News
Loading...

கொதிப்பில் கார்டன்! பன்னீர்செல்வத்திடம் ஏன் பேசினார் அமித் ஷா?

கொதிப்பில் கார்டன்! பன்னீர்செல்வத்திடம் ஏன் பேசினார் அமித் ஷா?

மிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நடவடிக்கைகளால் அதிர்ந்து போய் உள்ளனர் மன்னார்குடி உறவுகள். ‘குடியரசு தின விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றது; விழாவில் பங்கேற்க மன்னார்குடி உறவுகளுக்கு அழைப்பிதழ் அனுப்பாதது; டெல்லி பா.ஜ.க நிர்வாகிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பது போன்ற காரணங்களால் கார்டன் தரப்பினர் கடுகடுப்பில் உள்ளனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆளுமையுள்ள முதல்வராகக் காட்டிக் கொள்ள முற்படுகிறார் பன்னீர்செல்வம்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. ‘பொங்கலுக்குள் முதல்வர் ஆவார்’ என உறுதியாகப் பேசி வந்த நிர்வாகிகள், கடந்த சில வாரங்களாக மௌன விரதத்தைக் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டனர். காரணம்… முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ‘திடீர்’ எழுச்சி. “ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்ததில் அ.தி.மு.க அரசுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. ‘ ஜல்லிக்கட்டு சட்டவழிமுறைகளை எளிதாக்கிக் கொடுங்கள்’ என பிரதமரிடம் நேரடியாகச் சென்று வலியுறுத்தி, ஒருநாள் தங்கியிருந்து அனுமதியைப் பெற்றுவந்தார் ஓ.பி.எஸ். மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தபோது, குடியரசு தினவிழா பதற்றத்தில் இருந்தார் முதல்வர்.

‘சட்டமன்றத்தில் அவசரச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டால் நிலைமை சுமூகமாகிவிடும்’ என அதிகாரிகள் தெரியப்படுத்த, சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார் ஓ.பி.எஸ். இது தொடர்பான நகலை மாணவர்களிடம் அளிப்பதற்கு முன், ‘சசிகலாவிடம் காண்பித்துவிட்டு அவர் மூலம் கொடுத்தால் நன்றாக இருக்கும்’ என கார்டன் நிர்வாகிகள் சொல்லவும், ‘அது தேவையற்ற விமர்சனங்களை உருவாக்கும்’ எனத் தவிர்த்துவிட்டார்.

இதனை மன்னார்குடி உறவுகள் எதிர்பார்க்கவில்லை. ‘டெல்லி செல்லும்போதும் நம்மைச் சந்திக்காமல் செல்கிறார்; என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்?’ என கொந்தளிப்பைக் காட்டியிருக்கிறார் சசிகலா. இதன்பின்னர், பன்னீர்செல்வத்தின் தொலைபேசி தொடர்புகளை ஆராய்ந்ததில், அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் சசிகலா” என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,

“குடியரசு தின விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் கொடியேற்றுவதற்கு 20 நாட்களுக்கு முன்னரே, கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். மகாராஷ்ட்ராவின் ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், அங்கு தன்னுடைய கட்சியின் முதல்வர் பட்னாவிஸை கொடியேற்ற வைத்துவிட்டு, தமிழகத்தில் கொடியேற்ற வந்திருக்கலாம்.

அப்படி இல்லாவிட்டால், தலைமை நீதிபதிக்கு கொடியேற்றும் வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். ‘மனைவி மற்றும் பேரக் குழந்தைகளுடன் பங்கேற்று, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என ஓ.பி.எஸ்ஸுக்கு அறிவுறுத்தியதே ஆளுநர்தான்.

இதன்பின்னணியில் பா.ஜ.க மேலிடத்தின் பங்கும் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக முதலமைச்சரின் தொடர்புகளை மன்னார்குடி உறவுகள் ஆராய்ந்துள்ளனர். அதில், மூன்று முறைக்கும் மேல் பன்னீர்செல்வத்திடம் பேசியிருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. ‘பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுகிறார்கள் என்றால், நிர்வாகரீதியான நடைமுறைகள் பற்றிப் பேசுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அமித் ஷா எதற்காகப் பேசுகிறார்?’ என அதிர்ந்து போய் உள்ளனர். அப்படியானால், கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க பா.ஜ.க முயல்கிறதா?’ எனக் கொந்தளிப்பில் உள்ளனர்” என்றார்.

“சட்டசபையில் பேசும்போது, ‘வரலாற்றில் இழந்த சின்னத்தை மீட்ட ஒரே பெருமை புரட்சித் தலைவிக்கு மட்டுமே சேரும்’ என நடராஜனுக்கு மறைமுகமாக பதிலடியைக் கொடுத்தார் ஓ.பி.எஸ். ‘என்னுடைய அரசாங்கம்’ என்பதைக் காட்டும் முனைப்பில் தீவிரமாக இருக்கிறார். குடியரசு தின விழாவில், தனக்கு அடுத்தபடியாக மனைவி விஜயலட்சுமியை அமர வைத்தார். டெல்லியில் பன்னீர்செல்வத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை தம்பிதுரையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழகப் பிரச்னைகள் குறித்து பிரதமரைச் சந்திக்க முடியவில்லை.

மன உறுத்தலாக இருக்கிறது’ என பகிரங்கமாக வெடித்தார். ‘பிரதமரைச் சந்திக்க முறையான அனுமதியை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்’ என பா.ஜ.கவினரும் பதிலடி கொடுத்தார்கள். உண்மையில், ‘பன்னீர்செல்வத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும்’ என்றுதான் தம்பிதுரை விரும்புகிறார். டெல்லியில் அவருடைய லாபி எடுபடாததால், தற்போது மைத்ரேயனை முன்னிறுத்தத் தொடங்கியுள்ளார் சசிகலா.

அவர் மூலமாக பிரதமரின் கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு செல்லும் முடிவில் இருக்கிறார். ‘தம்பிதுரையால் முடியாததை மைத்ரேயன் சாதிப்பார்’ என மன்னார்குடி உறவுகள் நம்புகின்றனர்.

இதையறிந்துதான், கார்டனை முன்னிறுத்தாமல், ஜல்லிக்கட்டு உள்பட பல விஷயங்களில் தன்னிச்சையாக இயங்கி வருகிறார் ஓ.பி.எஸ். ‘நம் கையை மீறிச் சென்று கொண்டிருக்கிறார்’ என கார்டன் தரப்பில் கவலை தெரிவித்தாலும், ‘நீங்கள் நினைப்பதுபோல் எதுவும் நடந்துவிடாது. நாம் சொல்லும்போது பதவியில் இருந்து விலகுவார் ஓ.பி.எஸ்’ என தினகரன் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். ஆனால், கோட்டைக்குள் ஓ.பி.எஸ் நடத்தும் தனி ஆவர்த்தனங்களால் அதிர்ந்து போய் நிற்கின்றனர் சீனியர் அமைச்சர்கள்” என்கிறார் அ.தி.மு.க முக்கிய பிரமுகர் ஒருவர்.

குடியரசு தின விழா கொண்டாட்டத்தோடு ஆட்சி அதிகாரத்தின், முக்கிய இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். ‘சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்குப் பிறகு முதல்வர் ஆவார் சசிகலா’ என நம்பிக் கொண்டிருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். அ.தி.மு.கவின் எதிர்காலம் குறித்த கவலை மட்டுமே தொண்டர்கள் மனதை வாட்டி வதைக்கிறது!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.