News
Loading...

சந்தோஷமாக வந்தார்... நொந்துபோய் சென்றார்!

சந்தோஷமாக வந்தார்... நொந்துபோய் சென்றார்!

வசரச் சட்டத்தை அறிவித்துவிட்டு அலங்காநல்லூரில் ஜல்லிக் கட்டைத் தொடங்கிவைக்கவரும் தனக்கு, மாணவர்களும் பொதுமக்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்துடன் வரவேற்பு அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன், கடந்த  22-ம் தேதி மதுரைக்கு வந்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், தங்கியிருந்த அறையைவிட்டு வெளியே வரமுடியாமல் நொந்துபோன மனநிலையில் அவர் சென்னைக்குத் திரும்பினார்.

அலங்காநல்லூருக்கு முதல்வர் வருகிறார் என்று அறிவித்தவுடன், விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ். ஆனால், அலங்காநல்லூர் மக்களும், போராட்டத்தில் இருந்த மாணவர்களும் ‘அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தரச் சட்டமே வேண்டும், அதுவரை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது’ என்று எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர். கலெக்டர் வீரராகவ ராவ் அலங்காநல்லூர் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மக்கள் சமாதானம் ஆகவில்லை. ‘‘இப்போது மட்டும் வந்திருக்கீங்க. 16-ம் தேதி லத்தி சார்ஜ் நடந்தபோது எங்கே போனீர்கள்?’’ என்று கலெக்டரிடம் மக்கள் கேட்டனர். அப்போது, அவருடன் சேர்ந்து அருகில் இருந்த எஸ்.பி. விஜயேந்திர பிதாரி நெளிந்தார். அதுமட்டுமில்லை... வாடிவாசலைப் பார்வையிட ஆட்சியரை அனுமதிக்கவில்லை. நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த கலெக்டர், ‘‘நாளை கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவர் அவ்வளவு நம்பிக்கையாகச் சொன்னதற்குக் காரணம்,  அ.தி.மு.க-வினர் தனக்கு உதவுவார்கள் என்பதால்தான். ஆனால், அ.தி.மு.க-வினரால் நிலைமை இன்னும் சிக்கலானதுதான் மிச்சம். 

அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ. மாணிக்கம் ஆகியோர் ஊர் மக்களையும், போராட்டக்காரர்களையும் சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. விடாமல் மழை பெய்தபோதிலும், அலங்காநல்லூர் உட்பட மதுரை முழுவதும் போர்க்கோலம் பூண்டிருந்தது. இரவு எட்டு மணி விமானத்தில் மதுரைக்கு வந்தார் முதல்வர். உற்சாகமில்லாத வரவேற்பைக்கண்ட முதல்வர், பெரும் ஏமாற்றம் அடைந்தார். அலங்காநல்லூர் மக்களின் எதிர்ப்பைப் பற்றி முதல்வரிடம் கலெக்டர் சொல்ல, அவர் அதிர்ச்சி அடைந்தார். 

பாண்டியன் ஹோட்டலில் தென் மாவட்டங்களின் அ.தி.மு.க செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ‘‘மக்கள் நம்மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’’ என்று எல்லோரும் பேசப் பேச, ஓ.பி.எஸ் கடும் எரிச்சல் அடைந்தார். பின்னர், செல்லூர் ராஜு மற்றும் ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் ஆகியோரை வரவழைத்து, ‘‘என்ன செய்வீங்களோ தெரியாது. நாளைக்குக் காலையில அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்’’ என்று ஓ.பி.எஸ் உத்தரவு போட்டார். சமீபகாலமாகப் போராட்டக் களத்துக்குச் செல்லாத ராஜசேகர், அலங்காநல்லூருக்குச் சென்றார். அவருடன் அமைச்சர் செல்லூர் ராஜுவும், போலீஸ் அதிகாரிகளும் சென்றனர். அவர்களை, ஊருக்குள் நுழைவதற்கு முன்பே மக்கள் திட்ட ஆரம்பித்தனர். செல்லூர் ராஜு காரிலிருந்து இறங்கவே இல்லை. வெறும் கையோடு அவர்கள்  மதுரைக்குத் திரும்பினர்.

மறுநாள் காலையில் எழுந்த முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நல்ல செய்தி எதுவும் கிடைக்கவில்லை. ‘‘மக்கள் சமாதானம் ஆகவில்லை. அங்குச் செல்வது சிரமம்தான். விஷமிகள் யாராவது குழப்பத்தை உண்டாக்கினால் அசிங்கமாகிவிடும்’’ என்று செல்லூர் ராஜு சொல்ல,  அவரைப் பார்த்து, ‘‘நீங்கள்லாம் மதுரையில நல்லா செல்வாக்கோடு  இருக்கீங்க... இல்ல’’ என்று நக்கலாகக் கேட்டுள்ளார் ஓ.பி.எஸ். ‘‘ஜல்லிக்கட்டை இங்கு வேறு ஏதாவது ஒரு கிராமத்தில் நடத்தலாமே’’ என்று அதிகாரிகள் ஐடியா சொல்ல, அதற்கு, ஓ.பி.எஸ். ஒப்புக்கொள்ளவில்லை. 

இதற்கிடையே, ‘எதிர்ப்பையும் மீறி போலீஸ் படையுடன் முதல்வர் அலங்காநல்லூர் வருகிறார்’ என்று தகவல் பரவ, சுற்றியுள்ள கிராம மக்கள் மரங்களை வெட்டி அலங்காநல்லூர் வரும் பாதை அனைத்திலும் போட்டு வைத்தனர். சந்துபொந்துகள் எல்லாம்கூட அடைக்கப்பட, மீண்டும் மக்களிடம் பேசுவதற்கு அலங்காநல்லூர் கிளம்பினார் கலெக்டர். அலங்காநல்லூருக்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே பொதுமக்கள் அவர் காரை மறித்தனர். அதனால் அவர், பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்றார். ஆனால், மக்கள் உறுதியாக இருந்ததால், விரக்தியோடு அவர் மதுரைக்குத் திரும்பிவிட்டார். 

சந்தோஷமாக வந்தார்... நொந்துபோய் சென்றார்!

முதல்வருக்கு 11.30 மணியில் இருந்து வரிசையாக மூன்று விமானங்களில் டிக்கெட் போட்டு வைத்திருந்தனர். ‘அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா’ என்று மீடியாக்கள் லைவ் காட்டிக்கொண்டிருக்க... அதைப் பார்த்தபடியே ஹோட்டலில் இருந்த முதல்வர், வாசலில் குவிந்துள்ள பத்திரிகையாளர்களிடம் என்ன சொல்வது என்று யோசனையில் இருந்தார். முதல்வர் அங்கு தவித்துக்கொண்டிருந்தபோது சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த செல்லூர் ராஜுவும், ஆர்.பி.உதயகுமாரும் ஜாலியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். தமுக்கம் போராட்டத்தில் இருந்த மாணவர்கள், முதல்வரை முற்றுகையிடக் கிளம்புவதாகத் தகவல் வந்ததால் போலீஸார் பதற்றம் அடைந்தனர். கடைசியில், முதல்வர் நிகழ்ச்சி ரத்து என்பது முடிவானது.  “அலங்காநல்லூர் மக்கள் விரும்பும் நாளில் அங்கு ஜல்லிக்கட்டு நடக்கும்” என்று நிருபர்களிடம் ஓ.பி.எஸ் பேசிவிட்டு, ஆளைவிட்டால் போதும் என்று கிளம்பினார்.

‘முதல்வர் பெயர் வாங்கிவிடக்கூடாது என்பதால்தான், மாவட்ட அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் அலட்சியமாக இருந்தனர். தங்களின் சசிகலா விசுவாசத்தைக் காட்டிக்கொண்டனர்’ என்பது மதுரைக்குள் தற்போதைய பேச்சு.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.