News
Loading...

அரசும் போலீஸும் பதில் சொல்லியே ஆக வேண்டும்!

அரசும் போலீஸும் பதில் சொல்லியே ஆக வேண்டும்!”

“அரசியல் கட்சியின் சார்பு இல்லாமல், ஓர் இளைஞனாக மெரினா போராட்டத்தில் பங்கேற்றேன். 23-ம் தேதி அதிகாலையில் வந்த போலீஸார் என்னைக் குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினார்கள்.  என்னோடு இருந்தவர்களை லத்தியால் அடித்து இழுத்துச் சென்றார்கள். போலீஸின் இந்த அராஜகம் குறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் செய்துள்ளேன்’’ என்று படபடப்புடன் பேசினார் தமிழ் மாநில காங்கிரஸின் மாநில இளைஞர் அணித் தலைவரான யுவராஜ்.

‘‘மெரினா போராட்டம் காந்திய வழியில் மிகவும் அமைதியாக நடந்தது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்ட போராட்டம் இது. இப்படி ஒரு போராட்டம் இந்தியாவே கண்டிராதது. இந்தியாவுக்கே... ஏன், உலகுக்கே அஹிம்சையைக் கற்றுக்கொடுத்துள்ள போராட்டமாக இது அமைந்துவிட்டது. இந்தப் போராட்டத்தின் நோக்கத்தில், இளைஞர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள். அதற்காக, அவர்களைப் பாராட்டுகிறேன். 

நான், ஏழு நாட்களும் போராட்டத்தில் பங்கெடுத்தேன். கட்டுப்பாடு நிறைந்து கொள்கையில் ஒன்றுபட்டு நடந்த போராட்டம் இது. ஆனால், ‘தேச நலனுக்கு எதிராக நடந்துகொண்டார்கள்’ என்று காவல்துறை கூறுகிறது. அப்படி நடந்து இருந்தால், முதல் நாளே கைது செய்து இருக்க வேண்டியதுதானே? அவர்களை ஏன் போராடவிடவேண்டும். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு அரசும் தமிழகக் காவல் துறையும் நிச்சயமாகப் பதில் சொல்லியே ஆகவேண்டும். மெரினாவில் மட்டுமல்ல, மதுரை, அலங்காநல்லூர், சேலம், ஈரோடு என்று எல்லா இடங்களிலும் காவல் துறை நடத்திய தாக்குதல்கள் குறித்தும்தான் கூறுகிறோம். இரண்டு மணி நேரம் காவல்துறை பொறுமையாக இருந்திருந்தால், அமைதியாகவே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றிருப்பார்கள். 

ஒட்டுமொத்த தமிழக மக்களின் மன வெளிப்பாடாகவே மெரினா போராட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் மரணம், தமிழக அரசின் செயல்படாத தன்மை... இப்படி எல்லா பிரச்னைகளையும் பூசி மெழுகி மறைப்பதற்காக முதலில் போராட்டத்தை ஆதரித்துவிட்டு, இறுதியில் வன்முறையை ஏவி விட்டுள்ளது தமிழக அரசு.

மெரினாவில், ஆறாம் நாள் இரவே போலீஸார் எங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க ஆரம்பித்தனர். ஏனெனில், எங்கள் போராட்டத்தில் பல போலீஸ் அதிகாரிகளின் உறவினர்களும் பெண்களும் இருந்தார்கள். அவர்களுக்கு உரிய முறையில் தகவல் வந்திருக்கும் போல... அதிகாலைக்கு முன்பாகவே அவர்கள் கிளம்பிப் போய்விட்டார்கள். மெரினா போராட்டத்துக்கு வந்தவர்களின் வாகனங்களை சர்வீஸ் ரோட்டில் நிறுத்த போலீஸ் அனுமதிக்கவில்லை. ராணி மேரிக் கல்லூரிக்குள்தான் நிறுத்த அனுமதித்தனர். நள்ளிரவு நெருங்கியதும் அந்தக் கல்லூரி கேட் பூட்டப்பட்டது. அப்போதுதான் தெரிந்தது, ‘போலீஸார் திட்டமிட்ட தாக்குதலுக்கு ரெடியாகிறார்கள்’ என்று. ஆனாலும் நாங்கள் உறுதியாக மணலில் இருந்தோம். கடைசியில் பெண்களையும் குழந்தைகளையும் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும், லத்தியால் அடித்தும் கலைத்தார்கள். இதற்குக் காரணம் தமிழக அரசுதான்.

இன்னமும் பலரின் வாகனங்கள் கல்லூரிக்குள்ளேயே கிடக்கின்றன. நிறைய பேர் எங்கு இருக்கிறார்கள் என்றுகூட தெரியவில்லை. போலீஸார் தாக்குதல் அவ்வளவு கண்மூடித்தனமாக இருந்தது.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பெண்கள் என்று எல்லாத் தரப்பினருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழக அரசு செய்து தரவேண்டும். தாக்குதலுக்குக் காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது - அது சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் என்றாலும் - அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒரு நல்ல விஷயம்... மாணவர்கள் எப்படி ஒன்றுபடவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்துவிட்டார்கள். ‘அரசியல் கட்சியினரே வேண்டாம்’ என்று நிராகரித்தவர்கள், எனக்கு மட்டும் வாய்ப்பளித்தனர். இந்த இளைஞர்களுக்கு மிகுந்த நன்றி. என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி இது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டது, மற்ற விஷயங்களுக்கும் போராடினால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. மாணவர்களோடு இன்னும் பல சமூகப் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார் யுவராஜ் உறுதியாக.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.