News
Loading...

ஜல்லிக்கட்டு தருமே நல்ல பால்! - காளையுடன் ஓர் உரையாடல்

ஜல்லிக்கட்டு தருமே நல்ல பால்! - காளையுடன் ஓர் உரையாடல்

‘‘ஏ.டி.எம் வரிசையில் நிக்கறதுக்காக கிளம்புற அவசரத்துல இருக்கீங்களா? ஒரு மூணு நிமிஷம் ஒதுக்க முடியுமா... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்! உங்க நேரத்தை எல்லாம் வீணடிக்க மாட்டேன். இது கொஞ்சம் முக்கியமான விஷயம். இந்த விஷயத்துல உங்களோட ஆரோக்கியமும் - குறிப்பா, உங்க குழந்தைகளோட ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டிருக்கு’. 

நேத்து ஒரு ஜல்லிக்கட்டு காளையைச் சந்திச்சேன். அதுகூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன். அது என்கிட்ட சில விஷயங்களைப் பகிர்ந்துக்கிச்சு. அதைத்தான் இப்ப நான் உங்ககிட்ட சொல்லப்போறேன். ‘என்ன... மாடு பேசுச்சா? அது, உங்களுக்குப் புரிஞ்சிச்சா?’ன்னு கேள்வி கேட்கிறீங்களா? உங்களைச் சுத்தி என்ன மாதிரியான அரசியல் நடந்துக்கிட்டு இருக்கு... யாரு உங்களை ஆட்சி செய்யுறான்னு எதையுமே நீங்க கேள்வி கேட்காதபோது, இதை மட்டும் ஏன் என்கிட்ட கேட்கிறீங்க? ஆமா, மாடு என்கிட்ட பேசினது! அதைச் சந்தேகப்படாம அது என்ன சொல்லுச்சுன்னு மட்டும் கேளுங்க. அது சொல்லியது இதுதான்...

‘பொதுவா மனுஷங்க நீங்க எங்க பக்கத்துல நின்னு பேசும்போது சில விஷயங்கள் என் காதுல விழும். அதுல முக்கியமான ஒரு வார்த்தை... ‘மனிதத்தன்மை’ங்கறது. அந்த வார்த்தைக்கு நீங்க எப்படிப் பொருள் கொள்றீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா, நாங்க அந்த வார்த்தையை ஈவு இரக்கமற்ற தன்மை என்ற அளவுலதான் புரிஞ்சு இருக்கோம். ஆமாம், எங்களைப் பொறுத்தவரை மனுஷங்க ரொம்ப இரக்கமற்றவங்க’ என காளை சொன்னதும், எனக்குப் பகீர்னு ஆயிடுச்சு.

‘ஏன் இது மாதிரிப் பேசுறே?’ன்னு கேட்டேன். அது கோபமா முகத்தைத் திருப்பிக்கிச்சு. பக்கத்துல இருந்த பசு, எனக்கு விளக்கம் சொல்லச் தொடங்குச்சு.

‘புணர்தல்ங்கிறது இயற்கையின் பொதுவிதி. அந்த விதியால்தான் இந்த உலகம் இயங்கிக்கிட்டு இருக்கு. உயிரினங்கள் பெருகுது, வம்சம் தழைக்குது. ஆனா, நீங்க ஏன் அந்த விதியை மட்டும் எங்களுக்கு மறுக்குறீங்க? முன்னாடியெல்லாம் நாங்க மந்தைகள்ல இயல்பா காளைகளோட புணர்வோம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு காளைங்களோட எண்ணிக்கை குறைஞ்சதால, எங்களை ஊர்ல இருக்குற பொலி காளைகிட்ட அழைச்சிட்டுப் போவீங்க. ஆனா, அதுக்கு இப்ப அரசு தடை விதிச்சிருச்சு. 

இப்பவெல்லாம் நீங்க கால்நடை மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போறீங்க... ஏதோ மருந்தை செலுத்துறீங்க. புணர்ச்சி குறித்து உங்க அறிவியல் என்ன சொல்லுதுன்னு எங்களுக்குத் தெரியாது. ஆனா, எங்களைப் பொறுத்தவரை ‘புணர்ச்சி’ங்கிறது மருந்து சாப்பிடுற விஷயம் இல்லை. அது, தியானத்தின் உச்சநிலை. ஆரோக்கியத்தின் ஊக்கி. இதையெல்லாம் நீங்க புரிஞ்சிக்காம... எங்கப் புணர்ச்சியை ஏதோ ஒரு வியாபாரச் செயல்பாடா மட்டும் பார்க்குறீங்க! அதனாலதான், அந்தக் காளை உங்களைப் பார்த்து அப்படிச் சொல்லிச்சு’ என்றது.

இதைக் கேட்டு நான் வெட்கித் தலைகுனிஞ்சு நின்னபோது, காளை அருகில் வந்து பேச்சைத் தொடங்குச்சு.

‘கவலைப்படாதீங்க! நான் எல்லாரையும் தப்பா சொல்லலை. தமிழர்களாகிய உங்களை எங்க இனத்துக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க எப்படியெல்லாம் மாடுகளைக் கவனிச்சுக்குவீங்க... எவ்வளவு அன்பா நடந்துக்குவீங்கன்னு எங்களோட மூதாதையர்கள் சொல்லி இருக்காங்க. ‘இந்த உலகத்துலேயே நமக்காக விழா எடுப்பவங்க தமிழர்கள் மட்டும்தான்! மாடுகளை தங்கள் குடும்பத்துல ஒருவரா நினைப்பாங்க... அவங்க சோறில்லாம பட்டினி கிடந்தாலும் நமக்கு உணவு வைக்கத் தவற மாட்டாங்க’ இப்படி உங்களைப் பத்தி நிறையச் சொல்லி இருக்காங்க. ஆனா, நீங்களும் மத்தவங்க மாதிரி கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர்றீங்களோன்னு ஒரு கோபத்துலதான் நான் அப்படிப் பேசிட்டேன். மன்னிச்சுக்கங்க’ என்று ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தது.

‘முன்னாடியெல்லாம் நாங்க வீதியில நடந்துப் போறதே ஒரு ஊர்வலம் மாதிரி இருக்கும். காலையில கூட்டமா மேய்ச்சலுக்குப் போயிட்டு மாலையில வீடு திரும்புவோம். இப்பவெல்லாம் நாங்க காணுற காட்சி எங்க ரத்தத்தை உறைய செய்யுறதா இருக்கு. ஆமா... கூட்டம் கூட்டமா மாடுகளை லாரியில நெருக்கியடிச்சு ஏத்தி எங்கேயோ கூட்டிப் போறீங்க. எங்களை எல்லாம் அடிமாடா கேரளாவுக்கு அழைச்சுட்டுப் போறீங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சிச்சு. உயிரா எங்களை நேசிச்ச ஒரு இனம், ஒரே தலைமுறையில அப்படியே மாறி எங்க உயிரை ஏன் எடுக்குது? யோசிச்சப்பதான் எங்களுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு. ஆமாம்... நீங்க வருஷா வருஷம் நடத்துற ‘ஏறு தழுவுதல்’ நிகழ்ச்சியை இப்பவெல்லாம் ஏன் நடத்துறது இல்லை?’

‘அதுக்குப் பின்னால நிறைய சட்டப் பிரச்னைகள், எல்லாம் இருக்கு. உங்க நன்மைக்காகத்தான் இதைத் தடை செய்ததா கோர்ட்டே சொல்லியிருக்கே!’ என்றேன்.

‘ஆனா ஏறு தழுவுதல் உங்கள் ஆரோக்கியம் சம்பந்தப் பட்டது. இந்த ‘ஏறு தழுவுதல்’ ஒண்ணும் சம்பிரதாய நிகழ்வு இல்லை. அது எங்களுக்கும், உங்களுக்கும் உள்ள நட்பை விளக்கும் பண்டிகை. அது, ஒரு கொண்டாட்டம். சிந்து சமவெளி நாகரிகத்துலேயும் ‘ஏறு தழுவுதல்’ நிகழ்வு இருந்ததா, எங்க தாத்தா சொல்லியிருக்காரு. ஆனா, இப்பத்தான் நீங்க உழவு, ஆரோக்கியம்னு எல்லாத்தையும் சிதைச்சு வெச்சுருக்கீங்களே! உண்மையில, நீங்க உங்க ஆரோக்கியத்தை மீட்க விரும்புறதும், ‘ஏறு தழுவுதல்’ நிகழ்ச்சியை நடத்துறதும் ஒண்ணோட ஒண்ணு சம்பந்தப்பட்ட விஷயம்’ என்றது காளை.

‘எப்படி?’ - புரியாமல் நான் கேட்டேன்.

‘பால் தர்றதுக்கு பசு மாடு மட்டுமே போதும்னு நீங்க நினைக்கறீங்க. இப்ப ஏர் உழவும், மாட்டு வண்டிகளும் அரிதா போய்க்கொண்டிருக்கு. பெண் குழந்தை பிறந்தா சிசுக்கொலை பண்ற நீங்க, காளைக் கன்றுகளை கறி வெட்டுக்கு அனுப்பிடுறீங்க. ‘ஏறு தழுவுதல்’, ‘மஞ்சு விரட்டு’, ‘மாட்டு வேடிக்கை’ போன்ற விழாக்கள் மட்டும்தான் எங்களை வளர்ப்பதற்கான தேவைகளாக உள்ளன. இவை எல்லாம் இப்ப தடுக்கப்பட்ட நிலையில, எங்களை வளர்ப்பது ‘தேவையற்ற செயல்’ ஆகிடுச்சு. இந்த விழாக்கள் நடந்தா... எங்களை அதிக அளவுல வளர்ப்பீங்க. நாங்களும், அங்க உள்ள பசுக்களோடு இயல்பா புணர்வோம். எங்க இனம் பெருகும். உங்களுக்கும் உங்க பிள்ளைங்களுக்கும் ஆரோக்கியமான பால் கிடைக்கும். ‘பால் என்பது பாக்கெட்டில் அடைத்து ஜில்லென வர்றது, அது பசுவின் மடியிலிருந்து சுரப்பது இல்லை’ன்னு உங்கள் குழந்தைங்க அறிவியலைத் தவறா புரிஞ்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு உண்மையை உணர்த்துங்க. 

நீங்க குடிக்கிற பாக்கெட் பால்ல என்னன்னமோ கலந்து இருக்காங்க. ஒரு தடவை பாக்கெட் பாலை எங்க பக்கத்துல எடுத்துட்டு வந்தபோது, அதுல யூரியா வாசனையெல்லாம் அடிச்சிச்சு. அந்தப் பாலைத்தான் நீங்களும் உங்க பிள்ளைங்களும் குடிக்கிறீங்க. உங்க ஆரோக்கியத்து மேலேயும், உங்க பிள்ளைங்களோட ஆரோக்கியத்து மேலேயும் உங்களுக்கு அக்கறை இருந்தா... ‘ஏறு தழுவுதல்’ நிகழ்ச்சியை நடத்தியே ஆகணும். இதைத்தான் நாங்களும் விரும்புறோம்னு, இதை எதிர்ப்பவர்கள்கிட்டே சொல்லிடுங்க’ என்று சொல்லி முடித்து வெடித்த நிலத்தில் முளைத்திருந்த புற்களைப் பசியில் மேயத் தொடங்கியது.

காளை என்னிடம் சொன்னதை, நான் உங்ககிட்ட சொல்லிட்டேன். இனி் டீ சாப்பிடுறப்ப, அதுல கொஞ்சமே கொஞ்சமா உள்ள பாலுக்கும், ஏறு தழுவுதலுக்கும் உள்ள தொடர்பை நினைச்சுப் பார்த்துக்கங்க!’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.