News
Loading...

தலைவனைத் தேடும் இளைஞர்கள்! - இது சோஷியல் மீடியா புரட்சி

தலைவனைத் தேடும் இளைஞர்கள்! - இது சோஷியல் மீடியா புரட்சி

‘ஒரு ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கொண்டாடலாம்’ என மாநகரத்து இளைஞர்களைக் கேட்டால், நூற்றுக்கும் மேற்பட்ட பதில்கள் வரக்கூடும். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள், தள்ளுபடி விற்பனை செய்யும் ஃபேஷன் அவுட்லெட்கள்... இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுமார் 5,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி ஜல்லிக்கட்டுக்காகவும் தமிழக விவசாயிகளின் வாழ்வுக்காகவும் சென்னை மெரினா கடற்கரையில் பேரணி நடத்தியிருக்கிறார்கள். இன்னும் தீவிரமான சிலர் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.

ஏ.சி. குளிரில் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை செய்பவர்களே இவர்களில் பெரும்பான்மையினர். ஜல்லிக்கட்டோடு இவர்களுக்கு நேரடித் தொடர்பு ஏதும் இல்லை. குறைந்தபட்சம் அதைப் பார்த்தவர்கள்கூட குறைவாகவே இருக்கக்கூடும். ‘தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்’ என்ற ஒற்றை விஷயம்தான் அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக வீதிக்கு வரக் காரணம்.

இவர்களில் பலரும் விவசாயிகளின் வாரிசுகள் கிடையாது. தங்கள் உணவுத்தட்டில் வந்துவிழும் உணவை உருவாக்கிக் கொடுத்தவர்கள் என்ற ஒற்றைக் காரணம் தவிர, விவசாயிகளோடு இவர்களுக்கு நேரடித் தொடர்பு இல்லை. ஆனாலும் உதிரம் கொதிக்க வீதிக்கு வந்திருக்கிறார்கள்.

ஒரு சின்ன ஆர்ப்பாட்டத்துக்கு நூறு பேரைத் திரட்டுவதற்குக்கூட பெரிய கட்சிகளே மூச்சுத்திணறிப் போகின்றன. அதற்கான ‘பின்னணிச் செலவுகள்’ என்ன என்பது இப்போது எல்லோரும் அறிந்ததே! வந்து போவதற்கான செலவும் அன்றைய பொழுதுக்கான எல்லா செலவுகளும் செய்தால்தான் ஆட்கள் வரும் அளவுக்குப் பல கட்சிகளும் ‘கூலித் தொண்டர்களை’யே வைத்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், எந்தத் தலைவரும் அறைகூவல் விடுக்காமல் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் கூடியது பல அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சி தந்திருக்கக்கூடும். ‘கேர் அண்டு வெல்ஃபேர்’, ‘தென்னிந்திய மாணவர் இயக்கம்’, ‘மக்கள் பாதை’ என அதிகம் வெளியில் தெரியாத சில அமைப்புகள் மூலம் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு இவர்கள் கூடியிருக்கிறார்கள்.

‘சோஷியல் மீடியாக்கள் மூலம் புரட்சி செய்ய முடியுமா?’ என யாரேனும் கிண்டல் செய்யலாம். டுனீஷியா நாட்டில் ஆரம்பித்து எகிப்து, லிபியா என பரவிய ‘அரபு வசந்தம்’ எனும் போராட்டத்துக்கு விதை போட்டது சமூக வலைதளங்களில்தான். பிற்காலத்தில் அந்த எழுச்சி திசை மாறிப்போனது வேறு விஷயம்.

ஆனால், இங்கே இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை யாரேனும் தலைவர்கள் வந்து `ஹைஜாக்’ செய்துகொள்ள அனுமதிக்கவில்லை. 

இந்தப் போராட்டத்தின் மூலம் இந்த இளைஞர்கள் சொல்லியிருக்கும் செய்தி நுட்பமானது. எல்லோரும் நினைப்பது போல ‘இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் என்றால் வெறுப்பு’ என்பது உண்மை இல்லை. அவர்களுக்கு அரசியல்வாதிகள் மீதுதான் வெறுப்பு! தங்கள் தலைவர்கள் நேர்மையாக இல்லை என்ற அவலத்தைக்கூட அவர்கள் பொறுத்துக்கொள்கிறார்கள். தங்கள் தலைவர்கள் நிர்வாகத் திறமையோடு இல்லை என்ற உண்மையைக்கூட அவர்கள் சகித்துக்கொள்கிறார்கள். ஆனால் தங்களின் பண்பாடு மற்றும் வாழ்வுரிமை சார்ந்த விஷயங்களிலாவது அவர்கள் கொஞ்சம் அர்ப்பணிப்போடு நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அது நடக்காதபோதுதான் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

ஆளும் கட்சியின் கோரிக்கைகளும் எதிர்க் கட்சிகளின் போராட்டங்களும் வெறும் சடங்குகளாக மாறிவருவதை அவர்கள் ஒருவித இயலாமையோடு வேடிக்கை பார்க்கிறார்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தடைபட்டு இருப்பது, வறட்சி காரணமாக விவசாயிகள் பரிதவிப்பது என எல்லா விஷயங்களையும் சம்பிரதாயமாக கட்சிகள் அணுகுவது அவர்களைக் கோபம்கொள்ளச் செய்கிறது. ஐ.நா-வில் ஏதாவது தீர்மானம் வந்தால் ஈழப் பிரச்னையும், ஜூன் மாதம் வந்தால் காவிரிப் பிரச்னையும், ஜனவரி மாதம் வந்தால் ஜல்லிக்கட்டு பிரச்னையும் பல அரசியல் கட்சிகளின் போராட்ட டைம் டேபிளில் தவறாமல் இடம் பிடிக்கின்றன. மற்ற நாட்களில் இவை அவர்களின் கவனத்தைக் கவர்வதே இல்லை.

ஒரு போராட்டம் என்பது நீண்ட நெடிய பயணமாக இருக்கலாம்; அதில் பல சமயங்களில் வெற்றி கிடைக்காமலே போகலாம். ஆனால், போராட்டத்தின் ஆரம்பப் புள்ளியோடு தங்கள் தலைவர்கள் திரும்பி வந்துவிடுவது இளைஞர்களைக் கோபத்தில் ஆழ்த்துகிறது. இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே இன்ஸ்டன்ட்டாக கிடைக்கிறது. இன்ஸ்டன்ட் உணவு, இன்ஸ்டன்ட் போட்டோ... இப்படி தீர்ப்புகளும் தீர்வுகளும்கூட இன்ஸ்டன்ட்டாக கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதனால்தான் உணர்ச்சிகரமாகப் பேசும் பல தலைவர்களிடம் போய் ஏமாறவும் செய்கிறார்கள். கடைசியில் விரக்தியாகி ஓட்டு போடாமல் விட்டுவிடுகிறார்கள்.

‘இளைய தலைமுறையைக் கவர்வது எப்படி?’ என தமிழகக் கட்சிகள் தவியாகத் தவிக்கின்றன. ஜல்லிக்கட்டுக்காகவும் தமிழக விவசாயிகளுக்காகவும் வீதிக்கு வந்த இந்த இளைஞர்கள், அவர்களுக்குப் பாடம் எடுத்திருக்கிறார்கள். ‘நம் தமிழ் மண்ணின் ஆதாரப் பிரச்னைகளைக் கவனியுங்கள். அவற்றைத் தீர்ப்பதற்காக அக்கறையோடு முயற்சி எடுங்கள். உங்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்!’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.