News
Loading...

வா தோழி போராடலாம்!

வா தோழி போராடலாம்!

மெரினா புரட்சி ஜல்லிக்கட்டுக்கானது மட்டுமல்ல, பெண்களுக்கானதும்தான்! அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்விகேட்டு விமர்சனம் செய்யவும், தங்களது கோரிக்கைக்காகத் தெருவில் இறங்கிப் போராடவும் கற்றுத்தந்திருக்கிறது இந்தப் போராட்டம். அணி அணியாய் திரண்ட பெண்கள் கூட்டம்தான் உலகஅரங்கில் போராட்டத்தின் மகத்துவத்தை உயர்த்திக்காட்டியது. 

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி மெரினாவில் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, போராட்டம் குறித்த நிகழ்வுகளை உடனுக்குடன் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்-களில் வீடியோக்களாகப் பதிவேற்றி உலகறியச் செய்ததில், பெண்களின் பங்கு முக்கியமானது. போராட்டக்கள நிலவரம் குறித்தும் தங்களது கொள்கைகள் குறித்தும் வீடியோக்களைப் பரப்பிய இந்தப் புதுமைப்பெண்களின் பதிவுகளைப் பின்தொடர்ந்தவர்கள் ஏராளம். தங்கள் மனதில் தோன்றியக் கருத்துகளைத் துணிச்சலாகப் பதிவுசெய்த பலரில் நடிகை சோனியா போஸும் ஒருவர். அவரிடம் பேசினோம்.

‘‘தமிழும் தமிழ்க் கலாசாரமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், முடிந்தவரை போராட்டத்தில்  என்னுடைய பங்கு இருக்க வேண்டும் என ஆறு நாட்களும் போராட்டத்தில் கலந்துகொண்டேன். கடைசிநாள் போலீஸ் எல்லோரையும் கலைந்து போகச் சொன்னார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு சட்டத்தை உறுதிசெய்யாமல் கலைய மாட்டோம் என்று மக்கள் உறுதியாக இருந்தார்கள். பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்த போலீஸார், திடீரென லத்தி சார்ஜ் பண்ண ஆரம்பித்தார்கள். பெண்களையும் விட்டுவைக்கவில்லை. அவர்களிடம் இருந்து தப்பித்து விவேகானந்தர் இல்லம் வந்து, அங்கே அடிபட்டவர்களுக்கு முதல் உதவி செய்துகொண்டு இருந்தோம். அங்கேயும் போலீஸ் வந்து எல்லோரையும் ரிமாண்ட் செய்யப்போவதாக மிரட்டினார்கள். நான் கொஞ்சம் தெரிந்த முகம் என்பதால், என்னை விட்டுவிட்டார்கள். ஆனால், அப்பாவி மக்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டார்கள். என்னால், அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. வேறு வழியில்லாமல் லைவ் வீடியோ கொடுத்தேன். அதைப் பார்த்து மற்றவர்கள் உதவுவார்கள் என்று நினைத்து செய்தேன். அதற்கு நிறைய மிரட்டல்கள் வந்தன. நமக்குத் தேவையானதை நாம்தான் போராடி வாங்க வேண்டும். அதற்குப் பயம் இல்லாமல் இருப்பது அவசியம்” என்றார் உறுதியான வார்த்தைகளில்.

வா தோழி போராடலாம்!

சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவேற்றிவிட்டால் அதைப் பகிரவும், விமர்சிக்கவும் ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும். அதுவும் சம்பந்தப்பட்டவர் ஒரு பெண்ணாக இருக்கும்போது விமர்சனங்கள் கொச்சையாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில், பிரச்னைகளைச் சமாளிக்கவும், எல்லை மீறி விமர்சிப்பவர்களை சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பதையும் வழக்கறிஞர் அஜிதாவிடம் கேள்விகளாக முன்வைத்தோம். “சமூக வலைதளங்களில் பதிவிடும் பெண்களுக்குப் பிரச்னைகள் வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. கருத்துகளைச் சொல்லும் நபர் யார்... அவர் யாரை விமர்சிக்கிறார் என்பதைப் பொறுத்து அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் வேறுபடும். யாரும் அவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், அவற்றை இரண்டு வழிகளில் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, ஒருவர் சொல்லும் கருத்துகளுக்கு நிச்சயமாக எதிர்கருத்துகள் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளத்தில், சமூகப் பிரச்னைகளைப் பற்றி ஒரு பெண் பேசுவாள் என்றால், அவளைப் பற்றி தவறான சில கருத்துகளும், சொல்லத்தகாத வார்த்தை களையும் பயன்படுத்துவர். அதை அந்தப் பெண் எதிர்கொள்ளும் மன தைரியம் மிக்கவராக இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஒரு பெண்ணைத் தொடர்ச்சியாக வேலை செய்யவிடாமல்  தொல்லை  கொடுத்துக்கொண்டே இருந்தால், கணினி குற்றச் சட்டப்படி, அந்த நபர் மீது வழக்கு தொடுக்க முடியும். மேலும், சமூக வலைதளங்களில் இதுபோன்ற பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைப் பெண்கள் அறிந்து செயல்பட்டாலே போதும். விமர்சனங்களை உதாசீனப்படுத்தி எளிதாகக் கடந்துவிடலாம்” என்றார் அவர்.

வா தோழி போராடலாம்!

பெண்கள், வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடாமல் வெளிவரத் தொடங்கியுள்ளனர். வேலைக்குச் சென்று சம்பாதிப்பதில் மட்டுமே பெண்களுக்கான சமத்துவம் கிடைத்துவிடாது. இதுபோன்ற மக்கள் போராட்டங்களிலும் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வது முக்கியம். போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், முதலில் எந்தப் பிரச்னையையும் கண்டு துவண்டுப் போகாமல், தைரியமாக தங்கள் கருத்து உரிமையை நேர்மையுடன் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்.

அத்தகையப் பெண்களே வளரும் தலைமுறைக்கு ரோல்மாடல்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம், பெண்களை அடையாளம் மட்டும் காட்டவில்லை. அவர்களது உரிமைகளை அவர்களே கேட்டுப் பெற்றிருக்கிறார்கள் என்ற வெற்றிச் செய்தியையும் சேர்த்தே உணர்த்தியிருக்கிறது. 

வா தோழி போராடலாம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.