News
Loading...

தொடங்கிய ஊரில் முடித்துவைத்த போலீஸ்!

தொடங்கிய ஊரில் முடித்துவைத்த போலீஸ்!

லங்காநல்லூரில் கடந்த 16-ம் தேதி ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கப் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தி தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் கொழுந்துவிட்டு எரியக் காரணமான காவல்துறை, 23-ம் தேதி காலை அதைவிட கடுமையான தாக்குதலை நடத்தி, போராட்டத்தை முடித்துவைத்துள்ளது.

கடந்த 22-ம் தேதி ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்க மதுரை வந்த முதல்வர் ஓ.பி.எஸ்-ஸை அலங்காநல்லூருக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கடுமையான எதிர்ப்பை ஊர்க்காரர்களும் மாணவர்களும் காட்டி முதல்வரைச் சென்னைக்குத் திருப்பிவிட்டபோதே காவல் துறையால் அலங்காநல்லூருக்கு நாள் குறிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல், சமாதானம் பேசவந்த மதுரை கலெக்டர் வீரராகவ ராவை நெடுந்தூரம் நடக்கவிட்டு அலைக்கழித்ததையும், அமைச்சர்களை அவமானப்படுத்தித் திரும்பிப் போகச் சொன்னதையும் அதிகாரிகள் மனதுக்குள் அப்போதே குறித்து வைத்துக்கொண்டார்கள்.

சென்னை மெரினாவில் இரவில் குவிக்கப்பட்டபோதே அலங்காநல்லூரிலும், மதுரை தமுக்கத்திலும் போலீஸ் குவிக்கப்பட்டது. காலை முதலே வெளியூர் ஆட்களை அலங்காநல்லூரை நோக்கிவரும் வழிகளில் அனுமதிக்கவில்லை. ‘அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி, இங்கே யாரும் போராட்டம் செய்ய அனுமதி இல்லை, கலைந்து செல்லுங்கள்’ என்று அறிவிப்பு செய்தார்கள். அதற்குப்பின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியிடம் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. “முதல்வரையே திரும்பிப் போக வைத்துள்ளீர்கள். இது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? தமிழ்நாட்டில் கடலை மிட்டாய் சைஸ் ஊர் இது. பத்து நிமிடங்களில் எல்லோர் மீதும் வழக்கு போட்டுவிடுவோம், ஜல்லிக்கட்டுப் பிரச்னையை ஓவராகச் செய்துவிட்டீர்கள்’’ என அமைதிப் பேச்சுவார்த்தை(!) நடத்தியது போலீஸ். இதற்கு பயந்து வேறு வழியில்லாமல் முனியாண்டி கோயிலில் ஊர்க்கூட்டத்தைப் போட்டனர் அவர்கள். “பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்போகிறோம், எங்களுக்காகப் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், பாதுகாப்பு அளித்த காவல் துறைக்கும், அவசரச் சட்டம் கொண்டுவந்த மத்திய - மாநில அரசுகளுக்கும், உதவிய ஊடகங்களுக்கும் நன்றி’’ என்று தீர்மானம் போட்டதாக அறிவித்தார்கள். இவர்கள் போட்ட தீர்மானத்தை ஊர் மக்கள் சிலரும் போராட்டக்காரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மாணவர்களோடு சில அமைப்பினரும் கலந்து இருந்ததால், தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி போராட்டம் நடத்தினர். அதே நேரம் ஊரைச்சுற்றி லத்தியுடன் போலீஸ் வரிசை கட்டி நிற்கத் தொடங்கியது. அதை உணர்ந்த போராட்டக்காரர்கள் இன்னும் தீவிரமாகப் பேச தொடங்கினார்கள்.  உடனே, போலீஸார் போராட்டக் களத்துக்குள் நுழைந்து சரமாரியாகத் தடியடி நடத்த ஆரம்பித்தார்கள். இளைஞர்கள் ஓடாமல், இருந்த இடத்திலிருந்து அடிகளை வாங்கினாலும், அவர்களை கொலைவெறியோடு தாக்கியது போலீஸ். போராட்டத்தில் கலந்துகொண்ட உள்ளூர்ப் பெண்கள் மீதும்  மிருகத்தனமான தாக்குதல் நடந்தது. ஒவ்வொருவரையும் சொல்லிச்சொல்லி அடித்திருக்கிறார்கள். சிலர் அடி வாங்கி அங்கேயே சுருண்டு கிடந்தார்கள். அவர்களை மிதித்துக்கொண்டு முன்னேறி, மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியது போலீஸ். சிலர் போலீஸ் மீது கல்லை எறிய, பதிலுக்கு போலீஸும் கற்களை வீச... அந்தப் பகுதியே ரணகளமானது. காவலர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. பத்திரிகையாளர்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். கடைகளுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் நுழைந்து பத்திரிகையாளர்கள் தப்பித்தனர். ஒரு மணி நேரத்துக்குள் புயல் அடித்து ஓய்ந்த நகரம்போல அலங்காநல்லூர் மாறியது. சில போலீஸ் அதிகாரிகள் ஊர்க்காரர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள். மீடியாவையும் திட்டினார்கள். வீதிகள் வெறிச்சோடிய பின்னும் போலீஸின் கோரத் தாண்டவம் அடங்கவில்லை. வீடு வீடாகத் தேடிச்சென்று இழுத்துவந்து அடித்தார்கள்.

தொடங்கிய ஊரில் முடித்துவைத்த போலீஸ்!

மாணவர்கள் ஜெய்ஹிந்த் முழக்கத்துடன் தொடர்ந்து போராடினார்கள். ஜெய்ஹிந்த் கோஷத்துக்கு மக்கள்தான் மரியாதை கொடுக்க வேண்டும்... போலீஸுக்கு அது இல்லையே! பெண் போலீஸ் மூலம் முதலில் பெண்களை வெளியே தள்ளிவிட்டனர். பிறகு அனைத்து மாணவர்களையும் இருபுறமாகக் கலைத்தனர். மீண்டும் வந்து உட்கார்ந்த மாணவர்களை போலீஸ் மீண்டும் தாக்கியது. கல்வீச்சுகள் இருபுறமும் வலுத்தது. தடியடி சூடுபிடித்து அனைவரும் அடித்து நொறுக்கப்பட்டனர். ரத்தக்காயங்களுடன் மாணவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டனர். மாணவி ஒருவர் முகத்தில் கல் வேகமாகப் பாய்ந்ததில் அவரது கண் பாதிக்கப்பட்டது. மீடியாக்கள் வெளியேற்றப்பட்டு போலீஸ் கன்ட்ரோலில் வந்தது ஊர். 

கடந்த இரண்டு நாட்களாகவே, ஒற்றுமையாக இருந்த மக்களைச் சாதிரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பிளவுபடுத்தினார்கள். ‘சின்னம்மா முதல்வராக வரவிடாமல் சிலர் இப்படி போராட்டம் செய்வதாக’ ஒருபக்கம் பரப்பினார்கள். அதனால், மாணவர்கள் போராட்டத்தில் ஊர்க்காரர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதை மீறியும் உள்ளூர்ப் பெண்கள் சிலர் போராட்டக்களத்தில் இருந்தனர். அவர்களைக் காட்டுத்தனமாக அடித்தது போலீஸ்.

மதுரையில் தமுக்கம் மைதானத்தில், காலையில் கமிஷனர் சைலேஷ்குமார் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. கலைந்து செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டும் மாணவர்கள் கலைந்து செல்லவில்லை. 

அதிகாலையில் செல்லூர் பாலத்தில் ரயிலை மறித்து வைத்திருந்தவர்களை வெளியேற்றினார்கள்.

பெரியார் பேருந்து நிலையத்தில் நடந்த போராட்டத்தையும் கலைத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் செல்லூர் பாலத்துக்கு அருகே பொதுமக்களும் மாணவர்களும் வந்து உட்கார்ந்தனர். இதனால், ரயிலை இழுத்துச் செல்ல வந்த இன்னொரு என்ஜினும் மாட்டிக்கொண்டது.

தொடங்கிய ஊரில் முடித்துவைத்த போலீஸ்!

‘‘அவசரச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் இந்த சட்டம் உறுதியானது எனச் சொல்ல வேண்டும். இதை வரும் காலத்தில் நிரந்தரச் சட்டமாக கொண்டுவர வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை என்றால் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறோம் என்று எழுதிக்கொடுக்க வேண்டும். அவ்வாறு எழுதிக்கொடுத்தால் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்’’ என்று அலங்காநல்லூரில் போராட்டம் செய்யும் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தமுக்கம் மைதானத்தில், ‘போராட்டத்துக்குள் சில தீவிரவாத அமைப்பினர் இருக்கிறார்கள்’ என அறிவிப்பு செய்தது போலீஸ். அதை மாணவர்கள் சட்டை செய்யவில்லை. நேரம் ஆக ஆக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. கோரிப்பாளையம் சிக்னல் முதல் தமுக்கம் வரை தடுப்பு அமைக்கப்பட்டது. அப்படியும் மாணவர்கள் கலையவில்லை. 

பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தடியடி நடத்த போலீஸ் யோசிப்பதுதான் கடைசிக்கட்ட தகவல். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.