவது, காமராஜை மன்னித்துவிட்டார்’’ என்றார்கள்.

மீண்டும் அன்று மாலையில், நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க மாவட்டம் முழுக்க உள்ள முக்கிய நிர்வாகிகள் எல்லோரையும் அழைத்து வந்து திவாகரனை சந்திக்க வைத்துள்ளார் காமராஜ். அப்போது ஒரு சிலரை, பெயர் சொல்லி அழைத்துப் பேசிய திவாகரன், ‘எல்லோரும் ஒழுங்கா வேலையைப் பாருங்க. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்’ என்று கூறி உற்சாகமாக அனுப்பிவைத்தாராம். தான் சரண்டர் ஆனது, அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் புள்ளிகள் அனைவருக்கும் தெரிய வேண்டும்; இதன் மூலம் தான் திவாகரனின் ஆள்தான் என உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகளை காமராஜ் செய்தாராம். 

திவாகரன் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘ஆர்.காமராஜால் பட்ட கஷ்டங்களை அண்ணன் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ரொம்பவும் நெருங்கியெல்லாம் அவர் பேசவில்லை. அண்ணனுக்கும் லேசான பயம் இருக்கு. அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. சின்னம்மா, அ.தி.மு.க பொதுச் செயலாளராக ஆவதற்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் தயவு தேவைப்படுகிறது. அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை பெருக்கும் முயற்சியில் அண்ணன் இருக்கிறார். சொந்த மண்ணான மன்னார்குடியில், கட்சிக்குள் தன் செல்வாக்கைப் பெருக்க காமராஜ் உதவி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் அண்ணன் சமாதான சந்திப்பை ஏற்றுக்கொண்டார். முறையாக அதிகாரம் கைக்கு வந்த பிறகு ஆர்.காமராஜ் கட்டம் கட்டப்படுவார்’’ என்கிறார்கள்.

ஆடுபுலி ஆட்டத்தில் வெல்லப்போவது யார், தோற்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.