News
Loading...

தாலி இருக்காதுன்னு மிரட்டினாங்க! - ரூதர்புரத்தில் நடந்த ருத்ர தாண்டவம்

“தாலி இருக்காதுன்னு மிரட்டினாங்க!” - ரூதர்புரத்தில் நடந்த ருத்ர தாண்டவம்

‘தமிழகத்தைச் சேர்ந்த 22 காவல் துறையினருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம்’ என்ற செய்தி வெளியான அதே நேரத்தில்தான், தமிழகக் காவல்துறையினரால் சென்னை கடற்கரை அருகே சிட்டி சென்டர் பகுதிக்குப் பின்னால் இருக்கும் ரூதர்புரம் பகுதியில் கொளுத்தப்பட்ட ஆட்டோக்களின் தீ முழுவதுமாக அணைந்து முடிந்திருந்தது. 

போலீஸின் திடீர் தடியடியால் மெரினாவிலிருந்து சிதறி ஓடிய ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர், சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் பின்புறம் உள்ள ரூதர்புரம் பகுதியில் அமர்ந்து, போலீஸாரின் தாக்குதலைக் கண்டித்துப் போராட ஆரம்பித்தனர். அவர்களைக் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டே, இன்னொருபுறம் அந்தப் பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களின் இணைப்புகளைத் துண்டிக்கச் சொல்லி உத்தரவிட்டுக் கொண்டிருந்தது காவல் துறை.  ஊடகங்களின் கண் முன்னே சமாதானம் பேசிய காவல்துறையினர், ஊடகங்கள் அங்கிருந்து அகன்றதும் நிகழ்த்தியது ருத்ர தாண்டவம்.

போராட்டக்காரர்கள் மட்டுமின்றி, அந்தப் பகுதிவாசிகளும் இதில் சிக்கி வேதனை அனுபவித்தனர். வீதிகளில் நிறுத்திவைத்திருந்த ஆட்டோக்களையும் வாகனங்களையும் போலீஸே தீயிட்டுக் கொளுத்தியது. காவல்துறையினர் தீயிட்டுக் கொளுத்திய ஒரு ஆட்டோவின் சொந்தக்காரர் செல்வகுமார். போலீஸாரின் தாக்குதலில் எலும்புகள் உடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

“தாலி இருக்காதுன்னு மிரட்டினாங்க!” - ரூதர்புரத்தில் நடந்த ருத்ர தாண்டவம்

அவர் தாய் ஞானம்மாள் மட்டுமே வீட்டில் இருந்தநிலையில், வீட்டுக்கதவை லத்தியால் அடித்தும் கற்களை எறிந்தும் தாக்கியுள்ளது போலீஸ். 75 வயது ஞானம்மாள் கண்ணீரும் பயமும் நிறைந்த குரலில் நடந்ததை விவரிக்கிறார். ‘‘என் பையனோட ஆட்டோவைப் போலீஸ் கொளுத்திட்டாங்கன்னு அங்கிருந்து ஓடி வந்தவங்க சொன்னாங்க. உடம்பு முடியாத என்னால, எழுந்து வேகமாக நடக்கக்கூட முடியாது. என்ன செய்றதுன்னு தெரியாம பயந்துகிட்டே வீட்டுக்குள்ள கதவை மூடிட்டு உட்கார்ந்துருந்தேன். அப்போது வந்த போலீஸ்காரங்க, வீட்டுக்கதவை லத்தியால அடிச்சி திறக்கச் சொன்னாங்க. ‘என்னால நடக்க முடியாது. என்ன விட்டுடுங்க’ன்னு அலறினேன். ‘கடவுளே! என் புள்ளைங்களப் பாக்கற வரைக்குமாவது என்னை உசிரோட வெச்சுக்க’ன்னு வேண்டிக்கிட்டேன். வேற எதுவும் என்னால அப்போ செய்ய முடியலை. எங்க வீட்டு வாசலில் இருந்த வண்டியை எல்லாம் உடைச்சுப் போட்டுட்டு நகர்ந்துட்டாங்க போலீஸ்காரங்க. நீங்களே சொல்லுங்கம்மா... என்னைப் பார்த்தா போராட்டத்துக்கு போகிற மாதிரியா இருக்கு?” என்று கைகள் நடுங்கக் கேட்கிறார் அவர்.

“தாலி இருக்காதுன்னு மிரட்டினாங்க!” - ரூதர்புரத்தில் நடந்த ருத்ர தாண்டவம்

ரூதர்புரத்தின் தொடக்கத்தில் இருக்கிறது நிரஞ்சனாவின் வீடு. அவருடைய இரண்டு குழந்தைகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் போலீஸார் அவர்கள் வீதியில் நுழைந்துள்ளனர். மரண பயம் விலகாத விழிகளோடே அப்போது நடந்ததை விவரிக்கிறார் நிரஞ்சனா... ‘‘திடீர்னு வீட்டுக்குள்ள நுழைஞ்ச போலீஸ், ‘வீட்டு ஆம்பிளைங்க எங்க?’ன்னு கேட்டாங்க. ‘வேலைக்குப் போயிருக்காங்க’ன்னு சொன்னேன். ‘பொய் சொல்லாதே! உன்னோட தாலி இருக்காது’ன்னு மிரட்டினாங்க. ஒரு லேடி போலீஸ் லத்தியாலேயே கழுத்துல ஓங்கி அடிச்சாங்க. விலா எலும்பு நொறுங்கற மாதிரி வலியில துடிச்சுப்போனேன். நான்கூட பரவாயில்லை... இதையெல்லாம் பொறுத்துப்பேன். குழந்தைங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. லத்தியால அவங்க பக்கத்துல போய் தட்டி மிரட்டினாங்க. இத்தனைக்கும் நாங்க போராட்டம் நடந்த பக்கம்கூட போகல. இதுதான் எங்களோட வீடு... போலீஸே இப்படி பயமுறுத்தினா இதை விட்டுட்டு நாங்க எங்க ஓட முடியும்?” என்கிறார். அருகில் நின்றிருந்த குழந்தைகள் கண்களில் இப்போதும் மிரட்சி விலகவில்லை. சிறுபிஞ்சுகளின் இதயத்தில் இப்படியான உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துவதை விட பெருங்குற்றமாக எது இருந்துவிட முடியும்?

காக்கிச்சட்டைகள் கலவரம் நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பொற்கொடியிடமும், கலவரம் பற்றிச் சொல்ல கண்ணீர்க்கதை இருக்கிறது. ‘‘நான் அப்போதான் வந்தேன். சுற்றி என்ன நடக்குதுன்னு பார்த்துக்கிட்டு இருந்தப்போ, என் தெருவழியாகப் போன போலீஸ்காரர் ஒருத்தர், என்கிட்ட இரண்டு காலையும் விரிச்சு காண்பிச்சாரு. நான் என்ன பாவம் செஞ்சேன்? அதுமட்டுமில்லாம, லேடி போலீஸ் வந்து சொல்லத் தயங்கற வார்த்தைகளை எல்லாம் எங்கக்கிட்ட சொன்னாங்க. கையில லத்தியோட வீட்டுக்குள்ளே நுழைய இருந்தாங்க போலீஸ். அதனால் பொம்பளப் பிள்ளைங்க எல்லோரும் வீட்டுல இருந்த மிளகாய்தூளை எடுத்து வெச்சிட்டு இருந்தோம். அதனால போலீஸ்காரங்க எங்க மேல கல் வீச ஆரம்பிச்சிட்டாங்க. மூட்டை மூட்டையா பாட்டில் எல்லாம் அவங்களுக்கு எப்படி கிடைச்சிச்சுதுன்னு தெரியலை.... பாட்டில்களை எல்லாம் எங்க தலைமேல வீசி எறிஞ்சாங்க. வயசுக்கு வந்த பொண்ணுகிட்ட அராஜகமா அருவருப்பா பேசித் திட்டினாங்க” என்று நடுக்கம் குறையாத குரலில் சொல்லி முடிக்கிறார் பொற்கொடி. 

தூரத்தில் காவல் வாகனத்தின் சைரன் ஒலி கேட்கிறது. சுற்றிலும் இருக்கும் பெண்கள் உடல் அதைக் கேட்கும்போதே நடுங்குகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் எந்தவித வன்முறைக்கும் இ.ப.கோ 354-ன் படி நடவடிக்கை எடுக்க முடியும். நடவடிக்கை எடுக்குமா நீதிமன்றம்?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.