News
Loading...

இளைஞர்கள் எழுச்சி... மிரளும் கட்சிகள்!

இளைஞர்கள் எழுச்சி... மிரளும் கட்சிகள்!

ங்கள் அரசுகளிடம் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று எங்களிடம் இருக்கிறது. ஒற்றைக் குரலாக அதைச் சொல்கிறோம். உங்கள் காதுகளில் விழுகிறதா?’ - மெரினாவிலும், தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும் போராடும் இளைஞர்கள் சொல்வது இவற்றைத்தான்!  

‘பொறுப்பற்றவர்கள்’ என அவர்களை நாம் விமர்சனம் செய்திருக்கிறோம். ‘‘எதிரில் ரயிலோ, பஸ்ஸோ வருவதைக்கூட அறியாமல்... எந்த நேரமும் செல்போன் திரையைப் பார்த்தபடி சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்கிறார்கள்’’ எனக் கொதிப்போடு திட்டியிருக்கிறோம். ஆனால், அந்த சமூக வலைதளங்களைப் பொறுப்போடு பயன்படுத்தி எப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என உலகத்துக்கே அவர்கள் காட்டியிருக் கிறார்கள். இவர்களின் ஒற்றை அழைப்பில் ஈர்க்கப்பட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள், வீதிக்கு வந்து போராடினார்கள். ‘தமிழர்கள்’ என்ற இனத்தை உலகமே பிரமிப்போடு பார்க்கிறது.

‘சுயநலவாதிகள்’ என அவர்களை நாம் ஒதுக்கித் தள்ளியிருக்கிறோம். சிக்னலில்கூடக் காத்திருக்காமல் விரையும், கூச்சல் போட்டு அடுத்தவர்களை அச்சுறுத்தியபடி வேகம் எடுக்கும் கூட்டமாக வீதிகளில் அவர்களைப் பார்த்திருக்கிறோம். இன்று அவர்கள், தங்களுக்கு நேரடித் தொடர்பில்லாத ஒரு விஷயத்துக்காகத் தன்னலமற்று இணைந்து போராடுகிறார்கள். ‘யாருக்கும் தொந்தரவு தராமல் ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அரசாங்கத்தைப் பணிய வைப்பது எப்படி’ என எல்லோருக்கும் பாடம் நடத்தியிருக்கிறார்கள். 

நான்கு இளைஞர்கள் தெருமுனையில் நின்று அரட்டை அடித்தாலே, அந்தப் பக்கமாகச் செல்வதற்கு பெண்கள் தயங்குவார்கள். ஆனால் மெரினாவிலும் தமிழகத்தின் பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் பல்லாயிரம் இளைஞர்களோடு இளம்பெண்கள் இரவு நேரங்களிலும் சரிசமமாக இருந்து போராடுகிறார்கள். ‘நிர்பயாக்களை சிதைத்த டெல்லி சமூகம், தமிழக இளைஞர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என வட இந்தியச் சகோதரி ஒருவர் ட்விட்டரில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

பிள்ளைகளின் அழைப்பை ஏற்று அம்மாக்களும் பாட்டிமார்களும் போராட்டத்துக்குப் போகும் விசித்திரத்தையும்... மகள்களைப் போராட்டத்துக்கு அனுப்பிவிட்டு, மதியம் சாப்பாடும் கொண்டு போகும் அப்பாக்களையும் தமிழகம் முதன்முறையாகப் பார்க்கிறது. 

அகிம்சை என்ற மாபெரும் ஆயுதத்தின் சக்தியைத் தாங்க முடியாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில்தான் தங்கள் சீருடைகளைத் துறந்துவிட்டு போராட்டத்தில் இணைந்தனர் பல போலீஸ்காரர்கள். அதன்பிறகு இப்போதுதான் ஒரு போராட்டத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, போலீஸ்காரர்களும் ஆதரித்து மைக் பிடிப்பதைப் பார்க்க முடிகிறது.  

தலைவன் என யாரும் இல்லை; பல அமைப்புகளின் கூட்டணி என்பது போன்ற அடையாளமும் இல்லை. இங்கே எல்லோருமே தலைவர்கள்; எல்லோருமே தொண்டர்கள். இந்தப் போராட்டத்தின் தனித்துவ அழகே இதுதான்! தனிப்பட்ட அடையாளங்களை கவனமாகத் தவிர்க்கிறார்கள். கட்சிக் கொடிகளையோ, நடிகர்களின் படங்களையோ எடுத்துக்கொண்டு யாரும் உள்ளே வர முடியாது. ‘தமிழன்டா’ என்பது போன்ற அடையாளங்கள் மட்டுமே போதுமானது.

ஒரு கட்சியின் தொண்டர்கள் என்றால், ஒரு நடிகரின் ரசிகர்கள் என்றால், அவர்களை ஒரே மாதிரியான கருத்துகளும் உணர்வுகளும் கொண்ட கும்பலாக முடிவு செய்துவிடலாம். ஆனால் இவர்களை நீங்கள் எப்படியும் தீர்மானித்துவிட முடியாது. கிராமம் - நகரம், ஐ.டி வேலை - அடித்தட்டு வேலை, இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட் - ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர் என்ற வித்தியாசங்களைக் கடந்து, எவரும் எவர் அருகிலும் அமர்ந்து இணைந்துவிடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். நாளைக்கே ‘ரூட்டு தல யார்?’ என இவர்களே ஏதோ ஒரு மாநகரப் பேருந்தில் அடித்துக்கொள்ளக்கூடும். ஆனால் ‘ஒரு பொது விஷயத்துக்காக நாம் இணைந்திருக்கிறோம்’ என்ற உணர்வு இவர்களுக்குள் பரவிக் கிடக்கிறது.  

இந்தப் போராட்டங்களில் இவர்கள் முன்னிலைப்படுத்தும் உணர்வுகள் முக்கியமானவை. போராட்டக் களங்களில் சிலம்பம் ஆடுகிறார்கள், பறை இசை இசைக்கிறார்கள், தமிழர்களின் பண்பாட்டு மரபு பற்றிப் பேசுகிறார்கள். இப்படித் தமிழர்களின் பெருமிதங்களே வெளிப்படுகின்றன. எவ்வளவு தாகம் இருந்தாலும், பன்னாட்டுக் குளிர்பானங்களைத் தவிர்த்துவிடுகிறார்கள். ‘நம் நீர்வளத்தை இந்த நிறுவனங்கள் சுரண்டுகின்றன’ என்ற கோபம் அவர்களுக்கு இருக்கிறது. 
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியாது. ‘பொங்கல் கொண்டாட ஒவ்வொரு வருஷமும் ஊருக்குப் போவார்களா’ என்ற கேள்விக்கும் பதில் கிடையாது. வேட்டி கட்டுகிறார்களா என்றால், இல்லை! கறுப்புச்சட்டையும் ஜீன்ஸ் பேன்ட்டுமே போராடும் பல இளைஞர்களின் உடையாக இருக்கிறது. ‘என்னுடைய பண்பாட்டை நான் மதிக்கிறேனா, என்னுடைய அடையாளத்தை நான் முழுமையாகப் பின்பற்றுகிறேனா என்பது எனது பிரச்னை. ஆனால், அவற்றையெல்லாம் யாரோ வந்து தட்டிப் பறிக்க எப்படி அனுமதிக்கலாம்’ என்ற உரிமைப் பிரச்னை இது.   

‘இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமானதா’ என்றால், இல்லை! ‘வாடிவாசல் என்பது தொடக்கம். ஆரோக்கியமான அரசியல் என்பது பயணம்’ எனப் போராட்டக் களத்தில் இளைஞர்கள் பிடித்திருந்த அட்டைகளில் எழுதியிருக்கும் வாசகங்களைக் கவனிக்க வேண்டும். ‘நாங்கள் தாமிரபரணிக்காகவும் போராடுவோம்’ என்ற அவர்களின் முழக்கங்களைக் கேட்க வேண்டும். ‘பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும்போது மாரியப்பன் இந்தியன், இலங்கைக் கடற்படையால் சுடப்படும்போது மீனவன் தமிழனா?’ என்ற ஆதங்கத்தை உணர வேண்டும்.

இளைஞர்கள் எழுச்சி... மிரளும் கட்சிகள்!

இது ஒற்றைப்புள்ளியில் திடீரெனத் தொடங்கிய போராட்டம் அல்ல. ‘பேப்பர்கூட படிக்க மாட்டேங்கறாங்க. பொது விஷயங்கள் எதுவுமே தெரியறதில்லை’ என நம்மில் பலராலும் கண்டிக்கப்படும் இதே இளைஞர்கள், எல்லாவற்றையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியா ஒரு மாபெரும் பேரரசாக இணைக்கப்பட்ட மௌரியர் காலம் தொடங்கி மொகலாயப் பேரரசு காலம் வரை, அந்த தேசிய நீரோட்டத்தில் இணையாமல் தனித்துவம் காத்த பெருமை கொண்டது தமிழ் மண். 

இந்த மண்ணுக்குத் தொடர்ச்சியாக இழைக்கப்படும் அநீதிகள் அவர்களைக் கொதிக்கச் செய்திருக்கின்றன. ஆபத்தான கூடங்குளம் இங்கே வருகிறது; வேலைவாய்ப்பு தரும் வேறு தொழிற்சாலைகள் வட இந்தியாவுக்குப் போகின்றன. காவிரி, முல்லைப்பெரியாறு என நதிநீர்ப் பிரச்னைகளில் தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் வெளிப்படையாக மத்திய அரசு கர்நாடகாவின் பக்கம் சாய்கிறது. விவசாய நிலங்களைப் பாலைவனமாக்கி, காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்க அனுமதி கொடுக்கிறார்கள். வறட்சியில் இங்கே விவசாயிகள் பரிதவிக்கும்போது, ‘நீங்கள் கேட்டால்தானே நிவாரணம் கொடுக்க முடியும்?’ என்ற ஏளனக் குரலாக மத்திய அரசின் குரல் ஒலிக்கிறது. வர்தா புயல் தாக்கி 10 நாட்கள் கழித்து நிதானமாக வருகிறது மத்தியக் குழு. ஆனால் நிவாரணம் வரவில்லை. தமிழக எம்.பி-க்களை மூன்று முறை சந்திக்காமல் தவிர்க்கிறார் பிரதமர். மத்திய அரசின் விடுமுறைகள் பட்டியலில் பொங்கல் இடம் பெறாமல் சர்ச்சை எழுகிறது. இத்தனைக்கும் மேலாக ஜல்லிக்கட்டு ஏமாற்றம் சேர்ந்து அழுத்த, போராட்டக் களத்தின் வாடிவாசல் வெடித்துத் திறந்துவிட்டது. 

அரசியல் மீதல்ல, அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் நம் இளைஞர்கள். வெறுப்பு அரசியலும், வெற்று வாக்குறுதிகளும், ஊழல் புரையோடிய நிர்வாகமும், மலிவான தந்திரங்களுமே அரசியல் என்ற பெயரில் இங்கு நிகழும்போது... தங்களின் ஜீவாதாரப் பிரச்னைகளுக்காகக்கூட இந்த அரசியல்வாதிகள் இணைந்து ஒற்றைக் குரல் எழுப்பாதபோது... அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறார்கள் இந்த இளைஞர்கள். இதில் தமிழினத்தின் பிரதிநிதிகள் எனத் தங்களை அடையாளப்படுத்தும் தலைவர்களும் இயக்கங்களும்கூட விதிவிலக்கு இல்லை. வெறும் பேச்சு அவர்களுக்குத் தேவையில்லை. அது என்ன விளைவுகளைத் தந்திருக்கிறது என்றே பார்க்கிறார்கள். அதனால்தான் காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற தேசியக் கட்சிகளை வைக்கும் அதே தூரத்தில் வைகோவையும் சீமானையும் வைத்துப் பார்க்கிறார்கள். ‘எல்லோரது அரசியலும் ஒரே அரசியல்தான்’ என அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 

‘இப்போது திரண்ட இந்த இளைஞர்கள், தங்கள் கல்வி நிறுவனங்களில் நடக்கும் கல்விக்கொள்ளையை எதிர்த்து என்ன செய்தார்கள்?’ என்பதில் ஆரம்பித்து பலரும் பலவிதமான கேள்விகளைக் கேட்கிறார்கள். ‘நாங்கள் படிப்பைப் பார்த்துக்கொள்கிறோம், இப்படிப்பட்ட பிரச்னைகளை எல்லாம் எங்கள் தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என அவர்கள் காத்திருந்தார்கள். அது நடக்காததாலேயே வீதிக்கு வந்தார்கள்.

இளைஞர்கள் எழுச்சி... மிரளும் கட்சிகள்!

கடந்த 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு மாணவர்களை அரசியலில் இருந்து அகற்ற திட்டமிட்ட முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அரசியல்ரீதியாக மாணவர்கள் அணி திரண்டால் எழும் விளைவுகளை, மாணவர்களின் போராட்டங்களால் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள். படிப்படியாக கல்லூரித் தேர்தல்கள் நிறுத்தப்பட்டன. இன்ஜினீயரிங் சுயநிதிக் கல்லூரிகளில் சுத்தமாக இதுபோன்ற ஜனநாயக நடைமுறைகள் எதுவுமே இல்லாமல் போயின. ஒரு தலைமுறை மாணவர்களே, அரசியல் வாசனை அறியாமல் கல்லூரிகளில் இருந்து வெளியில் வந்தார்கள். ஆனால்., அவர்கள்தான் இப்போது தெளிவான அரசியல் பார்வையோடு வீதிகளில் போராடுகிறார்கள். 

‘இவர்கள் அடுத்து காவிரி உரிமைக்காகவும், மணல் கொள்ளையை எதிர்த்தும், தமிழக நீராதாரங்களைக் காப்பாற்றவும் இதேபோலப் போராடுவார்களா? அவையும் தமிழகத்தின் ஆதாரப் பிரச்னைகள்தானே?’ என்ற கேள்வியும் எழுகிறது. அவற்றுக்காகவும் இவர்கள் குரல் எழுப்பினால் நல்லதுதான். ஆனால், உண்மையில் அவையெல்லாம் இவர்கள் செய்ய வேண்டிய வேலைகளா? ‘அரசியல் கட்சிகளே! நீங்கள் செய்யத் தவறியதை நாங்கள் செய்திருக்கிறோம். உங்கள் தவறுகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் திருந்துங்கள்’ என்ற அடையாள எச்சரிக்கைக் குரலே இந்தப் போராட்டம். தலைவன் இல்லாத இந்த இளைஞர் எழுச்சி, மிரண்டு போயிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவது இதைத்தான்! 

இந்த உணர்வுகளை மதிக்காமல் போனால், இழப்பு நமக்கு இல்லை. ‘குடியரசு தினத்தில் தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் ஏற்றுவோம்’ எனக் கொந்தளித்த இளைஞர்களும், கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி வந்த சிறுவர் - சிறுமிகளும் ஒன்றாகவே போராடினார்கள். அந்தச் சிறுவர்கள் வளர்ந்தபிறகும் தேசியக் கொடியை நம்பிக்கையோடு பற்றியிருப்பதை உறுதி செய்வது நம் கட்சிகளின் பொறுப்பு.  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.