News
Loading...

முதல்வரை எதிர்க்கிறியா? என்று கேட்டு அடித்தார்கள்!

“முதல்வரை எதிர்க்கிறியா? என்று கேட்டு அடித்தார்கள்!”

ல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்குவதற்கு கடந்த 23-ம் தேதி அலங்காநல்லூரில் காவல் துறை நடத்திய கொடூரத் தாக்குதலில் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களும், மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்பட்டார்கள். காயம் அடைந்தவர்களில் எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. கலைந்து சென்றவர்கள் திருப்பித் தாக்கியதில் காவலர்கள் சிலரும் அடிபட்டிருக்கிறார்கள்.

மாணவர்களோடு இணைந்து போராடிய சமூக ஆர்வலர்களையும் குறிவைத்துத் தாக்கியது போலீஸ். அலங்காநல்லூரில் போலீஸின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி உடலெங்கும் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், சமூகச் செயற்பாட்டாளர் முகிலனைச் சந்தித்தோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரைச் சுற்றி ஐந்து போலீஸாரை நிறுத்தி வைத்துள்ளனர். அவரைப் பார்க்க வருகிறவர்களை அவர்களோடு பேசுவதை அருகிலிருந்து வீடியோ பதிவு செய்கிறார்கள்.

‘‘கடந்த 16-ம் தேதி அலங்காநல்லூரில் தொடங்கிய மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது, தடியடி நடத்தி எங்களை காவலில் வைத்தார்கள். அதன் பின்பு விடுவிக்கப்பட்ட நான், திரும்பவும் அலங்காநல்லூர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தேன். இந்த நிலையில்தான் அவசரச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்கச் சொல்லி, அலங்காநல்லூர் மக்களை மிரட்டியது போலீஸ். மக்கள் கலைய மறுத்தார்கள்.

ஏற்கெனவே என்னைப் போன்ற போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தத் திட்டமிட்டது போலீஸ். மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளைக்கு எதிராகவும், மணற்கொள்ளைக்கு எதிராகவும், முதல்வர் ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியதால் பல வழக்குகளை என்மீது  பதிவுசெய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தேனியில் போராட்டம் செய்த என்னை, போலீஸ் கடுமையாகத் தாக்கி சிறையில் அடைத்தது. இதனால் என்மீது மிகுந்த ஆத்திரத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். 

23-ம் தேதி சீருடை இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அலங்காநல்லூரில் சுற்றி வந்ததைக் காண முடிந்தது. அப்போதே ஏதோ கலகத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதை உணர முடிந்தது.  நாங்கள் கலைந்து போகாததால், போலீஸ் எங்களை நெருங்கி வந்தது. எங்களை அவர்களிடமிருந்து பாதுகாக்க, அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண்கள் மனிதச் சங்கிலி போல கரங்களைக் கோர்த்து எங்களைச் சுற்றியும் நின்றனர். ஆனால், போலீஸ் ஈவு இரக்கம் இல்லாமல் பெண்களையும், சிறுவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் அடித்து துவம்சம் செய்தது. மிருகத்தனமான தாக்குதல்... ‘இனிமேல் போராட்டம் செய்வீர்களா’ என்று ஒவ்வொருவரையும் கேட்டுக் கேட்டு அடித்தார்கள். 

என்னைப் போல சிலர் தடியடியை வாங்கிக்கொண்டு அங்கேயே இருந்தோம். சிறிதுநேரத்தில் அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னாராஜ் தலைமையிலான போலீஸார், என்னை மக்கள் யாருமில்லாத இடத்துக்குத் தனியாகத் தூக்கிக்கொண்டு சென்றனர். சில போலீஸார் என்னைப் பிடித்துக்கொள்ள, ஆய்வாளர் அன்னாராஜ் குண்டாந்தடியால் தலையில் தாக்க முயன்றார். நான்  கைகளால் தடுத்துவிட்டேன். இரு கைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. நிறுத்தாமல் தொடர்ந்து கொலைவெறியோடு தாக்கினார்கள். ‘முதல்வர் ஓ.பி.எஸ்-ஸையே எதிர்க்கிறியா? பிச்சைக்காரப் பயலே! இனி நீ மதுரைப் பக்கமே வரக்கூடாது’ என்று அசிங்கமாகத் திட்டிக்கொண்டே அடித்தார் அன்னாராஜ். ஒரு கட்டத்தில் அடி தாங்காமல் மயங்கிவிட்டேன். அதன்பின் எங்கே வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. உடலெங்கும் வீங்கி கை, கால்களைத் தூக்க முடியாத நிலையில்தான் இங்கு அழைத்து வந்தார்கள். எனக்கு எந்தக் காயமும் இல்லையென்று சொல்லி வெளியே அனுப்ப வேலை நடக்கிறது. வெளியே போனதும், பொய் வழக்கில் மீண்டும் உள்ளே வைக்கலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், எங்களுடன் போராட்டக் களத்தில் இருந்த தோழர்கள் வினோத்ராஜ், உமர் என 30 பேரை கடுமையாகத் தாக்கி கைதுசெய்தார்கள். அதில் சில பெண்களும் அடக்கம். மண்டை உடைந்துள்ள ஒரு பெண் மட்டும் இங்கு சிகிச்சை பெறுகிறார். மற்றவர்களைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள்தான் விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

“முதல்வரை எதிர்க்கிறியா? என்று கேட்டு அடித்தார்கள்!”

‘‘மாணவர்கள் போராட்டத்தில் மற்றவர்களும் கலந்துகொண்டதால்தான் போராட்டம் திசை மாறிப்போனது என சிலர் குற்றம் சாட்டுகிறார்களே?” என்று நாம் கேட்டபோது, ‘‘ஆற்றுமணல் திருடப்படுவதை எதிர்த்தும், விவசாயப் பிரச்னைகளுக்காகவும், மீனவர்களுக்காகவும், கணிமவளக்கொள்ளைக்கு எதிராகவும் தனியாகவும் கூட்டாகவும் அறப்போராட்டங்கள் நடத்தி வருகிறேன். அதுபோல தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கான தடைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வது எப்படித் தவறாகும்? கிரானைட் கொள்ளை உட்பட மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என்றால், போலீஸ் யாருக்கு ஆதரவாக இருக்கிறது? குற்றம்சாட்டுபவர்கள் இதை உணர வேண்டும்’’ என்றார் முகிலன். 

இதேபோல மதுரைப் போராட்டத்தில், மது ஒழிப்புப் போராளி நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்து அவர்களை ஸ்டேஷனில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளது போலீஸ்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.