News
Loading...

இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட வேண்டும்: சசிகலா

இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட வேண்டும்: சசிகலா

மிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசு நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதால் இளைஞர்கள் போராட்டம் கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பீப்புள் பவர் (மக்கள் சக்தி) என்று 30 ஆண்டுகளுக்கு முன் உலகம் வியந்து கொண்டாடிய பிலிப்பைன்ஸ் மக்கள் புரட்சியைப் போலவும், அதைவிட சிறந்ததென போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரை, தமிழகத்தின் எண்ணற்ற இடங்களிலும், உலகின் பல்வேறு இடங்களிலும் தமிழர்கள் கொள்கை குன்றுகளாய் நிமிர்ந்து நிற்கும் காட்சியைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன்.

பண்பட்ட இனமான நம் தமிழ் இனம், தனது தொன்மையின் சிறப்பால், கல்வியின் மேன்மையால் எல்லோர்க்கும் வழிகாட்டும் தனித்தன்மை உடையது என்பதை ஜல்லிக்கட்டுக்கான அறப் போராட்டத்தின் மூலம் உலகம் உணரச் செய்துள்ளது. தமிழ் இனத்தின் அடையாளங்களை, உரிமைகளை மீட்டெடுக்கவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிகளால் கடந்த ஆண்டு ஜனவரில் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நடத்திட உதவும் எண்ணத்தில் அறிவிக்கை வெளியிட்டு, ஜல்லிக்கட்டு நடைபெறப்போகிறது என்ற ஆர்வத்திற்கு அடிகோலியது. ஆனால், பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு 2014-ம் ஆண்டு விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை தொடரச் செய்துவிட்டன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழி வந்த நான், நம் உரிமைகளையும், உணர்வுகளையும் இரு கண்களாகப் போற்றுகிறேன். அதிமுக எம்பிக்கள் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து, தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடைபெற அனுதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வலியுறுத்தச் செய்தேன்.

இத்தனை முயற்சிகளை முறைப்படி செய்ததோடு, அதிமுக அரசை இதற்கென தொடர்ந்து போராடச் செய்தேன். முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்தித்து இது குறித்து பேசியதோடு, என்னென்ன சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வலியுறுத்தினேன்.

உலகமே வியந்து போற்றும் வகையில் கண்ணியத்துடன் இளைஞர்கள், இளம் பெண்களும், மாணவர்களும், தமிழ்ச் சமுதாயத்தின் ஒவ்வொரும் மேற்கொண்ட முயற்சிகளும் நாம், விரும்பிய ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நமக்கு மீட்டுத் தந்திருக்கின்றன. தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் கண்ணியமான வகையில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்றிருப்பது, இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநிலங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் தமிழகம் திகழ்கிறது.

தமிழக அரசு சட்ட அங்கீகாரத்துடன் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்துகிறது. நமது கலாச்சார உரிமையான ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள், இளைஞர்கள் கல்வி கற்பது மற்றும் தங்களின் அன்றாடப் பணிகளை ஆற்றுவது உள்ளிட்ட பொறுப்புகளை உணர்ந்து இந்தப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்'' என்று சசிகலா கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.