News
Loading...

காக்கிகளின் முகமூடி வெறியாட்டம்!

காக்கிகளின் முகமூடி வெறியாட்டம்!

டிசம்பர் 31-ம் தேதி இரவு! புத்தாண்டை வரவேற்க நடக்கும் கொண்டாட்டம் ஊரறிந்தது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அது களைகட்டும். மெரினா கடற்கரை காந்தி சிலைதான், கொண்டாட்டத்தின் மையப்புள்ளி. காந்தி சிலைக்கு எதிரே சாலையின் மையத்தில் இருக்கும் கடிகார முள் பன்னிரண்டைத் தொட்டதும் உற்சாகம் கரை புரளும். ‘புத்தாண்டுக்காக போலீஸ் குவிப்பு, ஓட்டல்களில் 1 மணி வரைதான் கொண்டாட்டம், சிறப்பான ஏற்பாடு’ என்றெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பே காக்கிகளிடம் இருந்து அறிவிப்பு எல்லாம் வரும். குடித்துவிட்டு கும்மாளம் போடும் இளைஞர் பட்டாளம் கடற்கரையில் எல்லை மீறும். பாலியல் சீண்டல்கள் அரங்கேறும். கைகலப்புகள் நடக்கும்.

அதே காந்தி சிலை அமைந்திருக்கும் கடற்கரையில் எவ்வளவு கண்ணியத்தோடு போராட்டத்தை முன்னெடுத்து சென்றார்கள் இளைஞர்கள்! மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்குகூட வேலை வைக்காமல், உணவுக் குப்பைகளைக்கூட சேகரித்த இளைஞர்கள், அப்துல் கலாமின் கனவு நாயகர்கள். காக்னிசென்ட், ஹெச்.சி.எல் என பெயர் தாங்கிய பைகளைச் சுமந்த கரங்கள்தான் குப்பைகளை அள்ளின. அப்படி ஆறு நாட்களாக அள்ளப்பட்ட குப்பைகளில் ஒரு பீர் பாட்டிலைக்கூட பார்க்க முடியவில்லை. நள்ளிரவைத் தாண்டியும் இளம்பெண்கள் அங்கே பாதுகாப்போடு குழுமியிருந்தார்கள். லட்சக்கணக்கில் திரண்ட கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் ஆரம்பித்து மருத்துவ உதவிகள் வரையில் அந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம், உலகுக்குச் சொல்லப்பட்ட பாடம். மெரினா நோக்கி வந்த அத்தனை வாகனங்களையும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஒழுங்குபடுத்தியது, போக்குவரத்து போலீசாரால்கூட செய்ய முடியாத காரியம்.

‘ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு... போலீஸ் எங்க ஃபிரண்டு’ என கோஷமிட்டு நட்பு பாராட்டிய இவர்களைத்தான் வன்முறையாளர்கள் போல கையாண்டிருக்கிறது, போலீஸ்! அமைதிப் போராட்டத்தை நடத்தியவர்களை, வன்முறையால் எதிர்கொண்டிருக்கிறது அரசு. கலவரக்காரர்கள் ‘முகமூடி’ போட்டு கல் வீச்சு நடத்தும் காட்சிகளைத் தான் நாம் பார்த்திருக்கிறோம். காக்கிகள் முகமூடி போட்டு நடத்திய வெறியாட்டம், இதுவரை நடக்காத அதிசயம்.

தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமானவரி சோதனை போட துணை ராணுவத்தை அனுப்பியபோது, தலைமைச் செயலகத்துக்குள் ரெய்டு நடத்தியபோது, பொங்காத ஆத்திரத்தை எல்லாம் இளைஞர்கள் மீது காட்டியிருக்கிறார்கள். காந்தி சிலை அமைந்திருந்த சாலையில் ‘அகிம்சை’யை வெளிக்காட்டியவர் களுக்கு ‘நாங்கள் கோட்சேதான்’ என காக்கிகள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். கண்ணீர் பெருக்கோடு நடந்த போராட்டத்தை கண்ணீர்ப் புகை வீச்சாக மாற்றியது ‘இது அமைதிப் போராட்டம் அல்ல... வன்முறைப் போராட்டம்’ என வரலாற்றில் பதிய வைக்கத்தானா?

‘இயல்பாக’த் தொடங்கிய போராட்டத்தை ‘திட்டமிடல்’ செய்து ஒடுக்க நினைத்தது அப்பட்டமாகிவிட்டது. மெரினாவுக்கு வரும் சாலைகளை எல்லாம் அடைத்து, அங்கே வரும் பறக்கும் ரயிலையும் நிறுத்தி அரண் அமைத்ததற்கு எல்லாம் என்ன அர்த்தம்? ‘செளரி செளராவுக்கு பிறகே காந்தி அமைதியானார்’ என்கிற அரிச்சுவடியைப் படித்துவிட்டு வந்தது போல இருந்தது போலீஸ் நடத்தும் நாடகம். 

நேர்மையாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி யிருந்தால் இத்தனை ஒழுக்கத்தோடு போராட்டம் நடத்தியவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் போயிருப்பார்களா? ‘‘குடியரசு தினத்துக்கு கடற்கரை அவசியம். போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுங்கள்’’ என சொல்லியிருக்கலாம். ‘24 மணி நேரம்’ கெடு விதித்து அதன்பிறகு தங்கள் பலபிரயோகத்தை காட்டியிருக்கலாம். அவசரச் சட்டம் போட்டபிறகு ‘ஜல்லிக்கட்டை நடத்து கிறோம்’ என்பதில் காட்டிய வேகத்தை மாணவர்களிடமும் காட்டி விட்டார்கள். முதல்வர் தொடங்கி வைக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டை மெரினாவில் நேரலையில் காட்ட அரசின் செய்தித்துறை வேன்களைக் கொண்டுவந்து நிறுத்துவதில் காட்டிய ஆர்வத்தை, அவசர சட்டம் குறித்த விளக்கத்தை மாணவர்களுக்குச் சொல்வதில் காட்டியிருந்தால் அரசின் அக்கறை இளைஞர்களுக்கு புரிந்திருக்குமே. கால அவகாசம் கேட்டார்களே, அதைக் கொடுத்தார்களா? ‘‘அவசர சட்டம் நிரந்தரம் ஆகும். அப்படி ஆகவில்லை என்றால் மீண்டும் நீங்கள் போராட்டத்துக்கு வாருங்கள்’’ என ஒரு வாக்குறுதியையாவது அரசால் சொல்ல முடிந்ததா?

காக்கிகளின் முகமூடி வெறியாட்டம்!

முகமூடி அணிந்து வந்த விஜய்யும், தலையைத் துணி போட்டு மறைத்துக்கொண்டு வந்த நயன்தாராவும் மெரினாவுக்கு வந்துபோன சுவடே தெரியாமல் போனபோதும், அவர்களோடு ஒரு செல்ஃபி எடுக்கக்கூட ஆர்வம் காட்டாத கூட்டத்தைப் பார்த்தபோதும்கூடவா, போராட் டத்தின் வலிமை புரியவில்லை? போராட்டத்தில் பங்கேற்ற வி.ஐ.பி-களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைவைத்தே இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் முயற்சிகளை எடுக்காமல், ‘தேச விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்... மோடியை எதிர்க்கிறார்கள்... பெப்சி, கோக் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு’ என்றெல்லாம் பேச வைக்க முடிந்தவர்கள், போராட்டக்காரர்களோடு நெருக்கமானவர்களைப் பேச வைக்காமல் போனது ஏன்? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதைப் போராட்டக் காரர்களிடம் சொல்லி அதன்பிறகு அவர்கள் கேட்காமல் போயிருந்தால் அதில் நியாயம் இருந்திருக்கும். தீர்மானம் நிறைவேற்ற எட்டு மணி நேர இடைவெளி இருந்தபோது அதற்குள் போராட்டத்தை ஒடுக்க வேண்டியது ஏன்?

எல்லாக் கேள்விகளும் தலைமைச் செயலகத்தை நோக்கியவைதான். மெரினாவை அல்ல!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.