News
Loading...

போர்முனையில்கூட இவ்வளவு ஆபத்து இல்லை! மீடியாவை பதம் பார்த்த லத்திகள்!

போர்முனையில்கூட இவ்வளவு ஆபத்து இல்லை! மீடியாவை பதம் பார்த்த லத்திகள்!

மெரினா போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸ் ஆரம்பக் கட்டத்தில் அமைதியாக இருந்தது. அதற்குக் காரணம், அங்கிருந்த மீடியா. பின்னர், போலீஸ் நிகழ்த்திய அத்து மீறல்களை அம்பலமாக்கி தமிழகத்தை பதை பதைத்துப் போகச் செய்ததும் மீடியாதான். 

இதனால் பத்திரிகையாளர்களைக் குறி வைத்துத் தாக்கியது போலீஸ். மெரினா போராட்டக்களத்தில் 7 பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். “நாங்கள் பத்திரிகையா ளர்கள்” என்று சொன்னபிறகும் அவர்களைத் தாக்கியது மட்டுமல்லாமல், அவர்கள் வைத்திருந்த கேமராக்களை உடைத்து, அவற்றில் பதிவாகி இருந்த புகைப்படங்களை அழித்திருக்கின்றனர். தங்களுடைய அராஜகத்துக்கு ஆதாரம் இருந்துவிடக் கூடாது என்பதில் போலீஸார் கவனத்துடன் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். 

போர்முனையில்கூட இவ்வளவு ஆபத்து இல்லை! மீடியாவை பதம் பார்த்த லத்திகள்!

போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளான ‘பி.பி.சி’ நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவு செய்தியாளர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “மெரினாவில் 23-ம் தேதி காலை இளைஞர்களை போலீஸார் வலுக் கட்டாயமாக வெளியேற்றிக்கொண்டிருந்தனர். அந்த நிகழ்வுகளை நாங்கள் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தோம். திடீரென அவ்வை சண்முகம் சாலையில் பதற்றமான சூழல் நிலவியதாக தகவல் வந்ததால், அங்கு சென்றோம். போராட்டக் காரர்கள்மீது போலீஸார் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். இந்தச் சம்பவத்தை, நான் நேரலையாக செய்தி கொடுத்துக் கொண்டிருந்தேன். போலீஸார் இதைப் பார்த்ததும் என்னை நோக்கி வந்தனர். நாங்கள் கேமராவால் ஜூம் செய்து கொண்டிருந்தபோது, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக,  போலீஸார் கற்களைக் குவித்து வைத்திருந்த காட்சிகளும் தெளிவாகப் பதிவாகி விட்டன. இதில்தான் போலீஸார் டென்ஷன் ஆகிவிட்டனர். நேரடி லைவ் காட்சியில் இருந்த கேமராவை லத்தியால் அடித்துத் தாக்கினர். தங்களுக்கு எதிரான சாட்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லென்ஸ் உடைந்து போய்விட்டது” என்றார்.  

போர்முனையில்கூட இவ்வளவு ஆபத்து இல்லை! மீடியாவை பதம் பார்த்த லத்திகள்!

‘தினகரன்’ நாளிதழின் புகைப்படக்காரர் அருண் மீதும் போலீஸார் தாக்குதல் நடத்தினர். அவரிடம் பேசினோம். “ஐஸ் ஹவுஸ் அருகே நிலைமை மோசமானதால், பாதுகாப்பு கருதி நான் அங்கிருந்த ஒரு கட்டடத்தில் 6-வது மாடிக்குச் சென்று நின்றுகொண்டேன். நான் நின்றிருந்த கட்டடத்தில் இருந்த வீடுகளுக்குள் எல்லாம் போலீஸார் வந்து விசாரித்தனர். அப்படி 6-வது மாடிக்கு வந்தவர்கள், ‘யார் நீ’ என்றனர். ‘பத்திரிகை புகைப்படக்காரர்’ என்றேன். லத்தியால் என் முகத்தில் அடித்தனர். அடையாள அட்டையைக் காட்டினேன். அதைப் பார்த்தபிறகுதான் அவர்களின் ஆத்திரம் இன்னும் அதிகமானது. என்னைக் கீழே தள்ளி, ஷூ காலால் மிதித்தனர். வலி பொறுக்காமல் நான் அலறியபோதும், லத்தியால் முதுகு, தோள்பட்டை என்று அடித்துக் கொண்டே இருந்தனர். என் கேமராவில் பதிவாகி இருந்த படங்களை எல்லாம் அழிக்கச் சொன்னார்கள். அழித்துவிட்டேன். அதன்பின்னும் மெமரி கார்டைப் பிடுங்கி உடைத்தனர். பிறகு கீழே அழைத்துச் சென்றனர். அங்கு நின்ற போலீஸாரும் அவர்கள் பங்குக்கு என்னை லத்தியால் அடித்தனர். ‘வலி தாங்க முடியவில்லை, தயவுசெய்து என்னை அடிக்காதீர்கள்’ என்று கையெடுத்துக் கும்பிட்டேன். ஆனாலும், விடாமல் அடித்தனர்” என்றார் வேதனையுடன். 

போர்முனையில்கூட இவ்வளவு ஆபத்து இல்லை! மீடியாவை பதம் பார்த்த லத்திகள்!

‘பாலிமர் தொலைக்காட்சி’யின் சுரேந்தர் மீதும் கண்மூடித்தனமாக போலீஸார் தாக்கி இருக்கின்றனர். மருத்துவமனையில் இருந்த சுரேந்தரிடம் பேசினோம். “ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் எதிரே நின்று கொண்டிருந்தேன். என்னிடம் வந்த ஒரு போலீஸ்காரர், ‘யார் நீங்க’ என்றார். அடையாள அட்டையைக் காண்பித்ததும் கோபமாகி, ‘உங்களால்தான்டா இவ்வளவு பிரச்னையும்’ என்று அடிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்ததும், மேலும் 10 போலீஸ்காரர்களும் ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினேன். இருந்தும் விடாமல் துரத்திவந்த ஒரு போலீஸ்காரர் என்னைக் கீழே தள்ளிவிட்டார். சட்டையைப் பிடித்து இழுத்தார். அங்கு வந்த மேலும் சில போலீஸ்காரர்கள் என் தலையில் உருட்டுக் கட்டைகளால் தாக்கினர்.  தலையில் படுகாயமாகி, ரத்தம் வழிந்தது” என்றார்.  

‘தீக்கதிர்’ நாளிதழ் புகைப்படக்காரர் இலட்சுமிகாந்த் பாரதியின் மீதும் தாக்குதல் நடந்திருக்கிறது. அவரிடம் பேசினோம். “போராட்டத்தில் ஈடுபட் டிருந்த இளைஞர்களை போலீஸார் அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர். ஒரு இளைஞர் போராட்டத்தில் இருந்து வெளியேறி தன் டூ வீலரை எடுத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் போலீஸார் சிலர் விடாமல் அவரை லத்தியால் தாக்கிக் கொண்டிருந்தனர். இதை நான் புகைப்படம் எடுத்தேன். உடனே போலீஸார் என் பக்கம் வெறியோடு திரும்பினர். என் அருகே வந்தவர்கள், ‘யார்டா நீ? எந்தப் பத்திரிகை?’ என்றார்கள். ‘தீக்கதிர்’ என்று சொன்னதும், மோசமான வார்த்தையால் திட்டினர். கேமராவைப் பிடுங்கி, மெமரி கார்டை எடுத்துக்கொண்டனர். லத்தியால் அடித்து, ‘ஓடிப்போயிடு’ என்று துரத்தினர்” என்றார்.   

பாலிமர் தொலைக்காட்சியைச் சேர்ந்த பழனி, மணிக்குமார், ‘நியூஸ் 7 தொலைக்காட்சி’ செய்தி யாளர் பிரபாகரன் ஆகியோரும் போலீஸாரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். போர் முனையில்கூட பத்திரிகையாளர்கள் இவ்வளவு அபாயத்தை உணர்ந்தது இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.