News
Loading...

ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்யக் கூடாது: அன்புமணி

ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்யக் கூடாது: அன்புமணி

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை ரத்துச் எய்யக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சர்க்கரைக்கான மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் வெளியாகவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் எழுதியுள்ள கடிதத்தில், குறைந்தபட்சம் பரம ஏழைகளுக்கு அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சர்க்கரைக்காவது மானியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது நியாயவிலைக்கடை சர்க்கரைக்கான மானியம் ரத்து செய்யப்படுவது உறுதியாகிவிட்டதாகத் தோன்றுகிறது. எந்த தர்க்கத்தின் அடிப்படையில், எந்த நியாயத்தின் அடிப்படையில் இப்படி ஒரு முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்கிறது என்பது தெரியவில்லை.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, தேவையற்ற மானியங்கள் ஒழிக்கப்பட வேண்டியது எவ்வளவுக்கு அவசியமோ, அந்தளவுக்கு தேவையான மானியங்கள் தொடர வேண்டியதும் அவசியமாகும். இந்தியாவில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர் வறுமையிலும், 46 விழுக்காட்டினர் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உணவு மானியங்கள் தொடர வேண்டியது அவசியம் என்பது அனைத்து பொருளாதார வல்லுனர்களும் ஒப்புக் கொண்ட விஷயமாகும். அவ்வாறு இருக்கும் போது நியாயவிலைக்கடை சர்க்கரைக்கு வழங்கப் படும் மானியத்தை நிறுத்தும் முடிவு எத்தகைய பொருளாதார தத்துவத்தை சேர்ந்தது எனப் புரியவில்லை.

பொருளாதார தாராளமயமாக்கலாலும், மேலைநாட்டு கலாச்சாரத்தின் ஊடுருவல் காரணமாகவும் ஜீனி எனப்படும் வெள்ளை சர்க்கரை அனைத்து குடும்பங்களின் சமையலறையிலும் தவிர்க்க முடியாததாகி விட்டது. நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை விட இதன் விலை குறைவாக இருப்பதும் இதற்கு காரணமாகும். மக்களின் நலவாழ்வை கருத்தில் கொண்டு சர்க்கரையின் பயன்பாட்டை குறைக்கும் நோக்குடன் இப்படி ஒரு முடிவு எடுத்து, அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை மலிவு விலையில் வழங்க மத்திய அரசு முடிவு எடுத்திருக்குமானால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்க முடிவாக இருந்திருக்கும்.

ஆனால், மத்திய அரசின் முடிவு முழுக்க முழுக்க பொருளாதார நோக்கம் கொண்டதாகும். இப்போது நியாயவிலைக்கடை சர்க்கரைக்கு கிலோவுக்கு ரூ.18.50 மானியம் வழங்கப் படுகிறது. இந்த மானியம் நிறுத்தப்பட்டால் நியாயவிலைக்கடை சர்க்கரை விலை கிலோ ரூ.32 ஆக உயரும். இந்த விலை உயர்வை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் நிச்சயமாக சமாளிக்க முடியாது.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற நாளில் இருந்தே பொது வினியோகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது வினியோகத் திட்டத்தின்கீழ் உணவு தானியங்களை வழங்குவதற்கு பதிலாக நேரடி பயன் மாற்றத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற சாந்தகுமார் குழு பரிந்துரையை செயல்படுத்த முனைந்தது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அனைவரும் உணவு மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் உணவு தானியம் வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி சாதித்தது என உணவுப் பாதுகாப்புக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் நீள்கின்றன.

இந்தியாவில் பெரு நிறுவனங்களுக்கு 2015ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சலுகைகளின் மதிப்பு மட்டும் ரூ.5.20 லட்சம் கோடி ஆகும். கடந்த 2013 முதல் 2015 வரையிலான காலத்தில் பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.1.14 லட்சம் கோடி கடனை 29 பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. விரைவில் மேலும் ரூ. 3.60 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படவிருக்கிறது.

பெருநிறுவனங்கள் விஷயத்தில் இவ்வளவு தாராளம் காட்டும் மத்திய அரசு, ரூ.4500 கோடி மிச்சப்படுத்துவதற்காக சர்க்கரை மானியத்தை ரத்து செய்யத் துடிப்பது சரியல்ல. எனவே, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கான மானியம் இப்போதுள்ளவாறே தொடரும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.