News
Loading...

ஊரையே சுடுகாடா ஆக்கிப்புட்டீங்களே! - அடைக்கலம் தந்ததால் தாக்கப்பட்ட குப்பங்கள்

“ஊரையே சுடுகாடா ஆக்கிப்புட்டீங்களே!” - அடைக்கலம் தந்ததால் தாக்கப்பட்ட குப்பங்கள்

ப்போதும் மக்கள் கூட்டத்தால் திணறிக்கொண்டிருக்கும் சென்னை நடுக்குப்பம் மீன் மார்க்கெட், மயான பூமியாக மாற்றப்பட்டுக் கிடக்கிறது. ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கான களமாக இருந்த இடம், இப்போது சாம்பல்மேடாக மிஞ்சியிருக்கிறது. அங்கு, ஏராளமான மீனவப் பெண்கள், இழவு வீட்டுக்கு வந்த கூட்டத்தைப்போல சோகத்துடன் இருக்கின்றனர். 

 ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடந்த இளைஞர் - மாணவர் போராட்டத்தை ஒடுக்குவதற்காக  போலீஸ் நடத்திய வெறியாட்டத்தில், மெரினாவை ஒட்டியுள்ள மாட்டாங்குப்பம், நடுக்குப்பம், அயோத்தியா குப்பம் ஆகிய மீனவர் பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளன. அங்கு, மிகப் பெரிய வன்முறை அரங்கேற்றப்பட்டதற்கான அத்தனை அடையாளங்களும் உள்ளன. வீதிகளில் பரவிக்கிடந்த கருங்கற்களும், கண்ணாடிச் சிதறல்களும் காஷ்மீரை நினைவுபடுத்துகின்றன. கண்ணில்பட்ட மனிதர்களையும், வாகனங்கள் உள்ளிட்ட உடைமைகளையும் கொலைவெறியோடு போலீஸார் அடித்து நொறுக்கியதாகக் கண்ணீருடன் சொல்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

 “ஜனநாயகரீதியில் நடந்த போராட்டம். அதுல நாங்களும் கலந்துகிட்டோம். அந்தப் போராட்டத்தை அரசு விரும்பலை. அதைச் சீர்குலைக்கிறதுக்காக போலீஸை ஏவிவிட்டாங்க. மாணவர்களையும் இளைஞர்களையும் காட்டுமிராண்டித் தனமா அடிச்சாங்க. ரத்தம் சொட்டச் சொட்ட நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், அயோத்தியாக்குப்பம் ஆகிய ஊர்களுக்குள் மாணவர்கள் ஓடிவந்தாங்க. அவங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தோம். ‘தாக்குதலை நிறுத்துங்கள்’ என்று போலீஸ் அதிகாரிகளிடம் போய்ச் சொன்னோம். அதுக்கு, ‘நீங்க உங்க ஊர் மக்களைக் கூட்டிட்டு வெளியேறுங்க. தீவிரவாதிகளை நாங்க பிடிச்சுக்கிறோம்’னு சொன்னாங்க. நாங்கள் ஏத்துக்கல. ஏன்னா,  யாரும் தீவிரவாதி இல்லே. அவங்க எல்லோரும் மாணவர்கள். எங்களை நம்பி வந்தாங்க.  எப்படி நாங்க அவங்களை விடமுடியும்?” என உணர்ச்சிவயப்பட்டார், தென்னிந்திய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபாலையன்.

போலீஸ் நடத்திய வன்முறைக்குப்பிறகு, பல வீடுகளில் அடுப்பு எரியவில்லை. ஓட்டல்களில் இருந்து இளைஞர்கள் வாங்கி வந்த உணவை வீதியில்  உட்கார்ந்து சாப்பிட்ட பெண்களிடம் பேசினோம்.

 “வழக்கம்போல, அன்னிக்குக் காலையில மீன் வாங்கி வந்து மார்க்கெட்ல வெச்சிருந்தோம். திடீர்னு போலீஸ்காரங்க ஊருக்குள் புகுந்தாங்க. ரோட்டுல நின்ன வண்டிங்க, ஆட்டோ, கார் எல்லாத்தையும் அடிச்சு நொறுக்குனாங்க. கதவுகளை உடைச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்சுப் பொண்ணுங்க, பசங்க என எல்லாரையும் அடிச்சாங்க. போலீஸ்காரங்க ஏதோ ஒரு பொடி வெச்சிருந்தாங்க. அதை ஆட்டோவுலயும் கார் மேலயும் தூவினாங்க. உடனே தீப்பிடிச்சு எரிஞ்சது. எங்க மீன் மார்க்கெட்டையும் கொளுத்திட்டாங்க. எங்க வாழ்வாதாரத்தையே நாசம் பண்ணிட்டாங்க. இதுக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆகணும்” என்று ஆத்திரத்துடன் பேசினார் தேசராணி.

 “ரத்தக்களறியா வர்ற புள்ளைங்களைப் பாத்துட்டு சும்மா இருக்கமுடியுமா? அவங்களுக்குத் தண்ணி கொடுத்தோம். பாதுகாப்பு கொடுத்தோம். அதுக்காக, ‘தீவிரவாதிங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, வன்முறையைத் தூண்டுறீங்களா?’ன்னு போலீஸ்காரங்க கேட்டாங்க. ஒரு சின்ன பையனை, நாலஞ்சு போலீஸ்காரங்க சுத்தி நின்னுக்கிட்டு மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சாங்க. ‘ஏங்க… ஒரு குழந்தையை இப்படி அடிக்கிறீங்களே’ன்னு கேட்டேன். உடனே, என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க” என்று வேதனையோடு சொன்ன இந்திரா, காயம்பட்ட இடங்களைக் காண்பித்தார். அவருக்குக் கை, கால், முதுகு என உடல் முழுவதுமே ரத்தம் கட்டிப்போய் இருந்தது.     

பல வீடுகளின் மாடிகளில்கூட பாட்டில்கள் சிதறிக்கிடந்தன.  பறக்கும் ரயில் பாலத்தின்மீது நின்றுகொண்டு பாட்டில்களை  போலீஸார் வீசியதாக மக்கள் சொன்னார்கள்.

“போலீஸ் வேன்ல மூட்டை மூட்டையாக கருங்கற்களையும், காலி பாட்டில்களையும் கட்டிட்டு வந்தாங்க. பொம்பளப் போலீஸ் கல்லை எடுத்துக்கொடுக்க, ஆம்பளப் போலீஸ் எங்க வீடுகள் மேல கல் எறிஞ்சாங்க. அதுல மண்டை உடைஞ்சவங்க நிறையப் பேரு. மொத்தத்துல எங்க ஊரையே சுடுகாடா ஆக்கிப்புட்டீங்களே...” என்று ஆவேசப்பட்டார், இந்திரா.

“ஊரையே சுடுகாடா ஆக்கிப்புட்டீங்களே!” - அடைக்கலம் தந்ததால் தாக்கப்பட்ட குப்பங்கள்

மெரினாவில் போலீஸ் தாக்குதல் தொடங்கியபிறகு, இளைஞர்களில் சில ஆயிரம் பேர், கடலுக்கு அருகே போய்விட்டார்கள். அவர்களுக்கு உணவும், பாதுகாப்பும் கொடுத்தவர்கள் இந்த மீனவ மக்கள்தான். “போலீஸால் தாக்கப்பட்டு இங்கே ஓடிவந்த மாணவர்கள், ‘சிலர் கடலுக்குப் போயிட்டாங்க’ன்னு சொன்னாங்க. நாங்க பதறிப்போய் ஓடினோம். போலீஸ்காரங்க எங்களை விடல. அதனால, கடல் வழியாகப் படகுல சாப்பாடு கொண்டுபோனோம். அந்த சாப்பாட்டை எல்லாம் போலீஸ்காரங்க வாங்கி பீச் மண்ணுல கொட்டிட்டாங்க. எல்லா அராஜகத்தையும் செஞ்சுட்டு,  ‘சமூக விரோதிகளுக்கும் குப்பத்து மக்களுக்கும் தொடர்பு இருக்கு’ன்னு மனசாட்சியே இல்லாமே போலீஸ் அதிகாரிகள் சொல்றாங்க. அவங்களுக்கு எங்களோட ஒரே ஒரு கேள்வி என்னன்னா... நீங்க செஞ்ச அத்தனை அராஜகங்களுக்கும் எங்ககிட்ட ஆதாரம் இருக்கு. நாங்க தப்பு செஞ்சிருந்தா அதுக்கான ஆதாரத்தை நீங்க காட்டுங்க. அப்படிக் காட்டிட்டா, இந்த ஏரியாவை விட்டே போறோம். இல்லைன்னா, கமிஷனர் உட்பட அத்தனை போலீஸும் வேலையை ராஜினாமா செய்வீங்களா?” என்று அந்த மக்கள் கேட்கிறார்கள்.

 மீனவர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த முழு விவரங்களையும் மீனவ மக்கள் திரட்டி வருகிறார்கள். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய மீனவர் மக்கள் முன்னணியின் தலைவர் கோசுமணி, “இங்கு நடந்தது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டும் இல்லை. மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. தமிழர் அடையாளத்தைப் பறிக்கிறது. அதை மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. இதற்காகத்தான் அந்தப் போராட்டம். போராடிய மாணவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால் எங்கள்மீது கொடூரத்தாக்குதல் நடத்தி, எங்கள் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளார்கள். இதை நாங்கள் சும்மாவிட மாட்டோம். குமரி முதல் ஆரம்பாக்கம் வரை ஒட்டுமொத்த மீனவர் சமுதாயம் ஓரணியில் திரள்வோம். பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

தங்களைப் போலீஸார் தாக்கியதைவிட, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதை மீனவப்பெண்களால் ஜீரணிக்க முடியவில்லை. மஞ்சுளா என்ற பெண், “அத்தனை பேரும் எங்களை வாய்க்கு வந்தபடி பச்சை பச்சையா திட்டினாங்க. அவங்க வீட்டு பெண்களை எங்க வீட்டு ஆம்பளைங்க இப்படிப் பேசினா சும்மா இருப்பாங்களா? பொம்பள போலீஸ் மனுஷிங்களாவே நடந்துக்கலை” என்று கொந்தளித்தார்.

“ஊரையே சுடுகாடா ஆக்கிப்புட்டீங்களே!” - அடைக்கலம் தந்ததால் தாக்கப்பட்ட குப்பங்கள்

நடு மண்டையில அடிங்க!

நடுக்குப்பம் பகுதியில் பால் வியாபாரம் செய்யும் ஒரு குடும்பத்தையே அடித்துத் துவைத்திருக்கிறது போலீஸ். இன்னமும் பயம் விலகாமல் அதை விவரிக்கிறார் கஜலட்சுமி. “வழக்கம்போல, அன்னிக்கு வியாபாரத்துக்குப் போயிட்டுவந்து, மதியம் கொஞ்சம் நேரம் கண் அயர்ந்தோம். திடீர்னு கதவை உடைச்சுக்கிட்டு இருபது போலீஸார் வீட்டுக்குள் நுழைஞ்சு, பிளாஸ்டிக் பைப்புகளால் அடிக்க ஆரம்பிச்சாங்க. எனக்கும், என் வீட்டுக்காரருக்கும், ரெண்டு மகன்களுக்கும், உறவினர் ராஜாவுக்கும் பயங்கர அடி. ‘பால் விக்கிற நாயி நீ... அதனாலதான் காளை மாட்டுக்கு ஆதரவா குரல் கொடுக்கிறியா’ன்னு சொல்லியே அடிச்சாங்க. ‘நடுமண்டையில் அடிங்கப்பா... அப்பத்தான் காயம் ஆற ஆறு மாசமாகும்’னு சொல்லிக்கிட்டே அடிச்சாங்க. எல்லோருக்கும் மண்டை உடைஞ்சது. எனக்கு 18 தையல், என் மகன் பிரபாகரனுக்குப் பதினஞ்சு தையல் போட்டிருக்கோம். அதைவிடக் கொடுமையா இருந்தது, அவர்கள் பேசிய கொச்சையான வார்த்தைகள்” என்றார் கஜலட்சுமி.

கலவரத்துக்கு யார் காரணம்?

“தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடக்க வேண்டும். குடியரசு தின விழா அமைதியாக நடந்து முடிய வேண்டும். மெரினாவில் திடீரென இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கலைக்க முடியாது. போராட்டக்காரர்களுடன் பேச சில தூதுவர்களை அனுப்புவோம்” என்று 22-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த, போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகள் அவசரக்கூட்டத்தில் முடிவானது. தூதர்களாக சிலர் போனாலும், போராட்டத்தை வாபஸ்பெற மாட்டோம் என மாணவர்கள் உறுதிகாட்டினர். ஆனாலும், ‘‘ஜல்லிக்கட்டுக் கோரிக்கையை மட்டும் முன்வைத்த இளைஞர்கள் கலைந்துவிட்டனர். மெரினாவில் இருந்து போகாமல் இருப்பது, ஊடுருவியுள்ள புது நபர்களே. அவர்கள் மாணவர்களை வசியம் செய்துவைத்து, கலவரத்தைத் தூண்டிவிடக் காத்திருக்கிறார்கள்” என்று உளவுத்துறை அதிகாரிகள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். இதுதான் போலீஸை பலப் பிரயோகம் செய்யவைத்து, அது எதிர்பாராதக் கலவரத்தில் முடியக் காரணமானது.

“ஊரையே சுடுகாடா ஆக்கிப்புட்டீங்களே!” - அடைக்கலம் தந்ததால் தாக்கப்பட்ட குப்பங்கள்

திருமணத்தை நிறுத்திய போலீஸ்! 

போலீஸ் அத்துமீறலால், ஓர் ஏழைப்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுவிட்டது. அந்தப் பெண்ணின் தந்தை ஜாகிர் உசேன், கலவரத்தில் கைது செய்யப்பட்டதே அதற்குக் காரணம். ஜாகிர் உசேனின் மனைவி ஷாஹிதாவைச் சந்தித்தோம். “என் பொண்ணுக்கு ஜனவரி 24-ம் தேதி ‘நிக்காஹ்’ செய்ய ஏற்பாடு செஞ்சிருந்தோம். அதுக்கு முதல் நாள், சிட்டி சென்டர் அருகேயுள்ள எங்க ஏரியாவுக்கு போலீஸ்காரங்க திடீர்னு வந்து, எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. இது தொடர்ந்தால், கல்யாணத்துக்கு எதையும் வாங்கி வைக்க முடியாதேன்னு பயந்தோம். அதனால் என் வீட்டுக்காரரு பொருட்கள் வாங்க வீட்ல இருந்து போனாரு. அப்போ போலீஸ்காரங்க, அவரை பேசவே விடாம அடிச்சி இழுத்துட்டுப் போயிட்டாங்க. என் தம்பி, போலீஸ்காரங்கக்கிட்ட போய், பொண்ணுக்குக் கல்யாணம்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. அவங்க எதையுமே காதுல வாங்கல. அடுத்த நாள் அவரை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில சேத்துருக்கிறதா போலீஸ் போன் செய்தாங்க. அங்கே போயி போலீஸ்காரங்ககிட்ட ‘எம்பொண்ணுக்கு இன்னிக்கு கல்யாணம், அப்பா கையெழுத்து போட்டாதான் கல்யாணம் நடக்கும். தயவுசெஞ்சு அவரை விட்டுடுங்க’ன்னு கெஞ்சினோம். ஆனா, எங்களை மிரட்டி அனுப்பிட்டாங்க. இப்போ எம்பொண்ணோட நிக்காஹ் நின்னு போச்சு...” என்று கண்ணீருடன் சொன்னார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.