News
Loading...

தேசத் துரோகிகள் யார்?

தேசத் துரோகிகள் யார்?

ண்பதுகளின் இறுதி. தற்போதைய கோவை காவல்துறை ஆணையர் அமல்ராஜின் தந்தை அம்புரோஸ் அப்போது ஒரு கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் கல்லூரியில் நடந்த தேர்தலில் ஒரு மிகப் பெரிய வன்முறை வெடிக்கிறது. அதில், அவரும் சிக்கிக் கொள்கிறார். உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்த இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்... அவரை மீட்டு, பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறார்கள். இந்த வரலாறு அமல்ராஜுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இன்று அந்த அமைப்பைத்தான் அமல்ராஜ், ‘‘தேச விரோதச் செயலில் ஈடுபடும் அமைப்பு’’ என்கிறார்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

‘சமூக விரோதிகள், தேச விரோதச் செயலில் ஈடுபடுபவர்கள்...’ இந்தச் சொல்லாடல்கள் மெரினா மாணவர் எழுச்சிக்குப்பின் அதிகமாகச் சில அரசியல் தலைவர்களாலும், போராட்டத்தில் கலந்துகொண்ட சிலராலும், காவல் துறையினராலும் திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இவர்கள் யாரை, ‘தேசத்துரோகிகள்’ என்கிறார்கள்; எதனை தேச விரோதச் செயல் என்கிறார்கள்? மெரினாவில் கடைசிப் போராட்டக்காரர்களாக கடலருகே கறுப்புக்கொடியுடன் நின்றிருந்தவர்கள், ‘கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டுக்குச் சொந்தமாக்க வேண்டும்’ என்றார்கள். இவர்கள் தேச விரோதச் செயலில் ஈடுபடுகிறவர்கள் என்றால், இதே விஷயத்தைச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றிய ஜெயலலிதாவும், ஆதரித்த கருணாநிதியும் தேச விரோதிகளா?

போராட்டத்தின் முதல் நாளில் மட்டும்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சில தட்டையான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அது, அடுத்த தினமே ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் இருக்கும் அரசியல், தடைக்குத் துணைநிற்கும் பெரு நிறுவனங்கள், அவர்களுக்கு உதவிசெய்யும் அரசியல் கட்சிகள் என அடுத்தப் பரிமாணங்களை அடைந்தது. போராட்டம் தொடங்கிய அடுத்த தினங்களில்... குறிப்பாக, ஜனவரி 18-ம் தேதி, அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களில் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி... காவிரி, மீத்தேன், பன்னாட்டுக் குளிர்பானங்கள் குறித்த கோஷங்கள் கேட்டன. ‘தமிழர்களை, மத்திய அரசுத் தொடர்ந்து வஞ்சிக்கிறது... அதற்கு மாநில அரசு துணை நிற்கிறது’ என்ற கோஷங்கள் கேட்டன. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், ‘ஜல்லிக்கட்டு’ ஒரு குறியீடு மட்டும்தான். அந்தக் குறியீட்டுக்குள் பல அடுக்குகளில் தமிழர் உரிமைப் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தக் கோஷங்கள் எதுவுமே பக்கத்தில் இருப்பவருக்குக்கூட கேட்காதபடி வாய்க்குள் முணுமுணுக்கப்பட்டவை அல்ல. யாரும் மெரினாவின் மணலுக்குள் ஒளிந்துகொண்டு எழுப்பவில்லை. அவை அனைத்தும், போராட்டத்தின் கடைசி இரண்டு தினங்களில் எழுந்தவையும் அல்ல. காவல் துறையினர் சூழ்ந்து இருக்க, அவர்கள் முன்னிலையில், தொடக்கத்திலிருந்தே எழுப்பப்பட்டவை. அப்போதெல்லாம் காவல் துறைக்கு, அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சிலருக்கு, அரசியல் பிரமுகர்களுக்கு, இவை தேசத்துரோகக் கோஷங்களாகக் கேட்கவில்லை... ஒரு வாரம் கழித்துத்தான் கேட்கிறது என்றால், உண்மையில் பிரச்னை யாரிடம் இருக்கிறது? 

சமூக ஊடகங்கள் வந்தபின், போராட்ட வடிவங்கள் மாறிவிட்டன. ‘உலக வல்லரசு’ என தன்னைச் சித்தரித்துக்கொள்ளும் அமெரிக்காவில், நியூயார்க் நகரின் மைய சதுக்கத்தில், கைகளில் பதாகைகளை ஏந்தியபடி நின்றுகொண்டு, அமெரிக்க அதிபருக்கு எதிராகக் கோஷம் போட முடியும்... ஆட்சியாளர்களுக்கு அசெளகர்யமான கேள்விகளை எழுப்ப முடியும். இதை, அந்த அரசு அனுமதிக்கிறது. இணையத்தில் இதைப் படித்து... அதனை உள்வாங்கிக்கொண்ட ஒரு புதிய தலைமுறை... அப்படியான ஒரு போராட்டத்தை மெரினாவில் நிகழ்த்திக் காட்டியது. இத்தனை நாள் ஆட்சியாளர்கள்மீது இருந்த வெறுப்பும் கோபமும் கேலிச் சித்திரங்களாகவும், கோஷங்களாகவும் வெளிப்பட்டன.

தேசத் துரோகிகள் யார்?

இதைச் செய்தவர்கள் யாரும் அண்டை நாட்டிலிருந்து புகுந்த தீவிரவாதிகள் அல்ல... அதில், மாணவர்கள் இருந்தார்கள்; சாமான்ய மனிதர்கள் இருந்தார்கள்; ஏன், பெரும் பணக்காரர்களும் இருந்தார்கள். இவர்கள் அனைவரையும்தான் ‘தேசத்துரோகிகள்’ என்கிறது அரசாங்கம். கூடியிருந்த இரண்டு லட்சம் பேரில் 90 சதவிகித மக்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கோஷம் போடுவார்களாயின், பிரச்னை மக்களிடம் அல்ல; ஆட்சியாளர்களிடம் இருக்கிறது என்றுதான் பொருள்.

பிரபலக் குளிர்பான நிறுவனங்களுக்கு எதிராக எழுப்பப்படும் கோஷங்கள், அரசுக்கு அசெளகர்யமாக இருக்கிறது என்றால்... இதனை யாருடைய அரசு என்று புரிந்துகொள்வது? 

‘‘இல்லை. எல்லோரும் அதுபோல கோஷமிடவில்லை. சில அமைப்பினர்தான் கோஷமிட்டார்கள். அவர்கள்தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசினார்கள். நாங்கள் அவர்களைத்தான் சொல்கிறோம்’’ என்பது அரசின் வாதமாக இருந்தால்... அந்தக் கட்சிகளை,  இயக்கங்களை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு தடை செய்ய வேண்டியதுதானே... அதைவிடுத்து ‘தேசத் துரோகிகள்’ என அனைவரையும் பொதுமைப்படுத்திப் பேசுவது எத்தகைய அறம்?
கோவை காவல் ஆணையர் அமல்ராஜ் ஒருபடி மேலே சென்று... ‘‘இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் எனச் சில அமைப்புகள்... மாணவர்களுடன் ஊடுருவி, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்’’ என்கிறார். இவை அனைத்தும் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் களத்தில் நின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதிலிருந்து பிரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவுகள். இவர் பட்டியலிடும் அமைப்புகள்தான், காவல் துறை அடக்குமுறைகளை மீறிப் போராடி சமச்சீர் கல்வியைக் கொண்டுவந்தன. டெல்டாவில் விவசாயிகளுக்காகப் போராடியும் இருக்கின்றன. இவற்றைத்தான், தேசத்துரோகச் செயல்கள் என்கிறாரா, அமல்ராஜ்?

தேசத் துரோகிகள் யார்?

உண்மையில் தேசத்துரோகச் செயல் எது?

‘போராடிய மாணவர்களுக்குத் துணை நின்றார்கள்; அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கினார்கள்’ என்னும் ஒரே காரணத்துக்காக மீனவர்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து மீனவர்களைத் தாக்குவது, அவர்களின் உடைமைகளைச் சேதப்படுத்துவது, போராட்டக் களத்தில் நின்ற வாகனங்களை எரிப்பது, வீட்டுக்குள் புகுந்து பெண்களைத் தாக்குவதெல்லாம் தேசப் பாதுகாப்புக்கான செயல்களா? தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்களைப் பார்க்கும்போது சந்தேகமாக இருக்கிறது... ஒருவேளை, காவல் துறையினர் மத்தியில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்களோ என்று.

‘கலவரத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், திட்டமிட்டு மீனவர்களின் கடைகளை எரிப்பது, வீட்டுக்கொருவரைக் கைதுசெய்வது... இதையெல்லாம் எப்படி நியாயப்படுத்தப் போகிறது காவல் துறை?

மாற்றுக்கருத்துக்கு மதிப்பளிப்பது; அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களுக்கு இடம் தருவது; அதற்கு, காதுகொடுத்துக் கேட்பது... இதெல்லாம்தான் ஜனநாயகத்துக்கான அழகு. ‘இல்லை... நாங்கள் எதற்கும் மதிப்பளிக்க மாட்டோம். அரசுக்கு, அரசியல்வாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் மீதெல்லாம், தேசத்துரோக முத்திரை குத்துவோம்... அவர்களைத் தாக்கவும் செய்வோம்’ என்ற ஒற்றைக்கருத்தில் செயல்படுமென்றால், அது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்குச் சமம்!

அதைத்தான் விரும்புகிறதா, காவலர்களை ஏவிவிடும் அரசாங்கம்?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.